நம்பிக்கை…

அன்பானசகோதரர்களே

இயேசுவின் இனியநாமத்தில் வாழ்த்துகிறேன்,

நினைத்ததுநடந்துவிட்டால், நேரங்கள் நமதாகிவிட்டால் வாழ்க்கை இனிக்குமென்று வகுத்தார்கள் வாக்கு நல்லது நடக்க வேண்டும், நான்கு திசையும் திறக்க வேண்டும். வெற்றி கிடைக்க வேண்டும், பிறர் போற்றித்துதிக்க வேண்டும் எப்படி அமையும் இந்த வாழ்க்கை? யாரிடம் கிடைக்கும் இந்த வாழ்க்கை? நெஞ்சை உலுக்கி நீங்கள் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்.

நிச்சயம் சொல்வார்கள்
நம்பிக்கை… நம்பிக்கை… நம்பிக்கை….நம்பிக்கையைத் தவிரவேறொன்றுமில்லை.

இதைத்தானே இயேசுசொன்னார். கையளவு நம்பிக்கை இருந்தாலும் மலையைப் பெயர்க்கலாம், எந்த அலையையும் நிறுத்தலாம், சிலைசித்தம் கொடுக்கும் வலைமனிதர்களைப் பிடிக்கும் இதைவிட நம்பிக்கைக்கு என்ன விளக்கம் கொடுக்கப்போகிறோம்.

வாருங்கள் ஒருமுறை விவிலியத்தை வாஞ்சையுடன் வாசித்துப்பார்ப்போம். ஆண்டவர் அழகாக முன் மொழிவார். உன் நம்பிக்கை உன்னை குணமாக்கியது. இங்கு கடவுள் கொடுக்கும் வரத்தையும், மனிதன் புரிந்ததவத்தையும் கண்ணுக்குத்தெரியாமல் இணைத்தது நம்பிக்கைத்தானே.

இன்னொன்றைக் கவனிக்கவேண்டும் சொந்தஊரில் இயேசுவுக்கு மதிப்பில்லை என்று சொல்லக்காரணமென்ன? அவர்களுக்கு அவரிடம் நம்பிக்கையில்லை இவனைத் தெரியதா? என்ற ஏளன வார்த்தை, அவர்களுக்கு எதுவுமேகிட்டாது போய்விட்டது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இயேசு கடவுள் மகன் அனைத்தையும் செய்தார். நம்பாதவர்களுக்கு அவர் சூசையின் மகன் அவர்களைவிட்டு அகன்றார்.

நம்பிக்கையுள்ளவர்களுக்கு தண்ணீர்ரசமானது, கடலும் வசமானது. குருடர்கள் பார்த்தார்கள். செவிடர்கள் கேட்டார்கள். ஊமைகள் பாடினார்கள். முடவர்கள் ஓடினார்கள். செத்தவர் எழுந்தார்கள், மற்றவர்கள் நம்பினார்கள்.

விறகுவெட்டியின், மகன் நம்பினார் அமெரிக்கச் ஜனாதிபதியானார். என்று ஆபிரகாமில் ஆரம்பித்து அலெக்ஸாண்டர், நெப்போலியன், சாகரடீஸ், புத்தர், காந்தி என்று வரலாற்றில் மனிதர்கள் எல்லாம்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்; அதற்கெல்லாம் அச்சாணிஅவர்களது நம்பிக்கைத்தானே.

எல்லோரையும் ஒன்றெனப்படைத்த இறைவன் அவர்களதுவாழ்வில் படிப்பில், விளையாட்டில் படைப்பாற்றலில், பங்களிப்பில், முதலிடம்,  இரண்டாமிடம், கடைசியிடம் என்றாபகிர்ந்தளித்துள்ளான்?

முடியும் என்று ஓடுகிறவன் முதலிடம் பிடிக்கிறான். முயன்று பார்ப்போம் என்பவன்; அடுத்தடுத்த இடங்களில் வருகிறான். அதுதான்  நம்பிக்கை அதுதான் வாழ்க்கை.

மூன்றாவது கண்ணைத் திறந்து சிவன் என்று காட்டவேண்டியதில்லை. ஆனால் மூன்றாவது கை இல்லாவிட்டால் நமக்கு வாழ்க்கையில்லை. இறைவன் படைத்த இரண்டுகையோடு மூன்றாவதுகையும் அதாவது நம்பிக்கையும் இணைந்தால் வாழ்க்கை நலமாகும், வானம் வசமாகும்.

கண் திறந்துபாருங்கள் ஒருவன் கயிற்றில் நடக்கிறான். கடலலையில் மிதக்கிறான் உச்சக்கட்டமாக ஒன்று சொல்லவேண்டுமென்றால் உதிரும் முடியைக்கட்டி ஒரு லாரியையே இழுக்கிறான் என்றால் அவன் உள்ளம் மட்டும் முடியும், முடியும் என்று முழங்கிக் கொண்டே இருக்கிறது.

உறுதியாக ஒன்று மட்டும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் சொல்கிறேன் உங்களுக்குள்ளும் தன்னம்பிக்கைதளைத்துவிட்டால் நட்சத்திரத்தை முத்தமிடலாம். நிலவில் நின்று சத்தமிடலாம். சூரியனை அசைத்துப் பார்க்கலாம், வானவில்லுக்கே வர்ணம் தீட்டலாம் மேகத்தின் மீது பாயைவிரிக்கலாம். தேகத்திலிருந்து தெய்வம் கிடைக்கலாம், காற்று உன் முன்கைகட்டிநிற்கும், கடலின் அலையும் கண்டுநடுங்கும், நீரில் நடக்கலாம், நெருப்பில் குளிக்கலாம், நெஞ்சத்தில் வேண்டியது நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே….நம்பிக்கையால் அற்புதரம் நிகழும்.

ஆகவே நம்பிக்கைகொள்வோம். நாளைய உலகைவெல்வோம். நல்லதே நடக்கும். நம் வாழ்வில் புதியதொடக்கம். தொடங்குவோம். தொடர்வோம். வெற்றிவெகு தொலைவில்லை.

நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்தபூக்கள் ஒவ்வொன்றும் வந்து ஒட்டிக்கொள்ளும்!