COME DOWN – கம் டவுன்

வேகமாக ஓடிக்கொண்டிருக்கிற விஞ்ஞான உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் முதலாய் வரவேண்டும், முதல்வனாய் அமரவேண்டும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறான். அனைத்து மனிதர்களும் மற்ற அனைவரையும் விட பணம், பொருள், கல்வி, செல்வாக்கு, அதிகாரம் ஆகியவற்றின் ஏற்றமாக இருக்க வேண்டும். பலரும் நம்மை ஏறிட்டுப் பார்க்கவேண்டும் அதை எப்படியாவது அடையவேண்டும் எனத் துடித்துக்கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் ஏறிச்செல்வதில் பெருமையில்லை இறங்கி வருவதில்தானே பெருமையும், மகிமையும் இருக்கிறது. காற்றடித்தால் கரும்புகைக்கூட மேல எழுந்துதானே செல்கிறது. அதனால் என்ன பயன் கண்ணுக்கு எரிச்சல், மனதுக்கு எரிச்சல், பூமிக்குப் புகைச்சல், ஆனால் சூரியானல் நீராவி மேலெழும்பிச் செல்வதில் பெருமையில்லை. அது மீண்டும் மழையாக இறங்கி வரும்போதுதான் மண்ணுக்குப் பெருமை, மனிதனுக்கு இனிமை, இந்தப் பூமியே மழையை சாமியாகப் பார்க்கிறது. வணங்குகிறது.

இறைவன் என்பவன் இறங்கி வருபவன்தான். இரக்கப்படுபவன் என்று மானிடப் பரம்பரை எண்ணுவதால்தான் அவனுக்கு இறைவன் என்று பெயர்.

இந்த இரக்கம், காலவோட்டத்தில் மனிதன் சுயநலத்தால் காணாமல் போய்க்கொண்டு இருப்பதால் பூமி அதனைத் தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கிறது. இதனால்தான் இன்று திருச்சபை தொடங்கி தெருவீதிவரை இரக்கம் வேண்டும், இரக்கத்தின் ஆண்டாக இருக்கவேண்டும் என்று மனித மனங்களைப் புதுப்பிக்க எண்ணுகிறது.

ஆதிகால கற்கால மனிதர் காட்டுமிராண்டிகளாக வாழும்போது அடுத்தவர்களைப் பற்றியோ, சமூகம் என்ற சிந்தனையோ அவன் சிந்தையில்லை தன் தேவையை நிறைவேற்ற எதையும் அழிப்பான் எதிர்வருவதை ஒழிப்பான். இதனால் கலகமும், குழப்பமும், காட்டாற்று வெள்ளம் போல் வாழ்க்கையும் தாறுமாறாகத் தறிகெட்டு ஓடினான். பின்பு குழுக்களாக வாழ ஆரம்பித்தபோது குழுவாகச் சென்று குழுவைத்தாக்குவது. குழுத்தலைவனாக இருக்கக் கூட இருப்பவனைக் கொல்வது என பக்குவமற்ற பாசறையாகத்தான் இருந்தது மானிடத்தின் வளர்ச்சி.

இப்படிச்சென்ற மானிட வாழ்வில் அவ்வப்போது மகான்கள், மாமனிதர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக இந்த மானிடச் சமூகத்தைச் செதுக்கினார்கள். அதனால் பலர் சிதைந்தும் போனார்கள். வீழ்ந்தது அவர்களாக இருந்தாலும் வாழ்ந்தது இம்மானிடச் சமூகம்.

இந்த வரலாற்றில் மிக முக்கியப் பங்காற்றியவர் இயேசு கிறிஸ்து. இரக்கத்தை மையமாக வைத்தே தனது பயணத்தை நகர்த்தினார். இரக்கத்தின் எதிராக இருந்த அத்தனையையும் தகர்த்தெரிந்தார். அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து இறந்ததற்கான மகத்தான காரணமே அவரது இரக்கம்தான்.

இயேசு தொடர்ந்து போதித்துக்கொண்டு இருக்கும்போது அவரோடு இருக்கின்ற மக்களை நேரம் ஆகிவிட்டது. அனுப்பி விடுவோம் என்று சீடர்கள் சொன்போது இயேசு அவர்கள் மீது மனம் இரங்கினார் என்ற வார்த்தை வரும் அவர்களுக்கு நீங்களே உணவளியுங்கள் என்றார். பசியை உணர்ந்தார். பகிரச்சொன்னார்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை சட்டத்தின்படி சாவுக்குக் கையளித்து விட்டார்கள். ஆனால் இயேசுமட்டும் மனம் இரங்கினார். கையில் கல்லுடன் நிற்கும் முரட்டு மனிதர்களுடன் மோதிப்பார்க்கின்றார். சட்டத்தை உடைத்து இரக்கத்தை நிலைநாட்டுகிறார். அவர்கள் வைத்திருந்த கற்கள் இயேசுமீது திரும்ப எவ்வளவு நேரமாகும்? இருப்பினும் பிறர் பயத்தை உணர்கிறார் பாதுகாப்பாய் நிற்கிறார்.

