கற்க. . . கற்க . . . கற்க. . .

கற்க. . . கற்க . . . கற்க. . .

            புல்லில் வரும் பனித்துளியில், புல்லாங்குழலில் புரண்டு வரும் காற்றில், துள்ளிவரும் கடலலையில் தோரணமாய் நிற்கும் மலைமுகிலில் அள்ளித் தெளித்த நட்சத்திரத்தில், எனை தழுவிச்செல்லும் தென்றலில, நனைத்துவிடும் சாரலில் தொடுகின்றபோதெல்லாம் என் தூயவன் இயேசுவின் கரம்படுவதாக நான் உணர்வதால் என்கரம் குவித்து இறைவனைத் தொழுது என் கருத்துக்களைப் பதிவு செய்ய உங்கள் இதய வாசலுக்கு வருகிறேன்.

“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

            என்ற ஆன்றோரின் வாக்கிற்கு ஏற்ப பூமி தோன்றிய நாள்முதல் புண்ணிய பணியாக இந்தக் கல்விப்பணியை கடவுளுக்குச் செய்கிற பணியாக சுரியன் வலம் வரும் நாடுகளையெல்லாம், தன்வசப்படுத்திய குருகுலத்தை நான் ஏரெடுத்துப் பார்க்கிறேன்.

            கற்றல் என்றால் என்ன? கல்விக்கூடங்களெல்லாம் எதற்கு? என்று ஒரு கேள்வியினைக் கேட்டுப்பாருங்கள் ஒரு உண்மை தெரியும்.

            முன்னோர் சொல்வார்கள் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள் கோவிலில்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்றும் சொன்னார்கள். ஆனால் முண்டாசுக் கவிஞன் பாரதி கொஞ்சம் முறையை மாற்றி, தொழுகிற கோவிலையெல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம் என்பதிலிருந்தே பள்ளியின் மகத்துவம் உங்களுக்குப் புரியும். முற்றும் துறந்த முனிவராக இலக்கியத்தில் வலம் வரும் பட்டினத்தார் கூட ஒரு பாடலில்

“துள்ளித் திரிகின்ற வயதினிலே  என்
துடுக்கை அடக்கி
பள்ளிக்கு அனுப்பவில்லையே  என்
தந்தையாகிய பாதகன்”

என்று கூறுவதிலிருந்து

            முற்றும் துறந்த துறவிகூட, நான் கற்றுத் தெளியவில்லையே என்று கதறும்போது, நெஞ்சம் பதறும் போது, தன்னைப்பெற்று பேணிவளர்த்த தந்தையை, தன்னை பள்ளிக்கு அனுப்பாததால் பாதகன் என்று திட்டுவதைப் பார்க்கும் போது பள்ளியின் மகத்துவம் உங்களுக்குச் சொல்லிப் புரிய வேண்டிய ஒன்றல்ல.

            சரி, அப்படியென்றால் ஆசிரியர் என்பவர் யார்? இதற்கும் ஒரு சரியான எடுத்துக்காட்டினை உங்களுக்குச் சமர்ப்பிக்க இதிகாசத்திற்கே மீண்டும் உங்களை அழைத்துச்செல்கின்றேன்.

            மிதிலை மாநகரில் ஒரு சுயம்வர நிகழ்ச்சி. ஜனகனின் மகள் சீதைக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஜனகர் போட்டிக்கு வைத்திருக்கிற வில்லை வளைத்து வெற்றி பெறுபவர்கள் தன்மகள் சீதையை மணக்கலாம். வந்திருப்பது விசுவாமுத்திரன் உடன் இருவர் அதில் ஒருவர் ராமன். பந்தயத்தில் கலந்து கொண்டு இராமன் வில்லை வளைத்து பந்தயத்தில் வெற்றி பெறுகிறான். ஜனகன் மனம் பதறுகிறது, ஐய்யகோ என்ன இந்த பரிதாபம் ஆயிரம் மனைவியைக் கொண்ட தசரதனின் மகனா? என் மகளை மணக்க இருப்பது என்று மனம் கலங்குகிறார். உடனே அனைவரும் ஜனகனிடம் கூறுகிறார்கள் அவனைப் பெற்றவனைப் பார்க்காதே, அவன் விசுவாமுத்திரனின் மாணவன் என்று கூறியவுடன் சம்மதித்தானாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? பெற்ற தந்தையின் உணர்வுகளையும்் உத்வேகத்தையும் விட கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் நிலையே ஒரு மனிதனை, மாணவனை உயர்த்தும் என்றால் ஆசிரியரின் பெருமைக்கு ஈடு இணையாக எதைச் சொல்வது?

