உண்மையே உன் விலை என்ன? இன்று உன் நிலை என்ன?

தென் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கூடங்குளப் பிரச்சனை இந்தியாவை மட்டுமல்ல இன்று உலகையே ஏறிட்டுப் பார்க்க வைத்துள்ளது படித்தவன் முதற்கொண்டு பாமர மக்கள் வரை உதடுகள் ஒட்டி வார்த்தைகள் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கின்ற உலகளாவிய விசயமாக இருக்கிறது.

இன்றைய நாளில் கூடங்குளம் அனுமின்நிலையத்தைப் பற்றி தெரிந்ததைவிட அங்கு நடக்கின்ற ஆசாம்பாவிதங்கள் தான் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. போராட்டக்குழு, அதனை அடக்க முயற்சிக்கும் அரசு, இவர்கள்  இருவருக்கும் நடக்கின்ற “ஈகோ” பிரச்சனையில் தன் கருத்தை ஆழப்படுத்தத் துடிக்கிற அளவுக்குயாரும் அதன் உண்மை நிலையை உலகிற்கு விளக்க முழுமையாக முற்படவில்லை கூடங்குளம் பிரச்சனை தோன்றிய காலம் முதல் தொடங்கிய நிகழ்வுகளில் அக்கறை காட்டாத மக்கள், போராட்டம் தொடங்கி உயிர் பலிகள் விழ ஆரம்பித்தபிறகு உன்னிப்பாக நமது கண்கள் ஊடகங்களை உற்றுப் பார்க்கிறது. என்ன நமது நாட்டுப்பற்று! எங்கே போகிறது மனித நேயம்?

எனது சின்ன வயதில் எனது தந்தை என்னிடம் ஒரு கதை சொன்னதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். இரு ஊர்களுக்கு இடையே ஒருகுளம் இருக்கிறது. அவர்களிடையே தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் அக்கரையில் இருந்து அவர்களின் நியாயங்களை எடுத்துச் சொல்ல இவர்களுக்குக் கேட்கவில்லை. இவர்கள் இக்கரையில் இருந்து எடுத்துச் சொல்ல அவர்களுக்குக் கேட்கவில்லை. ஆனால் இரு ஊர்க்காரர்களுக்கும் அது விளங்காமல் தமது கருத்தை மதிக்காமல் அடுத்தவர்கள் செயல்படுகிறார்கள் என்று ஆக்ரோசமாக நெருங்கி வர இரு கூட்டத்தாரும் தனது கருத்துக்களை ஒரே நேரத்தில் கூற அது கருத்துகளாக இல்லாமல் சத்தங்களின் கலவையாக மாறி, அது தமது கருத்துக்களை மதிக்க மாட்டேன் என்கிறார்களே என கோபம் கொத்தளிக்க கைகலப்பு ஏற்படுகிறது. பயங்கரமாக முட்டிக்கொள்ள உயிர் சேதமும், பொருட்சேதமும் ஊரை அடித்து உலையில் போட்டுவிடுகிறது. இறுதியாக இருவர் குற்றுயிருக்குலையுருமாக எழுந்து ஏம்பா இவ்வளவு வேதனை தேவையா? நாங்க சொன்ன மாதிரி ஆளுக்கு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்சிருக்கலாமே!  கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டீர்களே என்றானாம். மற்றவனும் ஐயையோ. அதைத்தானே நாங்கள் சொன்னோம் கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டீர்களே என்று இவனும் சொன்னானாம். இறுதியாக இருவரும் தண்ணீர்… தண்ணீர் என்று தவித்துக் கொண்டே இறந்தார்களாம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? குளத்தளவு தண்ணீர் இருந்தும் குடிப்பதற்கும், அதனைக் கொடுப்பதற்கும் சரியான நேரங்களும், ஆட்களும் இல்லாமல் போவதற்குக் காரணம் பல நேரங்களில் நம்முடைய குறுகிய புத்திகளே காரணங்களாகி விடுகிறது. மேற் கூறிய பிரச்சனைகளில் தோல்விக்குக் காரணமென்ன?

