பாதையில்லாப் பயணம்

பாதையில்லாப் பயணம்

பாதையில்லாப் பயணம்

மானிட வாழ்க்கை என்பது ஒருவிதமான பயணம் ஆகும், பிறப்பிலிருந்து தனக்குக் கிடைத்த அறிவின் அடிப்படையில் மகிழ்விற்காகவும் நிம்மதிக்காகவும் ஒரு தேடலைச் சுமந்து கொண்டு ஒரு திசையை நோக்கி நகர்வது இந்தப்பயணம் ஆகும். ஆனால் பொதுவாக மானிடவாழ்வில் உயிர் நம் உடலைவிட்டு பிரிந்த பின்பு நாம் ஆடி அடங்கிவிட்டோம் அத்தோடு பயணத்தை முடித்துவிட்டோம் என்று எண்ணுகிறார்கள். உடல் வாழ்ந்த இடத்தை விட்டு புதையும் இடத்திற்கு நகர்வதை இறுதி யாத்திரை என்கிறோம். ஆனால் இயேசுவின் வார்த்தை இன்னொரு பயணத்தையும் சொல்கிறது. அவரோடு கல்வாரியில் இருந்த கள்வனை நோக்கி நீ இன்று என்னோடு விண்ணகத்தில் இருப்பாய் என்கிறார்.

நான் விண்ணகம் செல்கிறேன். அங்கு உங்களுக்காக ஒரு இடம் தயாரிக்கப் போகிறேன். அதற்கு நேரான பாதையில் உங்களது நேர்மறையான சிந்தனையில் அந்த இடத்தைத்தக்க வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். எனவே இறப்பிற்குப் பின்பும் விண்ணத்தை நோக்கி ஒரு பயணம் இருக்கிறது என்பதைத்தான் இயேசுவின் உயிர்ப்பும் விண்ணகம் சென்றதும் அந்தப் புதிய பயணத்தை நமக்குக் காட்டியது அவர் அதற்காகக் கடந்து வந்த பாதை கல்வாரிப்பாதை அது நமக்கு ஒரு புதிய பாதையையும் பயணிக்கச் சொன்னது.

எல்லோரும் விண்ணகம் செல்ல ஆசைப்படுகிறோம். காரணம் அஙகு மகிழ்ச்சியும், நிம்மதியும் இருப்பதாக அனைவரும் சொல்வதால் அதனை அடைந்து விடத்துடிக்கிறோம். ஆனால் அதனை அடைய இயேசு காட்டிய பாதையை மறந்து பயணத்தையும் துறந்து பாதியிலேயே படுத்து உறங்கும் அவல நிலைக்கு இன்று ஆளாக்கப்பட்டிருக்கிறோம். காரணம் நாம் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டுவிட்டோம்.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை மீண்டும் ஒருமுறை மீள் ஆய்வு செய்துபார்த்தால் நமக்கு ஒரு உண்மை விளங்கும். எந்த ஊருக்கு நாம் பயணித்தாலும் குறுக்குப்பாதையைத் தான் முதலில் தேடுகிறோம். பள்ளியில் சேர்வதற்குக்கூட தரத்தைவிட பணத்தைக் கொடுத்து இடத்தை தக்க வைக்கிறோம். தேர்ச்சிபெற, உயர்கல்விபெற, வேலையைப்பெற அரசியலுக்குவர, தேர்தலில் வெற்றியடைய என எந்த நிலையிலும் நேர்மையான பாதை இருப்பது எல்லோருக்கும் தெரிந்தாலும் குறுக்குப்பாதையில் அதனை அடைவதே கொள்கையாகக் கொண்டிருக்கிறோம்.

தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் பணக்காரர் ஆவதை இலட்சியமாக வைத்துக்கொண்டு இலஞ்சம் பெருவது. இலஞ்சம் பெற்றுக்கொண்டு கணக்கில் காட்டாத பணத்தை தான் மட்டுமே அனுபவிக்கின்ற சுயநலத்தோடு வாழ்வது, இறைவன் தந்த இயற்கைச் செல்வங்களை விற்பது, அடுத்தவர் சொத்துக்களை அதிகாரத்தைக்கொண்டு அபகரிப்பது இப்படி எல்லா வகையிலுமே குறுக்கு வழியும், குறுக்குப்புத்தியும்தானே. சிலநேரங்களில் நமது தவறுகளுக்கு இறைவன் மனிதர்கள் மூலமாகத் தண்டனை கொடுத்தாலும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள எத்தனை சப்பைக்கட்டுகள், சரிகட்டுகள், சமாளித்தால்; இப்படித்தானே நம் பயணங்கள் இருக்கிறது.

