என் போதிமரம்

Boothi Maram

Boothi Maram

வருடத் தொடக்கத்தில் பெரியோர்களின் ஆசியோடும் புதிய கொள்ளைகளோடும் புத்தாண்டைத் தொடங்குவோம். ஒருமுறை என்னை என் மாணவர்கள் சிலர் சந்தித்தபோது அவர்கள் பார்வையில் நான் உயர்ந்திருப்பதாக எண்ணிக் கொண்டு என்னுடைய வெற்றியைப் பற்றிக் கேட்டார்கள். நான் உடனே என்னுடைய ஒவ்வொரு அடியும் நானா செதுக்கினது! எனப் பொய் சொல்லாமல் என்னைச் செதுக்கிய சிற்பியைப் பற்றிச் சொன்னேன். என்ன சொன்னார் என்று கேட்டார்கள் அவர் சொன்னதைச் சொன்னேன்.

  1. எப்போதும் எதற்கும் யாரிடம் உதவிகேட்டு நிற்காதே அது உனக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் தடையாகவும் வந்து நிற்கும்.
  2. உன்னுடைய வாழ்க்கையை நீதான் தீர்மானிக்க வேண்டும். அடுத்தவர்கள் கொடுத்தால் அது நிற்காது அதற்கு நீயும் அடிமையாகத்தான் இருக்கவேண்டும்.
  3. அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல ஆகவேண்டும் என யோசிக்கவும் கூடாது. அதற்கு என்ன பண்ணலாம் எனக் கேட்கவும் கூடாது. ஏனென்றால் அவர்களுக்குத் தைத்த சட்டை உங்களுக்கும் ஒருபோதும் சேராது.
  4. நாமக்கான வழியை நாமதான் தேடிக் கொள்ள வேண்டும் யாராவது வந்து தருவார்கள் எனக் காத்திருந்தால்?.. இரயில் போன பிறகு பயணச்சீட்டு வாங்கி என்ன பண்ண?..
  5. வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள் நமக்கு அது ஒத்துவருமா எனக்கேட்டால் ஒத்துவராது உன் வழி தனி வழியாக இருக்கவேண்டும் அடுத்தவர்கள் வழியில் சென்றால் உன் முயற்சி அதில் எதுவுமே இருக்காதே?
  6. அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்டு அப்படியே செய்யலாம்; என நினைப்பதற்கு இது சமையலல்ல.. வாழ்க்கை…
  7. வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என நினைக்கவேண்டுமே தவிர சமாளித்துக் கொள்ளலாம் என எண்ணக் கூடாது.
  8. எதை அடையப்போகிறோம்! இலட்சியத்தை முடிவு பண்ணுகிற வரைதான் யோசிக்கணும். அதன் பிறகு இது சரி வருமா? வராதா? என்ற எண்ணங்கள் வரவே கூடாது.
  9. பின்பு அதனை முடிப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் கையாளவேண்டும். இது ஒத்துவராது விட்டு விடலாமா? என ஒருபோதும் எண்ணக்கூடாது.
  10. திரும்பத்திரும்ப அடி விழுந்தாலும் நம் பயணத்தில் இருந்து திரும்பி வந்து விடக்கூடாது ஜெயிக்கிற வரைக்கும் ஓடணும். அந்த தில்லு வந்திருச்சின்னா! வெற்றி தானா வந்து நம்ம கையில் தவழும்.
  11. நமக்குக் கிடைக்கிற தோல்விகளும் அவமானத்தையும் கண்டு பயந்து விடக்கூடாது அதுதான் நாம அடுத்த அடியை கவனமாக வைக்கவும், கணிச்சு வைக்கவும் உதவும், அதனைக் கண்டு ஒடிப்பாவதற்கோ, ஒழிந்து கொள்வதற்கோ நாம கோழை அல்ல.
  12. பிரச்சனைகளைக் கண்டு பின் வாங்கிவிடக்கூடாது ஏனென்றால் அதுதாங்க நம்ம அனுபவம் அதில் எப்படி வெற்றி அடைகிறோம் என்கிறதியில்தான் நாம் இருக்கிறோம்.
  13. தோல்வியே தெரியாமல் வெற்றியடைந்தால் நிலைச்சு நிக்கவும் முடியாது நீடித்த புகழும் இருக்காது. ஏனென்றால் மந்திரத்தில் மாங்கா பழுத்தால் அது ருசிக்கவும் ருசிக்காது அதற்கு நீங்க ஆசைப்படவும் கூடாது. படிப்படியா அனுபவப்பட்டு வாழ்க்கையில் ஜெயிச்சா அதுதான் நிலைக்கும். அந்த வெற்றி நம்ம வியர்வையில் கிடைத்திருக்கவேண்டும்.
  14. நேர்மையா உழைக்கும் போது நம்ம வெற்றியை தாமதப் படுத்தலாம் தடை செய்ய முடியாது இன்று இல்லையென்றால் நாளை, அல்லது நாளை மறுநாள் இல்லையென்றால் என்றாவது ஒருநாள் உங்கள் வெற்றி உங்களைத்தேடிவரும். அப்போது நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள் உலகம் உங்களை ஏறிட்டுப்பார்க்கும்.