1.    தனது கருத்துக்களை சரியான விதத்தில் தெரிவிக்கப்படாதது.
2. தனது கருத்துக்கள் முறையாகச் சென்று சேர்ந்து இருக்கிறதா என்று அறியப்படாமல் இருந்தது.
3. கருத்துக்களைக் கூறுபவர்களும், கேட்பவர்களும் நெருக்கமே இல்லாமல் எதிராளிகளாக நினைத்தது.
4. நெருங்கி வரும்போது பிறர் கருத்தை கேட்டுவிட்டு தன் கருத்தை அறிவிப்போம் என்று பொறுமையில்லாமல் நடந்து கொண்டது.
5.   பேசித் தீர்க்க வேண்டிய விசயத்திற்கு வன்முறையை கையிலெடுத்தது.
6. இதற்கு என்று பொது மனிதர்கள் இல்லாமல் போனது. அவர்களது கருத்துக்களை மதிக்கவேண்டும் என்ற நிலை இல்லாதுபோனது.

எனவே தான் ஒத்தக் கருத்து இருந்தும் உரக்கச் சொல்லப் பட்டதால் அது கோபத்தின் வடிகால் என நினைத்து எதிரே வந்த அனைவரையும் எதிரியாக நினைத்து அனைத்தையும் இழந்து அதோகதிக்கு ஆளானார்கள்.

இந்தக் கதையை நினைத்துக்கொண்டே நான் கூடங்குள நிகழ்விற்கு வருகின்றேன்.

அரசு ஏதோ ஒரு நிறைவுகளோடு கூடங்குளம் அனல் நிலையத்தை அணுகுகிறது மக்கள் ஏதோ ஒரு பயத்தோடு அதனை வெறுக்கிறார்கள் இது ஒன்றுதான் நமக்கு அரசை ஆதரிக்கவும், அரசை எதிர்க்கவும் சரியான காய் நகர்த்துதல் என்று அரசியல்வாதிகள் சந்தர்பசகுனிகளாகி பகடையாட்டத்தை தொடங்கி விட்டார்கள். போராட்க்குழுவுக்கோ அந்தப் பொது மக்களுக்கோ துளியளவும் சம்மந்தமில்லாத சில சந்தர்ப்பவாதிகள் பொதுச் சேவை என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டு ஆனமட்டும் வசூலை அள்ளிக்குவிக்கிறார்கள்.

ஊடகங்கள் அனைத்தும் நமக்குத் தேவையான தீனிகள் ஒரே இடத்தில் கிடைப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகிறது. அரசுத்துறையும் தன்னுடைய படைகளை அனுப்பி வவுனியாக்காட்டில் பிரபாகரனைத் தேடுவது போல, சத்தியமங்கலம் காட்டுக்குள் வீரப்பனைத்தேடுவதுபோல் போர்களக் காட்சிகளை உருவாக்கக் காரணமென்ன? இதற்குத் தீர்வு என்பது தினம் ஒரு அப்பாவி உயிரை பலிகொடுப்பது என்றால் அன்று புதையலுக்கு நரபலி கொடுப்பதற்கும், இன்று புதிய அணு உலைக்கு ஆட்பலி கொடுப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம் காணப்போகிறீர்கள்.

பிரச்சனைகள் எப்போதும் பிரச்சனைகளாக வருவதில்லை அதனை அணுகின்ற விதத்தில் தான் அவை பிரச்சனைகளாகிறது என்பது யாருக்கும் தெரியும்.

சுடுகின்ற சட்டியை துணியில்லாம் பிடித்தால் சுட்டுவிடும் என்று சமைக்கிற பெண்ணுக்குத் தெரியும், சுடுகின்ற துப்பாக்கியை மாற்றிப் பிடித்தால் தன்னைத் தொலைத்துவிடும் என்று சுடுகிறவனுக்குத் தெரியும் பிடிக்கிற அரிவாளை மாற்றிப் பிடித்தால் கையைப் பதம் பார்த்துவிடும் என பயன்படுத்துகிறவனுக்குத் தெரியும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் எங்கேயோ தவறு நடத்திருக்கிறது அதனைக் கண்டு பிடிப்போம் அவற்றினைத் தெளிவுபடுத்துவோம். இதில் ஆதாயமடைய அறிக்கைவிடுகிற ஆசாமிகளை அப்புறப்படுத்துவோம். கட்சிக்காக மனித நேயங்களை காற்றில் பறக்க விடுகிற அந்தக் கருப்புப் புசாரிகளையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவோம்.

