சிற்பிகள் தானே, செதுக்க வேண்டும்!

ஜூன் – 1

ஜூன் ஆரம்பமாகிவிட்டது மீண்டும் பரபரப்பு, மீண்டும். படபடப்பு, பள்ளி திறக்கப்படுகிறது. ஒருமாதம் உற்சாகமாகத் திரிந்த உல்லாசப் பறவைகளை கூண்டுக்கிளிகளகக் கொண்டு வந்து சேர்க்கப்போகிறோம். மாணவர்கள் சேர்க்கை என்று மாண்புடன் உள்ளே நுழைந்தவர்களை அறிவாளிகள் முட்டாள்கள் என்று அடையாளம் காட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் பணிக்குத் திரும்புகிறார்கள். சிற்பிகள்தானே செதுக்க வேண்டும். கற்கள் தானே சிலைகளாவதில்லையே ஒருவருடம் செதுக்கியும் சிலைகளாகவில்லை என்றால் யார்குற்றம் இன்னும் செதுக்குங்கள் முட்டாள் என்று இந்த ஆண்டு யாரையும் முடிவு கட்டாதீர்கள்.

முட்டாள் என்றால் யார்? தன் பிறப்பின் அர்த்தங்களைத் தெரியாதவன் புரியாதவன் மட்டுமே! ஆனால் நாம் வாழும் சமூகத்தில் யாரை முட்டாள் என எண்ணுகிறோம். தன்னைச் சரியாகப் புரியாமல் உலகை அணுகாதவனும் உலகைச் சரியாகத் தெரியாமல் ஒதுங்கி இருப்பவனுமே ஆகும் இதனால் அவனை முட்டாள் என நாம் எண்ணிக்கொள்கிறோம்.

இன்றைய நாளை எண்ணிப்பாருங்கள் நம் சமூகம் என்ன மனநிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? வெப்பம் அதிகமாகி வாட்டி வதைக்கிறது என்றா? இல்லை தண்ணீர் தட்டுப்பாடு, விவசாய வீழ்ச்சி மின்சாரத் தட்டுப்பாடு, நோய்களின் தாக்கம், விலைவாசி ஏற்றம், அரசியல் நிலைப்பாடு இவற்றையெல்லாம் கடந்து ஒரு அழுத்தத்திற்குள் உலகம் உருண்டு கொண்டு இருக்கிறது அது என்ன?

ஒரு பெரிய விளையாட்டு அரங்கில் இறுதி ஆட்டத்தில் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் ஒரு சிறந்த விளையாட்டு வீரன் விளையாடும்போது ஒரு கட்டத்தில் அவன் அவுட்டா, இல்லையா? என்று மூன்றாவது நடுவர் தீர்ப்புக்கு விட்டுவிட்டு அரங்கமே அந்த பெரிய திரையைப் பயத்தோடும் நடுக்கத்தோடும் பார்த்துக்கொண்டிருப்பது போல இன்று அரசுத்தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயத்தோடு காத்துக்கிடக்கிறது.

என்ன செயலைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த நினைவு திடீர் மின்னல் போல உள்ளத்தில் ஒரு வெட்டு வெட்டிவிட்டுத்தான் செல்கிறது. சிலருக்கு எப்படியாவது தேர்ச்சி பெறவேண்டும். சிலருக்கு கவுரமான மார்க்வேண்டும். சிலருக்கு முதல் மார்க் வாங்கவேண்டும். சிலருக்கு நினைத்த உயர்க்கல்வியைத் தொடர வேண்டும் என எத்தனையோ கனவுகளை அடைகாத்துக்கொண்டு வெப்பத்தில் வெந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க மற்றோரு புறமோ, ஆசிரியர்களும், பள்ளிகளும், தன்பள்ளி, தன் மாணவர்களும் முதலில் வரவேண்டுமே எனப் பதறுகிறார்கள். நாம் எல்லாம் எதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறோம் எல்லா ஓட்டங்களிலும் இறுதி முடிவு என்ன? மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றுவதுதானே! ஒரு மனிதனை உருவாக்க நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட படைப்பை ஒரு இயந்திரமாகவே இயக்கிக் கொண்டிருக்கிறோமே! சரிதானா? சுயமாய் சிந்திக்கும் திறனை வளர்க்க மறந்து சுற்றி உள்ளவைகளைத் திணித்து அவனைப்பற்றி அவன் சொல்லவிடாமல் அடுத்ததைச் சொல்லிச் சொல்லியே அவன் தொலைந்து போனானே! அதற்குத் தானே அரசாங்கம் நமக்குக் கொடுக்கிறது ஊதியம்!