            கற்றல் என்றால் என்ன? அது எங்கே கற்றுக் கொடுக்கப்படுகிறது? என்று கேட்பீர்கள் என்றால் ஒவ்வொரு நொடியும் கற்கப்படுகிறது. ஒவ்வொரு அசைவும் கற்றுக் கொடுக்கிறது.

            இயற்கை என்ன கற்றுக்கொடுக்கிறது என்று கேட்டதற்கு இன்றைய கவிஞன் அழகாகச் சொல்வான்.

“முட்டிப்பார்க்க விதைகள் சொன்னது,
மோதிப்பார்க்க அலைகள் சொன்னது,
தட்டித் திறக்க காற்றுகள் சொன்னது,
தடங்கள் பதிக்க பாதம் சொன்னது,
மௌனமாய் இருக்க மலைகள் சொன்னது,
மறைந்தே இருக்க வைரம் சொன்னது.”

            ஓற்றைக்காலில் நாட்டியம் ஆட பம்பரம் எனக்குச் சொன்னது, கால்களே இல்லாமல் நகர்வலம் வர சந்திரன் எனக்குச் சொன்னது ஒவியன் இல்லாமல் துளிகை வரைய வானவில் எனக்குச் சொன்னது. ஓற்றை மனிதனாய் பூமியை ஆள சுரியன் எனக்குச் சொன்னது.

இப்படி நடக்கின்ற ஒவ்வொரு அசைவும் நிகழ்வுமே நமக்குப் பல்வேறு செய்திகளைக் கற்றுக் கொடுக்கிறது.

பல்வேறு நிகழ்ச்சிகளுமே நமக்குப் பாடமாகி இருக்கிறது.

மரத்திலிருந்து தானாகத் தவறிய பழத்தைப் பார்த்த நியுட்டன் புவி ஈய்ப்பு விசையைக் கண்டறிந்தான்.

இட்டிலித்தட்டினில் சுற்றிய தட்டினைப் பார்த்த விஞ்ஞானிக்கு இரயில் எஞ்சின் தெரிந்தது.

நாட்டை இழந்த மன்னனுக்கு ஒரு குகையினில் சிலந்திப் பூச்சி விழுந்து விழுந்து எழுந்த நிகழ்ச்சியைப் பார்த்து மீண்டும் தனது நாட்டைத் தக்க வைத்துக்கொள்ளத் தூண்டியது.

பறவையைக்கண்டான் ஒருவன் விமான படைத்தான்.

தெருவில் தெரிந்த பிச்சைக்காரன் ஒரு சித்தார்த்தனைப் புத்தனாக்கியது.

ஒரு கலிங்கப்போர் வெறிபிடித்த மன்னனை இறை நெறி பரப்ப உதவியது.

வயலில் வேலை செய்த ஒரு விவசாயி ஒரு மகாத்துமாக்காந்தியின் உடை அலங்காரத்தையே மாற்றியது.

இப்படி எத்தனையோ கற்றல்கள்! பள்ளி இல்லாமல், பாடப்புத்தகம் திறக்காமல் கற்றுக்கொடுத்த நிகழ்வுகளை நாம் கண்ணெதிரே பார்க்கத்தான் செய்கிறோம்.

