வானவில்

வானவில்

வானவில்

வாழ்க்கை என்பது வானவில் போன்றது ஏனென்றால் அது எப்போது தோன்றும் எப்போது மறையும் என்று நமக்குத் தெரியாது எடுத்துக்காட்டாக மரணம் நமது கதவைத் தட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இது என்ன அபசகுனமாக இருக்கிறது என்று கேட்கலாம். ஆனால் மறுக்க முடியாத ஒன்றுதானே இது. மரணத்தை நீங்கள் சந்திக்க விரும்புகீறீர்களோ இல்லையோ, மரணம் ஒருநாள் உங்களைச் சந்தித்தே தீரும். ஆனால் எப்போதுவரும்? எப்படிவரும்? என்றுதான் யாருக்கும் தெரியாது அது ஒரு அதீதி. அதாவது அழையா விருந்தாளி.

மரணம் என்பது பிரபஞ்சத்திற்கு வந்த உயிர் மீண்டும் பிரபஞ்சத்தைவிட்டுப் பிரியாவிடை பெறுகிற விழா. ஐம்பூதங்களிடமிருந்து கொஞ்சம் பெற்று ஏதோ ஒரு உயிருக்குள் உட்கார்ந்து வெளிவந்து விளையாடி போராடி, புகழ்தேடி, நடைபிணமாகி நாடித்துடிப்படங்கும் ஒரு நடைபயணம் இது. இதில். வருந்தவோ, தயங்கவோ வாய்ப்பே இல்லை. வயதானவர்களுக்குத்தான் வரும் என்று சொல்லவும் முடியாது வரும்போது அது வயதும் பார்க்காது. இங்கு பூவும் உதிரும். காயும் உதிரும் கனியும் உதிரும் காயந்து கருவாடாகியும் உதிரும். ஆயினும் கணக்குப் பார்க்க வேண்டியவர்கள் நாம், கடன் வாங்கியவர்கள் நாம்,

ஐம்பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் கலந்த கலவைதான் நாம். நமது உடலில் இரத்தம், நீர் போன்றவை நீராலும், உடல் நிலத்தாலும், வெப்பம், கோபம், நெருப்பாலும், சுவாசம் காற்றாலும் எண்ணங்கள் ஆகாயத்தாலும் இணைந்து கலந்து செய்த கலவை நாம், ஐம்பூதங்களும் இணைந்து ஐம்பொன்னாக இறங்கிய நாம், நம்மால் இந்தப் பிரபஞ்சத்திற்கு என்ன இலாபம் என்று இந்தப்பூமி கணக்குப்பார்த்தால், இல்லை உங்கள் காலரைப் பிடித்துக் கணக்குக் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.?

வாழ்க்கையின் எச்சம், மிச்சம் இந்தப் பூமியில் தான் எங்கேயாவது கிடக்கும். ஆவியாகக் கூட நடமாடும் தப்பில்லை ஆனால் அது பயனற்ற பாவியாக உலவக்கூடாது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலே மண்ணெடுத்து தொட்டிலில் தூங்கும் குழந்தைக்கு அடியில் புதைத்தால் வீரம்மிகுந்தவனாகப் புகழ்;பெறுவான் என்ற நம்பிக்கை. நம்மை புதைத்த இடத்தில் மண் எடுத்தால் அந்த மண் நமது கதையை எவ்வாறு பேசப்போகிறது? வருகிற தலைமுறைக்கு நமது வாழ்க்கை முறையிலிருந்து விட்டுச்செல்ல என்ன இருக்கிறது.!

ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி ஊருக்கெல்லாம் ஓடி ஓடி சேவை செய்கின்ற ஒருவனிடம் இந்த உழைப்பும், சகிப்பும், பொறுமையும், தியாகமும் எதற்காக எனக் கேட்கும் போது அவன் அழகாகச் சொல்லுவான் நான் இறந்த பிறகு நம்மைச்சாராத (சொந்தம், பந்தம், சாதி, மதம்) நாலுபேர் நமக்காகக் கண்ணீர் சிந்தணும் என்பான். அந்த நான்கு பேரைச் சம்பாதித்து விட்டோமா? இல்லை அதுவும் நம்ம…?

