அளவிற்கு மிஞ்சினால்…

அகிலம் முழுவதும் திக்கு எட்டுத் திசையும் பட்டுத்தெறிக்கும் வார்த்தை அளவிற்கு மிஞ்சினால்…

வளமை நிறைந்த பூமியில் இப்போது வறுமை பூண்டது எதனால்? பசுமை நிறைந்த இந்தப் பூமி பாழ்வெளியானது எதனால்? பொதுமை நிறைந்த பூமியில் பிரிவினை வளர்ந்தது எதனால்? அன்னம் விளைந்த பூமியில் ஆயுதம் விளைவது எதனால்? புத்தன் அமர்ந்த போதிமரத்தடியில் போதைப்பொருள் தயாரிப்பது எதனால்? சமத்துவம் சமைத்த அடுப்பில் தீவிரவாதம் தீக்காய்வது எதனால்? இப்படி எண்ணற்ற எதனால்? எதனால்? என்ற கேள்விகளுக்கெல்லாம் உட்கார்ந்து ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் அளவிற்கு மிஞ்சினால்… என்ற அகோரப்பசி நம் கண்ணில் பட்டுத் தெளிக்கும்.

இந்தப் பரந்து விரிந்த பூமிப் பிரபஞ்சத்தை படைத்தவன் இறைவன், காத்தவனும் அவனே? புடைப்பின் சிகரமான மனிதனை படைத்த பின்பு இறைவன் பூமியை மனிதனுக்கு சுகமாக வாழ கொடையாக வழங்கினான்.

ஆதி மனிதன் வளங்களைப் பார்த்தான் அதன் வளங்களை ரசித்தான். தேவையானதைத் தின்றான். தேடி வந்ததை எல்லாம் தழுவினான், தென்றலையும் சேர்த்து, நாடிச் சென்றதை எல்லாம் கண்டடைந்தான். நாகரீகம் அடையும்வரை.

குகையில் வாழ்ந்தான் குதுகலமடைந்தான், பழங்களைத்தின்றான் பசியாறினான் மெல்ல அவனது பசி மேலே நகர்ந்தது குகைவீட்டுககாரன் மாடிவீட்டிற்காக மரங்களை வெட்டினான் பழங்களைத் தின்றவன் இயற்கை வளங்களை சுரண்டினான். ஆற்றங்கரைக்கு அடியெடுத்து வைத்த பிறகு இருப்பதில் கொஞ்சம சேமித்;தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று யோசிக்கத் தொடங்கினான்.

எதிர்கால நலனுக்காக மனிதன் சேமிக்க ஆரம்பிக்கும் போது கூட இந்தப் பூமி அவ்வளவாகக் குலுங்கியதில்லை.

தனது இருப்பையே தன்னிடம் இருப்பதை வைத்து எடைப்போடும் போதுதான் இந்தப் பூமி தடம் புரண்டது.

போதும் என்ற எண்ணம் இருக்கும் வரை இந்தப் பூமி புண்ணிய பூமியாகத்தான் இருந்தது. வேண்டும் என்று எண்ணும்போதுகூட கொஞ்சம் விசனப்பட்டது. வேண்டும் வேண்டும் என்ற எண்ணம் வெளி வரும் போதுதான். இந்தப் பூமி களை இழந்து நிலைமாறி நிர்கதியானது.

அவசியப் பொருளுக்காய் மனிதன் இயற்கையிடம் ஒடும்போது அள்ளிக் கொடுத்தது ஆசைப்படும்போதெல்லாம் பூமியிடம் போகும்போது கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தது. ஆஸ்திக்காக இயற்கையிடம் போகும்போது இயற்கை அசைந்து கொடுத்தது. அந்தஸ்துக்கா மனிதன் இயற்கையிடம்; அகப்பட்டதை சுருட்டும்போது இயற்கை அசந்தே போய்விட்டது.

அன்றாடம் சராசரி மனிதனுக்குத் தேவை உணவு, உடை, உறைவிடம், போதுமானஉணவு, போர்த்திக்கொள்ள உடை, புகலிடமாய் ஒருவீடு இது போதுமென்று இருக்கிற வரையில் இது புண்ணிய பூமியாகத்தான் இருந்தது.