இதிகாசத்தையும், இலக்கியங்களையும்; ஒருமுறை புரட்டிப்பாருங்கள். கொடிக்குக்கூட உயிர் இருக்கிறது எனறு தன் தேரையே தாரை வார்த்தானே பாரி, அவன் இன்னமும் நம்மோடு தானே இருக்கின்றான் மயிலுக்குப் போர்வை போர்த்தினானே பேகன் அவன் நமது பக்கத்தில் தானே இருக்கின்றான். தனக்குக்; கிடைத்த நெல்லிக்கனியை ஒளவைக் கிழவிக்குக் கொடுத்தானே அதியமான் அவன் இன்னும் நமக்கு அதிசயமாகத்தானே தெரிகிறான். போரில் வென்ற தர்மனைவிட கொடைகொடுத்த கர்ணனே இன்றும் நம் மனதில் கோலோச்சுகிறான்.

எனவே பரம்பரை பரம்பரையாக கொடுப்பவர்கள் பூமியின் உயிர்கள் மீது இரக்கம் வைப்பவர்களால் மட்டுமே பூமியும் வாழ்கிறது அவர்களின் புண்ணியமும் வாழ்கிறது. ஆனால் இன்று இரக்கத்தில் ஏதோ வறட்சி தெரிவதால்தான் அதனைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணமாக இருக்கும் எனச் சரியான காரணம் நமக்குத் தெரியுமா? என்ற வினாவினை வைத்தால் விடையும் வறட்சியாகத்தான் இருக்கிறது. தனக்கு இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும் என்று எண்ணியதால் பிறரை மறந்துவிட்டோம் சட்டத்தோடு போராட முடியாமல் ஒதுங்கிக்கொண்டோம், நமக்கேன்வம்பு, என்று நன்மை செய்யத்தயங்கி விட்டோம். நம்மையே நாம் கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிற அந்தஸ்து, கௌரவம், சாதி, செல்வாக்கு, புகழ் போன்றவை கரைந்துவிடும் அல்லது ஒதுங்கிவிடும் எனப் பயப்படுகின்றோம். ஆனால் இதயத்தில் இரக்கம் இல்லாமல், உடையில் மினுக்கும், நடையில் கம்பீரமும், ஒப்பனை செய்யப்பட்ட உடல்வாகும், கற்பனை செய்ய முடியாத பேரும் புகழும் இருந்தது என்ன பயன்? விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை தானே?

இறுதியாக ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். கல்கத்தா வீதியில் காளிகோயில் பூசாரி ஒருவர் மயங்கி ரோட்டோரத்தில் விழுந்து கிடக்கிறார் அவர்மீது இரக்கம் கொண்ட அன்னை தெரசா அவரை எடுத்துவந்து தனது மருத்துவமனையில் வைத்து குணப்படுத்துகிறார் அப்பூசாரி கண்விழித்துப்பார்த்த போது அன்னை தெரசாள் அவரைப்பார்த்து எப்படி இருக்கிறீர்கள் எனக்கேட்டார். அவரோ கண்ணீர் மல்க அம்மா நான் காளிக்கு இருபத்தைந்து ஆண்டுகள் பூசை செய்கிறேன். ஆனால் இன்று நாள் காளியை நேரில் பார்க்கின்றேன் என்றார். பெண் தேடிவந்த தெய்வத்தாயாக மாறுகிறாள். ஆகவே தெய்வ அருளைத் தேடிக்கொள்ள வேண்டுமென்றால் இரக்கம் இதயத்தில் சுரக்க வேண்டும். இரக்கம் இருப்பவர்களெல்லாம் பிறருக்கு இறைவனாகத்தான் தெரிவார்கள்.

ஒரு முறை காட்டு அத்திமரத்தில் ஏறிநின்ற சக்கேயுவை இயேசு இறங்கிவா என்கிறார். இறங்கிவந்தவுடன். என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குத் தருகிறேன். ஏமாற்றியவர்களுகு;கு நாலு மடங்காக நான் தருகிறேன் என்கிறார். இதற்குக் காரணம் அவர் நிலையிலிருந்து இறங்கி வருவதுதான். நாமும் பல நிலைகளில் ஏறிநி;ற்பதால் தமது நிலை தளர்ந்து விடுமோ எனப்பயந்து இறங்க மறுக்கிறோம். இரப்பட மறுக்கிறோம். எதற்கு இனிமேலும் வறட்டுபிடிவாதம். வாருங்கள் இறங்குவோம், வாழ வைப்போம், வழிகாட்டுவோம், வாழ்க்கைக்குப் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம் புதிய அர்த்தத்தை கொடுப்போம்.