அதே கற்றல்கள் இப்போது காலத்தின் தேவையை உணர்ந்து காலத்தின் வேள்விகளைச் சுமந்து வகுப்பறைக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதுதான் இன்றையக்கல்வி.

தொடக்கக்கல்வி

வீடும், விளையாட்டுப்பொருட்களும், பெற்றோர்களும், உற்றார்களும் உலகம் என்று எண்ணிக் கொண்டிருந்த ஒரு குழந்தை முதன் முதலாக முற்றிலும் வேறுபட்ட சுழலிற்குள் நுழைவது தொடக்கக்கல்வி கற்பதற்காகவே!

கனிவான அம்மா போய் கண்டிப்புள்ள ஆசிரியர், விட்டுக்கொத்த வீட்டு நபர்கள் போய் போட்டிக்கு வரும் பள்ளித் தோழர்கள், தவறுகள் மறைக்கப்பட்ட பெற்றோர்கள் போய் தவறுக்குத் தண்டனைதரும் வகுப்புச்சுழல் இதற்கு மத்தியில் ஒரு இனிய தொடக்கம் தொடக்கக்கல்வி.

இதுவரை கண்ணால் கண்ட பொருட்களையெல்லாம் பார்க்கும் போது மட்டுமல்ல அதனைப்பற்றி கூறும்போது கூட தமது மனதிற்குள் கொண்டுவரப் பார்க்கும் ஒவ்வொரு பொருகளுக்கும் தனிப் பெயர் பதிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே பூமியில் வலம் வந்து நமது நினைவிற்குத் தெரியாத சில உயிர்களையும், பொருட்களையும் உருவங்களாக நமது மனதிற்குள் பதித்து காலமும் அதனை வைத்துக்கொள்ள கருத்துப் படங்களாக வந்து சமுதாயத்தோடு தன்னைச் சரியாய் பொருத்திக் கொள்ள ஆரம்பக்கல்வி அவனுக்கு பெரிதும் தூண்டுகோலாய் இருக்கும்.

ஓவ்வொரு கற்றலையும், ஒவ்வொரு கற்பித்தலையும் உலக அதிசயங்களில் ஒன்றாகவே பார்ப்பான், அம்மா எங்க சார், இதைச்சொல்லிக் கொடுத்தாங்க, அப்படிச் சொல்லிக்கொடுத்தாங்க என்று கற்றவர்களிடமும் கண்டவர்களிடமும் சொல்லிச் சொல்லி மகிழும் காலமே தொடக்கக்கல்வி, கவலையில்லாக்கல்வி நடைபெறும் பருவம் இது. இது உயர்நிலைப்பள்ளிக்குத் தொட்டிலாகவும் தொடக்கமாகவும்