எப்போது வந்தது இந்த ஆசைகள். அளவிற்கு மிஞ்சின ஆசைகள் அத்திப் பூப்பூத்தாற்போல் எப்போதாவது எங்கேயாவது தோன்றியிருந்தால் கூட இந்தப்பூமி இருளுக்குள் வீழ்ந்திருக்காது இது என்னமோ ஒவ்வொருவரின் பொறுப்பு போலல்லவா ஒவ்வொருவர் மனிதிலும் விழுந்து அறிவில் கலந்து செயலில் எழுந்து இந்தப் பூமியை சின்னாபின்னமாக்கிக் கொண்டு இருக்கிறது.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் ஆதி மனிதன் தோன்றி கூட்டமாக, குழுவாக வாழ்ந்த வரலாறு இங்கு கூறி நிற்கிறது. இதனை யாரும் இன்றளவும் கண்டுகொள்ளவில்லை.

அடுத்து வந்த வரலாறு மன்னராட்சி வரலாறு இதில் வெற்றிகளைக் குவித்தவர்களுக்கு மட்டுமே வரலாறு தனது பக்கங்களைத் திறந்து வைத்தது. போரிலே வெற்றி கண்டவர்கள் ஒருபுறம் இதயங்களை வெற்றி கொண்டவர்கள் மறுபுறம் இதயங்களை வெற்றி கொண்டவர்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டடிருக்கிறார்கள். காரணம் தன்னிடம் இருப்பதனை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தவர்கள்.

அடுத்து வருவது வெற்றி வரலாறு எங்கே ஆரம்பிக்கிறது? நாடு பிடிக்க வேண்டும் என்ற நப்பாசையில் தானே! இருப்பதனை இன்றும் விரிவு படுத்த வேண்டும் என்ற எண்ணித்தில் தானே! இவ்வளவு போர்கள் இதற்கு காரணமான சரித்திரப் புருசர்கள் சிலரை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

உலகையெல்லாம் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட அலெக்ஸாண்டர் நாடு பிடிக்கும் ஆசையினால் தெரியாதநாடு புரியாதை பாதை, மாற்றமுடியாத சு10ழ்நிலை, ஏற்கமுடியாத சீதோசணநிலை இவற்றிலெல்லாம் பயணத்தை தொடங்கினான். இவற்றின் விளைவு தனது 32 வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டன்.

உலகமகாச் சக்கரவர்த்தியாக உலக உதடுகள் தன்னை உச்சரிக்க வேண்டும் என்று அளவுகடந்த ஆசையினை வளர்த்துக் கொண்ட மாவீரன் நெப்போலியன். அவனது ஆற்றலும் வீரமும் அகிலமே புகழும்போதும் அடங்காத ஆசையினால் ரஷ்யாவின் மீது படையெடுத்து எதிரிகளை நடுங்கவைத்தவன் குளிருக்கு நடுங்கி எதிரியிடம் மண்டியிட்டு வரலாற்றில் தனது கருப்புப் பக்கங்களைப் பதிவு செய்து கொண்டான். அது அவனது அளவு கடந்த ஆசையால் தானே.

தன்பலமே சிறந்தது, தன் இனமே பெரியது என்று தான் தோன்றித்தனமாகத் திரிந்த ஹிட்லர் ய10த இனத்தை அழித்தே தீரவேண்டும் என்ற எல்லை கடந்த ஆசையினால் அவனது இறுதி முடிவு தன்னைக் காக்க வேண்டிய தனது துப்பாக்கியே தற்கொலையில் முடித்து வைத்த கதை அனைவருக்கும் தெரிந்த விசயம் தானே!