ஆதரவுநிலை, எதிர்ப்புநிலை எனக்குரல் கொடுப்பதைவிட நடுவு நிலை அமைப்போம் உண்மையை மட்டும் உரைப்போம். எடுத்த காரியத்தை முடித்தே தீருவோம் என்பதை மட்டும் குறியாகக் கொண்டு தடுக்கிறவர்களை எல்லாம் முறியடிப்போம்’ என்ற தான்தோன்றித்தனம் வேண்டாம்.

உண்மை எல்லோரிடத்திலும் இருக்கலாம் அதனை ஏற்றுக் கொள்வோம். கனத்த குரலில் அறிக்கையிடுமுன் காது கொடுத்துக்கேட்போமே!

புரிகிற வரையில் பொறுமை காப்போமே! அந்நிய ஒப்பந்தத்திற்காய் தமிழனுக்கு நிர்பந்தமா! பாதுகாப்புத்தான் என்று கூறுபவர்களெல்லாம் அதற்குப் பக்கத்தில் வந்து வீடமைத்துக் கொள்வர்களா? இனிமேல் என் வாழ்நாள் முழவதும் இங்குத்தான் வாழ்வோம் என்று சபதமேற்பார்களா?ஆகவே பொறுமைதான் தீர்வுக்கு மூலதானம் அதனை அனைவரும் புரிந்து கொள்வோம் கேட்பவர்கள் புரியும்படி புரியும் பாணியில், புரியும் பாதையில் பயணிப்போம் அதனை விட்டு விட்டு புகுத்துவது தவறு, புகுத்துவதெல்லாம் ஒருநாள் புடைத்துக் கொண்டு வெடித்துவிடும் அதன் விளைவுகள் சிவகாசியைப் போல் இருக்க வேண்டுமா? சிந்திப்போம், செயல்படுவோம் பொறுத்திருங்கள் புரிய வையுங்கள் ஏனென்றால் மக்கள் சக்தி மகத்தான சக்தி அதனைப் புரியா விட்டால் உங்களுக்குப் புரிய வைப்பார்கள். அரியணையில் உங்களை அமர்த்தியவர்களுக்கு உங்களை அப்புறப்படுத்தத்தெரியாத என்ன? ஆகவே அமைதி! அமைதி! அமைதிகாப்போம். ஆண்டவன் வழி காட்டட்டும்.

இதற்காய் இன்னுயிர் நீத்த தன்னிகரற்ற தலைவர்களுக்கு திரு. அந்தோணிஜான், திரு சகாயம் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கிறேன்.

மீனவர்கள் யானையைப் போன்றவர்கள் அன்புடன் அவர்களிடம் பழகினால் தங்கள் சங்கிலிகளை தாங்களே கொண்டு வந்து கொடுத்து, கட்டச் சொல்பவர்கள். அதிகாரத்துடன் நடந்தால் அந்தச் சங்கிலியாலே போட்டுத் தள்ளுவார்கள். அவர்கள் சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடிக்காதவர்கள், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க ஆசைப்படாதவர்கள், எதிர் பார்த்திருந்தால் எப்படிப்பட்ட இடரையும் இடறி விழச்செய்யும் வலிமை, துடுப்புகளை வலித்த அவர்கள் தோள்களுக்கு உண்டு. சிறிதும் எண்ணாத நேரத்தில் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் இருந்ததால் தான் அவர்கள் நிராயுதபாணியாக இருந்து விட்டார்கள். சுதாரிக்காத போதுதான் சுனாமியால் கூட அவர்களை சுருட்ட முடிந்தது.    -    வெ. இறையன்பு. (வேடிக்கை மனிதர்கள்)

சுனாமிகளைக் கண்டு அஞ்சாதவர்களா!
இந்தப் பினாமிகளிடம பின் வாங்கப்போகிறார்கள்?