உயர்நிலைக்கல்வி

உயர்நிலைக்கல்வி என்பது சவால் நிறைந்த கல்விப்பருவம் ஆகும். இங்குதான் முதன் முதலில் போட்டியினைச் சந்திக்கிறான். அரசுத்தேர்வினை நேருக்கு நேர் சந்திக்கும் அவசியத்திற்குத் தள்ளப்படுகிறான். அதேவேளையில் யாரையும் தோற்கடிக்காமல் வெற்றி பெறப்போகும் வித்தையைக் கற்றுக்கொள்கிறான். பொழுதுபோக்கிற்காக விளையாடிய விளையாட்டுகள், தனித்திறன்கள் இவையனைத்தையும் போட்டி மனப்பான்மைக்குள் புகுத்தி பிறரை வெற்றிகொள்ளும் தனித்திறன்களை கற்றுக்கொள்்கிறான். தொடக்கப்பள்ளி மாணவர்களோடு பெரியவன் என்று ஒதுக்கப்பட்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சிறியவன் என்று விரட்டப்ட்டு ஒருவிதமான தனிமையை உணரும் மனச்சிக்கலுக்கு ஆட்படுகின்றான். வெளியிலிருந்து வரும் உலகம் சார்ந்த கேள்விகளுக்குகெல்லாம் அக்குவேறாக ஆணிவேறாகப் பதில் தெரிந்தாலும் அவன் உள்ளுககுள் எழும் உடல் சார்ந்த கேள்விகள் அவனிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் பருவம். கேட்கத் தயக்கம், ஆனாலும் அதனில் ஒரு மயக்கம் விடைதெரியாத வினாக்கள் அவனிடத்தில் நடுக்கத்தை அச்சத்தை ஏற்படுத்தி அவனுக்குள் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்திவிடும் இந்தக்காலகட்டத்தில் ஆசியர்கள் அவனது சந்தேகம், கேள்விகளுக்கு பதில் கொடுப்பது மட்டுமல்ல அவனைப் பக்குவப்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகும். இந்த நிலையில் கண்டுகொள்ளப்படாத மாணவன்தான் பின்னாளில் பிறழ்வு ஏற்பட்டு எந்நாளும் தொல்லைக்கு உரியவனாகிவிடுகிறான். இந்தக்காலக்கட்டம் ஆசிரியர் மாணவர்களைப் பயிற்றுவித்தலைக் கடந்து பக்குவபடுத்தக் கற்றுக்கொள்வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி

இக்கல்வி முறையில் சமுதாயத்தில் ஒவ்வொரு கதாநாயகர்களோடு தன்னை இணைத்துப் பார்க்கின்ற காலப்பருவம். கதாநாயகர்களைப் போலவே தன்னை அழகுபடுத்திக் கொள்ளுதல் தனித்தன்மையைக் கையாளுதல் பிறரின் நடவடிக்கைகளைக் காப்பியடித்தல் அதனால் பல நேரங்களில் அவனது சுயமையை இழந்து தடுமாறுகிறான். ஏற்கனவே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மனதிடம்். அதிகம் மதிப்பெண் பெற்ற ஒரு பெருமிதம், பாராட்டில் கிடைத்த மயக்கம் இவற்றோடுதான் அவன் மாணவன் என்ற பயணத்தைத் தொடர்வான்.

இவனைச் சரியாக ஒரு ஆசிரியர் பயன்படுத்தி விட்டால் அவன் தொண்டனாக மாறிவிடுவான். இல்லாவிட்டால் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஆடுபுலி ஆட்டம் தொடங்கிவிடும்

கம்பும் நோகக்கூடாது, பாம்பையும் அடிக்க வேண்டும் என்ற பழமொழிதான் பள்ளிக்கூடத்தில் இருக்கும். அவனது உடம்போடு ஒட்டியிருக்கின்ற தேவையற்றவைகளை உரித்தெடுக்க வேண்டும் அதே வேளையில் பொருந்தாத சட்டையைக் சுழற்றுவதாக அவனுக்கு தெரியப்படுத்த வேண்டுமேயொழிய அவன் சதையை கிழிப்பாதாக அவனுக்கு உணர்த்தி விடக்கூடாது. சரியாய் கணித்து அவனே அதனை விலக்க ஆவன செய்ய வேண்டுமேயொழிய அதிகாரப் பிரம்பைச் சுழற்றி விடக்கூடாது.

இங்கு நடப்பது கற்றல் அல்ல. அவன் காலமும் வழி நடக்க நல்ல வழிகளைக் காண்பித்தல் தேர்ந்தெடுக்கும்் முறைகளை தெளிவு படுத்திவிட வேண்டும்.

அவனுக்குள் எழும் உணவுகளையெல்லம் அருகிலிருந்து அரவணைப்போடு வழிகாட்ட வேண்டுமேயொழிய ஆகாயத்திலிருந்து சிலம்படிக்கக் கூடாது.