அசோகன் கூட நாடு பிடிக்கும் அவசரத்தில் கலிங்கத்தின் மீது கண்வைத்தான் கணக்கற்ற உயிர்களைக் குடித்தான். இரத்த ஆற்றிலே செத்த பிணங்கள் மிதந்தன. கைகள், கால்கள், மானிட உறுப்புகளில் பிரித்துப் போட்ட பாகங்களாக ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. ஐயகோ! இது என்ன கொடுமை இது எனது அளவு கடந்த ஆசையினால் தானே என்பதைக் கண் கொண்டு அன்றே மனம் மாறினான்; என்று வரலாறு இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறது.

இப்படி எத்தனையே சொல்லிக் கொண்டே போகலாம் அன்றோடு நின்றுபோன விசயங்களல்ல இவைகள்எல்லாம் இன்றளவும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.

கிராமத்தில் அழகாகச் சொல்லுவார்கள் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தரித்திரம் என்பார்கள். அதே போல் தான் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம்மும் நஞ்சு என்பார்கள்.

அந்த அளவு என்பது என்ன? அதனை நிர்ணயம் செய்வது யார்? அதனைத் தான் இப்போது மறந்த விட்டோம். ஆதனால் தான் இன்று அல்லல்படுகிறோம்.

தன்னை தன்நிலையில் வைத்து அழகு பார்ப்பதனை வி;ட்டு விட்டு அடுத்தவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தே நாம் இந்த அவல நிலையை அடைந்திருக்கிறோம்.

ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்ததாம.; அதனை ஒருமுயல் சந்தித்து ஐயா அரசரே உங்களைப் போலவே ஒருவர் இருக்கிறார் என்று கிணற்றுக்குள் அதன் உருவத்தைக் காட்டி அதனை தள்ளியதாம்.

இது அனைவருக்கும் தெரிந்த கதை இதில் தெரிந்த விசயம் என்ன தன்னைப்போல் யாரும் இருக்கக்கூடாது. தான்தான் பெரியவன் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தவனாக இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். அளவிற்கு மிஞ்சிய ஆசையினால்;. பொருளாதாரத்தைப் பெருக்க. குறுக்கு வழிகளைத் தேடுகிறோம் புறம் போக்கு நிலங்களுக்கு பட்டாத்தேடுகிறோம். அடுத்தவர்கள் அசரும்போது. அகப்பட்டதைச் சுருட்டுகிறோம். காடுகளை வெட்டுவதிலிருந்து கள்ளநோட்டு அடிப்பதுவரை கைதேர்ந்தவர்களாகிறோம். ஆற்றின் சதைகளை லாரிகளில் ஏற்றுவதிலிருந்து அரசியல் சதுரங்கம் வரை தினம்தோறும் ஒன்றைத் திட்டமிட்டு தேசியச் செயலாகச் செய்கிறோம். இதனால் எத்தனை ஏமாற்றங்கள் எத்தனை அவமானங்கள் எத்தனை சரிவுகள் எத்தனை சங்கடங்கள் எல்லாம் நமக்குள் குடியிருக்கும் ஆசைகளின் அளவிற்கு மிஞ்சின ஆர்ப்பரிப்புகள் தானே!

அந்தக்கதையில் இன்னொன்றை எண்ணிப்பாருங்கள் அந்தச்சிங்கம் கிணற்றில் தனது நிழலை நிஜம் என எண்ணி தன் உயிரை மாய்த்துக் கொண்டது இதுதான் இன்றைய நம்முடைய வாழ்க்கை. எத்தனையோ நிசங்கள் நம் கண்முன்னே நிற்க இன்றளவும் பட்டம், பணம், பதவி என்ற நிழலைத்தேடி அலைகிறோம் அந்த நிழலுக்காக நாம் நிசங்களை இழக்கிறோம் உறவுகள், நட்பு, அன்பு, நேசம் என அனைத்தையும் இழந்து விட்டு இன்று பணத்திற்காய் அலைவது நாளும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதனால் தானே இன்று லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, வரதட்சனை வாடிக்கையாகிப்போனது, நன்கொடை என்ற பெயரில் சுயநலத்தைக் காக்க பொதுநல வேசம் போட்ட ஒரு பூதம் தினசரி புறப்பட்டு வந்து கொண்டு தானே இருக்கிறது.

