ஒரு புதுப்பிக்கும் கல்விக் கொள்கை வேண்டும்

புதிய கல்விக்கொள்கையை

புதிய கல்விக்கொள்கை

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து வாங்க போராடப்போவோம் என்ற கொள்கை எங்கும் கிளம்பிவிட்டது. இதனை விளக்கவும் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. இதில் புதிய கல்விக்கொள்கை என்ன? பழைய கல்விக்கொள்கை என்ன? என்பது தெரியாமலேயே விழிபிதுங்கிக் கொண்டிருக்கிற பெற்றோர்களும், பிள்ளைகளும் நடைமுறை வாழ்க்கையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனைப்பற்றி விவாதிக்காத தொலைக்காட்சிகளோ அரசியல் தலைவர்களோ, இல்லவே இல்லை. இதில் மத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் முழங்குகிற வார்த்தையில் அதிகமாக கட்சியையும், மதத்தையும் காப்பாற்றுவது போலவே இருக்கிறது.

இதனைவிட்டு வெளியேவந்து ஒருநிலையோடு சில கேள்விகளைக் கேட்டுப்பார்க்கவும்தான் வேண்டும். இன்றைக்குத் தேவையான கல்விக்கொள்கை எது? இன்றைய கல்வி என்பது எதிர்காலத்தின் வயிற்றுப்பிழைப்பிற்கும், வாழ்க்கை வசதிக்கும் மட்டும்தானா?

இக்கல்விக்கொள்கை, தமிழ்வழிக்கல்விக்கு மட்டும்தானா? ஆங்கிலவழிக் கல்விக்குப் பொருந்தாது என்றால் அவர்கள் அந்நிய நாட்டுப் பிரதிநிதிகளா? ஆங்கிலப் பள்ளிகளை ஆங்காங்கு ஆரம்பித்து வைத்து ரவுடிகளிடம் மாமூல் வாங்கும் காவல்துறையைப்போல் பணத்தைப்பெற்றுகொண்டு அனுமதி வழங்கிக்கொண்டிருக்கின்ற அரசு எந்தவகையில் கல்விநிலையத்தையும், கல்வியாளர்களையும் உருவாக்கப்போகிறது.

இன்று அதிகமாகக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவாகும்போது அதில் பாதிக்குமேல் படித்தவர்கள் ஈடுபட்டுள்ளார்களே! இதுதான் நமது கல்விக்கூடங்களா? கல்விக்கொள்கைகளா? தனது நிறுவனத்தில் மதிப்பெண் அதிமகாக எடுத்த மாணவ மாணவியரைக் கசக்கிப் பிழிந்து முதல் இடத்தைப்பிடிக்க வைத்து பெருமைத் தேடிக்கொள்ளும் கல்வி நிறுவனங்கள் அதே மாணவர்கள் பின்பு வாழ்க்கையின் நடத்தைகள் தெரியாமல் வழிமாறி குற்றச்செயல்களில் ஈடுபடும்போது அந்த கல்விநிவனங்கள் பொறுப்பு ஏற்குமா? இல்லையென்றால் இன்று மாய உலகைக்காட்டி இளைஞர்களின் மூளையையும், உடலுருப்பையும் சுரண்டும் ஐ.டி நிறுவனத்திற்கும்; இந்த நிறுவனத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?

சின்னக்குழந்தைகள் தப்புச்செய்தால் அவர்களைக் கண்டித்தோ? சிறிது தண்டித்தோதான் நெறிப்படுத்த வேண்டும். ஆனால் அதட்டினாலே பெற்றோர்கள் வந்து மிரட்டுகிறார்களே! இத்தகைய மனிதர்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் மாண்பினைத்தேடுவது இருட்டுக்குள் நிழலைத் தேடுவதற்குச் சமமாகும்.
இதனைவிட வருந்தத்தக்க விசயம் என்னெவென்றால் குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு தனது கனவுகளை பிள்ளைகள் மூலமாக நிறைவேற்றத்துடிக்கும் பைத்தியக்காரத் தலைமுறைகளை வைத்துக்கொண்டு எந்த எதிர்காலத்தை எட்டிப்பிடிக்கப் போகிறோம்;.

செத்த உயிர்களைத்தான் ஆய்வகத்தில் அறுத்து ஆய்வு செய்வார்கள்;. ஆனால் அரசுதேர்வு எழுத இருக்கும் மாணவர்களை உயிரோடு ஒவ்வொன்றாக அறுப்பதுபோல் ஓய்வுநேரம் கிடையாது, ஓய்வுநாள் கிடையாது, உடலுழைப்பு கிடையாது, ஓடிவிளையாடுவது கிடையாது, சொந்தபந்தம் கிடையாது, பொழுதுபோக்கு கிடையாது, ஏன் இதையெல்லாம் நினைத்து அவனுக்கு அழுது தீர்க்ககூட நேரம் கிடையாது. பாதிநேரம் பள்ளிக்கூடம், மீதிநேரம் டியூசன் சென்டரும் பந்தாடிக்கொண்டிருக்கிறது. இதனை எந்தக் கல்விக்கொள்கை சீர் செய்யப்போகிறது.

உலகமே வியந்து நின்றகின்ற ஒரு மொழி தமிழ்மொழி ஆனால் அதனைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன் மட்டும் தன் குழந்தை தந்தையை டாடி என்றும் பாதர் என்றும் அம்மாவை மம்மி என்றும் மதர் என்றும் அழைக்க வேண்டுமென்றும் அடம்பிடிக்கிறான் இந்தக் கருமத்தை எங்கே போய் சொல்வது. பெண்களுக்கு கல்வி கொடுத்தால் வேலை வாய்ப்புக் கிடைத்தால் நாடுவளம்பெறும் என்றார்கள். இருபது வருடத்திற்குமுன் இருந்த நிலை இப்போது இல்லை. பெண்கள் கல்வியில் முன்னேற்றம் உள்ளது. ஆனால் வாழ்விலும் சமூக ஒழுகத்திலும் மிகவும் பின்னோக்கிப் போய்கொண்டிருக்கிறோமே? இதற்கு என்ன பதில்?

இன்று அரசு அதிகாரிகளும், அரசு அலுவலகங்களில் தானே அதிகமாக லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. இவர்களுக்கு நீதி நேர்மையை எந்தக் கல்விக்கொள்கையும் கற்றுத்தரவில்லையா? ஆசிரியர்கள் பணிக்கு செல்ல ஒரு தேர்வு வைத்தவுடன் பெரும்பான்மையானவர்கள் தேர்ச்சி அடையவில்லையே இவர்களை வைத்தா எதிர்கால இந்தியாவை உருவாக்கப்போகிறீர்கள்?

எந்த ஒரு கல்வி தனிமனித ஒழுகத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கிறதோ, உடலுழைப்பை வளர்த்து ஒலிம்பிக்கை கலக்குகிறதோ, நீதி நேர்மையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறதோ, சாதி மதத்தைக்கடந்து சமத்துவத்தை வளர்க்கிறதோ, வேலைக்காக இல்லாமல் வாழ்க்கைக்காக வகுப்பறை செயல்படுகிறதோ, அது கல்வி, பட்டாம்பூச்சிகளாக குழந்தைகளைப் பறக்கவிட்டு அவர்களாகவே வந்து அமரும் இடம் வகுப்பறையாக இருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் கல்விக்கொள்கை வருமா? அதற்காக அனைவரும் வரம்கேட்போம். தவம் இருப்போம், இது போராடிப் பெறவேண்டியதில்லை. நம்மையே புதுப்பித்துப பெறவேண்டியது. இணைந்து செய்வோமா!