நமக்குத்தெரிந்த ஒரு கோயிலில் பக்தனாக நின்று தெய்வத்தைச் சந்திக்க பத்து ரூபாய் அதே தெய்வத்தை 100 ரூபாய் கொடுத்து விட்டால் உடனே தரிசித்து விட்டு வெளியே வந்துவிடலாம் கடவுளிடமே குறுக்கு வழியா? பல நேரங்களில் நாம் வரிசையில் நிற்க, காத்துக்கிடக்க, நமக்குரிய நேரம்வரை பொறுமையாய் இருக்க நாம் தயாராக இல்லை. அதனை உடனே அடைவதற்கு அனைத்துவகையான குறுக்கு வழிகளையும் பின்பற்றுகிறோம். மொத்தத்தில் மனச்சாட்சியை விற்றுவிட்டு மணிமகுடம் சூட்டிக்கொள்கிறோம். மனித நேயத்தைத் தொலைத்துவிட்டு சுகபோகங்களைச் சுரண்டிக்கொள்கிறோம்.

எவன் எப்படிப் போனால் என்ன? இனி வரும் தலைமுறை என்ன ஆனால் என்ன? என்று எண்ணிக்கொண்டுதானே ஆற்றுமணலை அள்ளிவித்தோம், காடுகளை அளித்தோம், விளைநிலங்கள் தொலைந்து வீடுகள் முளைத்தன. விளைவு வாகனங்கள் வாங்கினோம். வேகமாகப் போனோம், இதனால் முட்டிச்செத்தோம், மோதிச்செத்தோம், விழுந்து செத்தோம் என்ன கொடுமை. இது காலத்தை மிச்சப்படுத்துகிறோம், எல்லாத்துறையிலும் முன்னேறுகிறோம் என்று சொல்லிக்கொண்டு எல்லா நிலையிலும் மூச்சுத் திணறி நிற்கிறோம்.

அடுத்த தலைமுறைக்கு அன்பைக்கொடுத்தோமா? அறுசுவை உணவைக்கொடுத்தோமா? பக்கத்தில் இருந்தோமா? பாசத்தைப் பகிர்ந்தோமா? இல்லையே கடையில் வாங்கி குழந்தைகளை வளர்ப்பதனால் கழுதைப்பிரியாணி, காக்கைப் பிரியாணி, பூனைக்கறி, நோய் வந்த செத்த ஆடுமாடுகளின் இறைச்சிகளைக் கொடுத்து கொடுத்து ஒரு நொந்துபோன நோய்களால் நைந்துபோன ஒரு சமூதாயத்தை வசதி வாய்ப்புகளோடு உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்த அரசு நிலையானது அல்ல, இறையரசு மட்டுமே நிலையானது பிறகு எதற்கு இந்த ஆட்டமும் ஓட்டமும். கடவுளே சொன்னார் இறைமகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை அப்படியென்றால் உங்களுக்கு இங்குயார் உத்திரவாதம் கொடுத்தது நிர்வாணமாக பூமியைவிட்டுப் போகப்போகும் போது நீங்கள் ஏன் ஆடைகளுக்கு அடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆறடி நிலத்திற்குள்ளோ, ஒருபிடி சாம்பலுக்குள்ளோ முடிந்து போகிற வாழ்க்கைக்கு ஏன் இந்த இறுமாப்பு?

கடவுளின் கல்வாரிப்பயணம் என்ன சொல்கிறது ஒட்டியிருந்த உறவுகள் மட்டுமல்ல கட்டியிருந்த துணிகளும் பறிக்கப்படுகிற உலகத்தில் எதற்கு இத்தனை அபகரிப்புகள் அடிதடிகள் கொஞ்சம் சிந்தித்துப்பார்த்தால் அத்தனையும் நமக்குப்புரியும்.

எனவே நமது பாதையைத் தெளிவாக்குவோம். பயணத்தைச் சுகமாக்குவோம் கல்வாரிப்பாதையும் கனிவாய் ஏற்றுக்கொள்வோம். அங்கு களைத்தவர் முகம்; துடைப்போம். சுமப்பவர்களுக்குக் கரம் கொடுப்போம். விழுந்தவர்களைத் தூக்கிவிடுவோம். வாழ்வை இழந்தவருக்கு நம்பிக்கை கொடுப்போம் பிறர் சோகத்திற்காய் நமது கண்களும் இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தட்டும். அய்யோ கோயிலுக்குப் போக வேண்டும். சிலுவைப் பாதை செய்யவேண்டும் என்று அலறி அடித்துக்கொண்டு ஓடாதீர்கள் ஏனென்றால் பாதையிலே பல இயேசுக்கள் தடுமாறிக் கொண்டு வருகிறார்கள் அவர்கள் பாரத்தை இறக்குங்கள் நோன்பு இருப்பது பசியை உணர, பசிக்கொடுமையைத்தெரிய, ஆகவே பசியோடு இருப்பவர்களுக்கு பசியைப் போக்குவது நோன்பே தவிர நீங்கள் பசியோடு இருப்பது மட்டும் நோன்பு என்று நினைத்தால் அது பகல்வேசம். ஆகவே உங்கள் பார்வையைத் தெளிவாக்குங்கள் உங்கள் பயணத்தை சுகமாக்கும். உங்கள் நேரான பயணமும் நேர்மையானச் சிந்தனைகளும் கடவுளுக்கே இட்டுச்செல்லும் கடவுளையும் தொட்டுச்செல்லும் வாருங்கள் சுகமாய்ப் பயணிப்போம்.