ஏல்லாமே அளவிற்கு மிஞ்சியதால் வந்த ஆபத்துக்களே இவையல்லாமல் வேரெது என்று நாம் சொல்ல முடியும்.

இன்னொரு கதையையும் இங்கு எடுத்துக்கூற விருப்புகிறேன். ஒரு குடியானவன் வீட்டில் பொன் முட்டையிடும் வாத்து இருந்ததாம் அது தினமும் ஒரு முட்டையிடுமாம். அதனை மொத்தமாக அடைய நினைத்து அந்த வாத்தை அறுத்து விட்டானாம் என்று கதை முடிகிறது.

இதில் ஒரு உண்மை உறங்கிக்கிடகிறது. சிலவற்றை உரைத்துக் கொண்டும் கிடக்கிறது அது என்னவெனில் அவன் நாளெல்லாம் வசதியாக வாழநினைத்தால் தினம் ஒன்றை விற்று வாழ்ந்து வந்திருப்பான். ஆனால் இந்த ஊருக்குத் தான் செல்வந்தன் என்று காட்ட நினைத்தான் அதற்குப் பெரும் பணம் வேண்டும் என்று ஆசைப்பட்டான் அந்த ஆசை தான் அவனை நிராசையில் கொண்டு வந்து நிற்க வைத்து விட்டது.

இன்று கூட இந்தியா வறுமைக் கோட்டில் வரைபடம் வரையக் காரணம் என்ன? நம்மிடம் வளமை இருக்கிறது. வறுமையும் இருக்கிறது. காரணம் எல்லோரிடம் அளவு கடந்த ஆசையிருக்கிறது. மனிதன் பணத்திற்குமேல் பணம் சம்பாதிக்க பாடாய்ப்படுகிறான். காலங்களையும் நேரங்களையும், ஏன் தன்னையே தொலைத்து விட்டு பணத்தை தேடுவதிலே குறியாயிருக்கிறான். பெற்ற குழந்தையை புட்டிப்பாலில் பொழுதைக் கழிக்க விட்டு விட்டு அம்மா என்கிற ஸ்தானத்தை இழந்துவிட்டு அரசு அலுவலர் என்ற தார்மீக உரிமையில் தானே இன்று தார்ரோட்டில் நின்று கொண்டு இருக்கிறாள்.

இன்று புட்டிப்பாலில் பிள்ளைகள் பொழுதைக் கழிப்பதால் தான் முதியோர் இல்லங்கள் எங்கும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. கணவனும், மனைவியும், அலுவலகத்திலும், குழந்தைகள் அனைவரும் தனிப்படிப்பிலும்; இருக்க வேலைக்காரியும், காவல்காரர்களும் மட்டுமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வீட்டிலிருந்து பதில் சொல்கிறார்கள் காரணம் எல்லாம் அளவிற்கு மிஞ்சினால்” என்ற அளவுகடந்த ஆசையினால் தானே!.

எல்லாம அளவோடு இருக்கும் வரைதானே இங்கு எல்லோருக்கும் நிம்மதி அளவுக்கு அதிகமானால் ஆபத்துக்களின் பிறப்பிடம் தானே!

இவனது அவசரம், இவனத ஆத்திரம் இவனது ஆசைகள் இவனோடு நின்று விடுவதில்லை இவனது செயல்பாடுகள் இயற்கையிலும் பட்டு எதிரொலிப்பதனால் இன்று எண்ணற்ற அவஸ்தைகளை நம் அள்ளிப்பூசிக் கொண்டு இருக்கிறோம்.
நதி, அது அளவோடு நடந்து வரும் போது நீராகிறது. நிலத்திற்கு உயிராகிறது. அதுவே அளவிற்கு மிஞ்சும் போது வெள்ளமாகிறது. வெள்ளம் புறப்பட்டு வரும்போது வீடுகள் தரைமட்டமாகிறது. விளைநிலங்களை நாசமாக்குகிறது, உயிர்கள் மாய்கிறது, பயிர்கள் அழிகிறது காடுகள், மேடுகள் கணக்கில்லாச் செல்வங்கள் பயனில்லாமல் பாழ்பட்டுப்போகிறது.