ஒரு ஊரில் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டு இருந்தது. ஊருக்கும் சுடுகாட்டிற்கும் வெகுதூரம் ஒருவர் அந்த ஊர்க்காரரிடம் கேட்டார். இவ்வளவு தொலைவு எதற்கு? என்று கேட்டார். அதற்கு அந்த ஊர்க்காரர் சொன்னார் எங்கள் ஊரில் வாழ்கிறவர்கள் எல்லாருமே நல்லவர்கள், பிறருக்காக வாழ்கிறவர்கள் அவர்கள் இறந்த பிறகு அவரது பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போவோம் அதற்கு இவ்வளவு தொலைவு தேவைப்படுகிறது என்றார். அப்படி என்றால் நமது கல்லறைத் தொலைவு நமக்குத் தெரிந்ததுதான் அவ்வளவு தூரம் நமது நற்செயல்களை சொல்லிச் செல்லுமளவிற்கு நன்மை செய்திருக்கிறோமா? சிந்திக்க வேண்டிய ஒன்றுதானே.

சில ஊருக்குள் நுழையும் போது பல சுடுகாடுகளைப் பார்ப்போம் என்னவென்று கேட்டால் சாதிக்கு ஒரு சுடுகாடு என்பார்கள். அதுகூடப் பரவாயில்லை ஏனென்றால் செத்தபிறகு தானே சாதியோடு சேர்த்துப் புதைக்கப்பட்டிருக்கிறார். உயிரோடு இருப்பவர்கள்கூட ஒருவேளை அந்த எண்ணத்தில் சேர்ந்தே அலைந்தால் அவர்களை என்னவென்று சொல்வது? சுடுகாட்டைப்போல பிறருக்குப்பயன் இன்றி வாழப்போகிறார்களா? அல்லது இந்தப் பிரபஞ்சத்தையே சுடுகாடாக்கச் சுற்றிக்கொண்டு இருக்கிறார்களா?

சாதரண மனிதர்கள் கூட சமத்துவபுரம் அமைக்க முனையும் போது சகோதரத்துவமாக வாழ்கிற நாம் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. சிந்திப்போம்! காந்தியும், காமராஜரும், எம்ஜியாரும் செத்த பிறகு பிறந்தவர்கள் கூட அவரது பெருமைகளைப் பேசிக்கொண்டு இருக்கும்போது உயிரோடு இருக்கும் நம்மைபற்றி பெருமையாகப் பேச ஒருவர் கூட இல்லையா? ஏனென்றால் அவர்கள் ஆன்மா வாழ்கிறது அது நற்செயலை ஆடையாக அணிந்துள்ளது. தியாகத்தை நகையாகப் பூட்டியுள்ளது.

உங்களோடு என்னோடு இன்றும் உருவமாக அல்லாமல் அருபமாக (ஆவி) நடமாடுகிறது. ஆனால் சிலர் மட்டுமே வாழும்போதே நடைபிணமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அப்படியல்ல நல்லவை பல செய்திருக்கிறோம் பலரின் நெஞ்சில் நினைவாகவும் இதயத்தில் அன்பாகவும் நட்பில் தியாகமாகவும் கலந்திருக்கிறோம் என்றால் காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளுங்கள்.

சகலரையும் அன்பு செய்யும் போது சமத்துவபுரம் கட்டுகிறோம். சாதியை மட்டும் அன்புசெய்தால் சுடுகாட்டுக்கு குழி வெட்டுகிறோம் இதில் நான் யார்? நம்மை நாமே கேட்டுக்கொள்வோமே!.

- சகோ. சு. ஜோ அந்தோனி தி.இ.ச.,