  15. எல்லாவற்றிற்கும் மேல கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டியது நம்ம வளர்ச்சியைத் தடுக்கிற எதிரி நம்ம கூடயோ, நம்ம பக்கத்திலேயே தான் இருப்பான். நாம விழும்போதெல்லாம் சிரிப்பான் இதெல்லாம் தேவையாணு? கேலி பண்ணுவான் அக்கரையா புத்திமதி சொல்லுவது போல நம்ம முயற்சியைக் கைவிடச் சொல்லுவான் இதற்கெல்லாம் நாம மனசு மாறி விடக்கூடாது.
  16. யார் என்ன சொன்னாலும் நமது பயணம் தொடர்ந்துக்கிட்டே இருக்கணும். நமக்குச்சரிணு பட்டதிலிருந்து நாம பின் வாங்கக்கூடாது.
  17. நண்பன் எதிரியாயிட்டா அது நமக்கு நரகமாகிவிடும், வலி அதிகமாக இருக்கும் உள்ளுக்குள் ஒரு கண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும் அதுக்காக வருந்தக் கூடாது. ஏனென்றால் எதிரியையும் நண்பனாக்குகிற திறமை நமக்கு இருக்கிறது. என்ன!… கொஞ்சம் இர(ற)ங்கிப் போகணும்!.
  18. எதைத் தொட்டாலும் எதிர்ப்பு வருகிறதே என இடிந்து போய்விடக்கூடாது எதிரியே இல்லையினா வாழலாம் ஆனா… வளர முடியாது. எதிரியை ஜெயிக்கணும்னு நினைக்கணும் அழிக்கணும்னு நினைக்கக்கூடாது எப்போதும். ஜெயிக்கணும் நினைக்கிறது தப்பு இல்ல ஆனால் எல்லோரையும் ஜெயிக்கணும் நினைக்கிறது தப்பு.
  19. தோல்வி என்றவுடன் துவண்டு விடக்கூடாது ஏனென்றால் உடனே உடைந்தும், உறைந்தும், கரைந்தும் போவதற்கு நீ ஒன்றும் பனிக்கட்டியல்ல புலிக்குட்டி.
  20. பகட்டா வாழ வில்லையென்றாலும் பதட்டமில்லாமல் வாழணும் பத்துக்காசு சம்பாதிச்சாலும், பயமில்லாம, யாருக்கும் பாதகமில்லாமாச் சம்பாதிக்கணும்.
  21. இன்னொரு முக்கியமான விசயம் நாம பார்க்கிற வேலையை வயிற்றை நிரப்பத்தேடுகிற வழியாய் எண்ணக்கூடாது. நம்முடைய சிந்தனை செயலாக வேண்டும், தனித்தன்மை தாண்டவமாடணும் ஏதோ ஒரு வித்தியாசம் அதில் இருந்தே தீரணும் அப்படியென்றால் நம்ம வெற்றி எளிதாகி விடும்.
  22. நேர்மையாக வாழ்வது மிகவும் கஷ்டம் ஆனால் வாழ்ந்திட்ட அது வரலாறு. வாழும்போது ஏகப்பட்ட விமர்சனங்கள் வரும் அதற்குப் பதில் சொல்ல நினைத்தால் உனது பயணம் தாமதமாகி விடும் அவர்கள் கல் எறிந்து கொண்டே இருக்கட்டும் நீ காயம்படாமல் போய்க் கொண்டே இருந்தால் அவர்கள் கை ஒய்ந்து விடும்.
  23. நம்மிடம் தவறு இருந்தால் தடுத்து விடவேண்டும் உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் கடித்து விடும் எனக் கலங்கிக்கொண்டு புலியின் மீது அமர்ந்து அது போகிற இடமெல்லாம் போய்க்கொண்டே இருக்கக்கூடாது. என்றைக்காவது இறங்கத்தானே போகிறோம் அது இன்றைக்கே இருந்து விட்டுப் போகிறது!

கடைசியா ஒண்ணு சொல்றேன் உனக்கு நெருக்கமானவர்கள், உனக்கு ஒத்துப்போகிறவர்கள் உன் வேகத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள், உனது உணர்வுகளை மதிக்கிறவர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொள் இல்லையென்றால் காலமும் நேரமும் தர்க்கத்திலும், கோபத்திலும், மௌனத்திலுமே, அழிந்துவிடும்.

கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்டால் குழப்பம் தான் மிஞ்சும். படிப்பது அறிவைப் பெருக்க மட்டும்தான் வாழ்க்கைக்குத் தேவையான கல்வி எழுதப்படிக்கத் தெரியவும், தப்பில்லாம வரவு செலவு பார்க்கவும் தெரிந்தாலே போதும். எனவே கல்வியை வைத்து மதிக்கவோ, மதிப்பு தேடவோ கூடாது.

மனசு பரந்து இருந்தால் வாழ்க்கை சிறந்து இருக்கும் இவையொல்லாம் எனது குரு என்னிடம் சொன்னது ஆனால் எனக்கு மட்டுமல்ல…

அன்புடன்
சு. ஜோ. அன்டனி