காற்று அது அளவோடு இருக்கும் வரை தென்றலாகி நம் தேகம் தழுவுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அதுவே புயலாகி, நம்மை புரட்டி எடுத்து விடுகிறது..

நெருப்பு அதுவும் அளவோடு இருக்கும் வரை அடுப்பெறிக்கப்படுகிறது அதுவே அளவிற்கு மிஞ்சினால் ஆளையல்லவா எரித்து விடுகிறது.

அலைகள் அதுவும் அளவோடு இருந்தால் கரையைத் தொட்டு கடலுக்குள் செல்லும் காண்பவர்களுக்கு அது காட்சிப்பொருளாக இருக்கும்

அதுவே அளவுக்கு மிஞ்சிவிட்டால் சுனாமியாக வந்து நம்மை சுருட்டியல்லவா எடுத்துக் கொண்டு போகிறது.

நமது உடம்பில் கூட வெப்பம் அளவோடு இருக்கவேண்டும் அளவிற்கு மிஞ்சினால் காய்ச்சல் அளவு குறைந்து விட்டால்; ஜன்னியாகி;.

ஆகவே எதற்குமே ஒரு அளவு உண்டு;. வார்த்தைக்கு அளவு உண்டு, வாழ்க்கைக்கு அளவு உண்டு, குணத்திற்கும் அளவுண்டு, மணத்திற்கும் அளவுண்டு, காலத்திற்கு அளவுண்டு, கடமைக்கு அளவுண்டு, பொறுமைக்கு அளவுண்டு, பெருமைக்கு அளவுண்டு எதுவும் அளவோடு இருக்கும்வரை சொர்க்கமே! அளவுக்கு மிஞ்சினால் நரகமே

இதனையே இறுதியாக ஒரு கதையைக் கூறி முடிக்கிறேன்.

ஒரு மன்னன் தன் குடியானவர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறான். அது என்ன வென்றால் நீங்கள் இந்த நிலப்பரப்பில் எவ்வளவு தூரம் ஒடுகிறீர்களோ அவ்வளவு இடம் உங்களுக்கு என்று கூறுகிறான். ஒருவன், ஒடுகிறான் ஆசை அவனைத் துரத்துகிறது இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று ஒடி இறுதியில் மூச்சடைத்து விழுந்து இறக்கிறன். இறுதியில் அவனுக்கு 6 அடி நிலமே சொந்தமாகிறது. எவ்வளவோ இடத்தை வளைத்துப்போட நினைத்தவன் ஆறடிக்குள் அடங்கிவிடடான். இதுதான் அளவிற்கு அதிகமானால்? எனபதற்கு விடை

இறுதியாக அலெக்ஸாண்டர் உலக நாடுகளையெல்லாம் தனதாக்க நினைத்தான் இறுதியில் அவனது கதை எப்படி என்றால் தன்னுடைய இறுதியாத்திரையில் சவப்பெட்டியின் வெளியே இரு கைகளையும் தெரியும் படியாக வையுங்கள் ஏன் என்றால் உலகத்தையெல்லம் வென்றவன் பூமியை விட்டு போகும் போது வெறுங்கையோடுதான் போகிறான் என்று உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறிசென்றான்.

எனவே அளவிற்கு மிஞ்சினால், ஆபத்துக்கள் மிஞ்சும், துன்பங்கள் தொடரும், இன்பங்கள் உதிரும், நிம்மதி விலகும், முன்மதி மறையும் உறவுகள் உதிரும், உண்மைகள் தொலையும், ஏன் மனிதன் தன் மதிப்பை இழந்து, மானுடம் தன் நிலையை .இழந்து நடைபிணமாய் நகர்ந்து கொண்டு இருக்கும் ஆகவே அளவோடு எண்ணுவோம்! வளமோடு நன்மை பண்ணுவோம். வாழ்க! வளமுடன்.