அவன் சுயமாய் தன்னைப்பற்றி பிறரிடம் பேசினால், விசிலடித்தால், சிரித்தால், இ.பி.கோ எழுதப்படாத சட்டத்தால் தண்டிக்கப்படவேண்டும் என்ற மனநிலையை நாம் எங்கிருந்து கற்றோம். நாம் வந்தவுடன் மாணவர்கள் எல்லாம் மௌனமாகி விட்டால் அவர்கள் நம்மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறோமே! ஊமைகளை உருவாக்கவா நாம் உழைத்துக்கொண்டு இருக்கிறோம்? இதுதான் நம் கல்விமுறையா? இதைத்தான் நாம் கற்க ஓடிக்கொண்டிருக்க வேண்டுமா? அனைவரும் சற்று நின்று சிந்திக்க வேண்டிய இடம், சிந்திக்க வேண்டிய நேரம்.

ஆனால் எல்லோருக்கும் தெரிந்து இருந்தும் எதையும் மாற்ற முடியாமல் இப்படி கைகாலாகாத நிலையில் நாம் காலத்தை நகர்த்திக்கொண்டு இருக்கிறோமா? இதனை யார் மாற்றுவது? எப்போது மாற்றுவது? எப்படி மாற்றுவது? இதுதான் நமது விதியா? இல்லை ஏதாவது இருக்கிறது வேறுவழியா?

எப்போதும் எதையாவது படித்துக்கொண்டிருப்பவன் பிற்காலத்தில் ஒரு பெரிய படைப்பாளியாகவும், எழுத்தாளனாகவும் உருவாகுவான் இப்போது வகுப்பறையில் எதையாவது படிக்க விடுகிறார்களா?

எதையாவது சத்தமாக பேசிக்கொண்டு இருப்பவன் பேச்சில் தெளிவும், அழுத்தமும் பெற்று பெரிய பேச்சாளனாக உருவாகுவான் ஆனால் இப்போதைய வகுப்பறைச் சூழலில் எப்போதும் அல்ல எப்போதாவது பேச அனுமதிக்கின்றோமா?

இதையெல்லாம் பார்க்கும்போது கண்ணுக்குத்தெரியாத சவுக்கைகளை கையில் வைத்துக்கொண்டு காட்டில் திரிகின்ற சிங்கம், புலி, யானைகளை எல்லாம் பிடித்துக்கொண்டு வந்து ஒரு சர்க்கஸ் கூடத்தில் வைத்து நாம் சொல்கிறபடி ஆட்டிப்படைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சி;ப்படுத்துவது போல வகுப்பறையை சர்க்கஸ் கூடாரமாகவும், மாணவர்களை விலங்குகளாகவும் வைத்து பெற்றோர்களாகிய பார்வையாளர்களைத் திருப்திப்படுத்த வளைய வைத்து, நெளிய வைத்து, குனியவைத்து அதன் சுயத்தைத் தொலைத்துவிட்டு வாழத்தான் இந்த வகுப்பறைச் சூழல் வகுப்பெடுத்து உள்ளதா?

மதிப்பெண் எடுக்கின்ற இயந்திரமாய் மாணவர்களை உருவாக்குவதிலே மகிழ்ச்சி காண்கிறீர்களே அந்த மதிப்பெண் குறைந்துவிட்;டாலே உயிரை மாய்த்துக்கொள்ளும் மனநிலையை யார் கற்றுக் கொடுத்தது? அல்லது எதற்கோ பயந்து மறந்து விட்டோமா?

ஆனால் ஒன்றுமட்டும் உண்மை இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கு உள்ளத்தில் ஒரு உறுத்தல் இருந்த கொண்டுதான் இருக்கிறது. கற்றுக்கொடுக்க வேண்டியதை கற்றுக்கொடுக்கவில்லையே என்பதுதான். ஆனால் அரசு, பெற்றோர், சமூதாயம், பாடத்திட்டம் கல்விமுறை எல்லாம் ஆசிரியர்களின் கைகளைக் கட்;டிப்போட்டு விட்டது. அதனைக் கடந்து புதிய ஆசிரியர்களாய் புறப்படுவோம் புதிய சிலைகளை அல்ல சிற்பிகளை உருவாக்குவோம்.