நாம் விதைத்ததெல்லாம் பயிராகும், நினைத்ததெல்லாம் நடந்தேறும் என்ற எண்ணத்தை ஆசிரியர் விட்டுவிடவேண்டும் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்ற விடாமுயற்சியும், பொறுமையுமே ஆசிரியரின் கற்பித்தலில் அதிகம் மேலோங்கவேண்டும். பொறுமையாக வழிகாட்டி அவன் நாம் பெருமைப்படும் வகையில் செயலாற்றும்வரை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப்போல நாம் இருக்கவேண்டும். இது ஒரு வகையான தவம் என்று கூடச்சொல்லாம். தன்னைச் சரியாகக் கையாண்டு சமதாயத்திற்குத் தேவையான அதிகாரிகளையும், அலுவல்களையும் அரசியல்வாதிகளையும் நம் வகுப்பறையில் உருவாக்குகிறோம் என்பதனை மனதில் கொண்டு செயல்படுகிறோம்.

இது மட்டுமல்ல கல்வி, வகுப்பறையில் இருப்பவர்கள் மட்டுமல்ல மாணவர்கள். தொடக்கப்பள்ளியில் தொடங்கி மேல்நிலைப்பள்ளியில் முடியும் ஒரு அவசர ஆட்டமுமல்ல, வரைமுறைக்குள் முடிந்து விடுகின்ற வகுப்பறைச் சூதாட்டமுமல்ல,

கருவறை தொடங்கி கல்லரை வரை தொடர்வது. எங்கும் தெரிவது கல்வி எல்லோரும் இங்கே மாணவர்கள் என்ற முனைப்போடு பயணம் தொடர்வோம்.

உளியின் வலி பொறுக்காத எந்தக் கல்லும் சிலையாவதில்லை. நெருப்பில் சுடப்படாத எந்தத் தங்கமும் ஒளிரப்போவதில்லை. எனவே உங்களை மகிழ்விக்க, ஒளிர்விக்க, சுரியனைப் போல சுடர் பரப்ப ஆசிரியர்கள் நடத்தும் வேள்விக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணிக்கும் மாணவர்களே வரலாற்றில் பல இடங்களில் வந்து போய் இருக்கிறார்கள். இன்னும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

தம்பி ஒன்று தெரியுமா? நீ தனியாக இருந்தால் மொழிகூட அவசியமல்ல ஆனால் இன்று நீ சமூகமாக இருக்கின்றாய். சரித்திரமாக வரப்போகின்றாய.் இந்தச் சமூகத்தில் உன்னைச் சரியாகப் பொருத்தி ரத்த உறவுகளைக் கடந்து பிறரோடு பிணைப்போடு வாழப்பயிற்றுவிக்க பள்ளிக்கூடம் தேவை

உன்னிடம் யாராலும் கண்டுபிடிக்கப்படாத திறன்களைக் கண்டு அவற்றில் உன்னைப் பயிற்றுவிக்க பள்ளிகள் தேவை.

உன்னிடம் இன்றைய ஊடகங்களும் சமூக அவலங்களும் உன் மனதில் தவறாக விதைத்து விடுகின்ற தீயவைகளை உங்களைப் பாதித்து விடாதபடி பக்குகுவமாய் அவற்றை அப்புறப்படுத்த ஆசிரியர்கள் தேவை

வகுப்பறையில் தன்னடக்கத்தையும், தோழர்களிடத்தில் பாசத்தையும், அன்பையும், விளையாட்டில் விட்டுக்கொடுத்தவையும், கூட்டுணர்வையும், இயக்கங்களின் மூலம் அர்ப்பணிப்பையும், ஆசிர்களிடத்தில் மரியாதையையும், மாண்பையும் கற்றுத்தர பள்ளிகள் தேவை.

மாணவர்களே விரும்பி வந்த அரும்புகள் நீங்கள். உங்கள் மணம் பூமிங்கும் வீசட்டும், திக்கெட்டும் உங்களைத் தேடி வரட்டும் உங்களிடத்தில் உறங்கிக்கிடக்கின்ற திறன்களையும், பரிணாம வளர்ச்சிகளையும், இறக்கை கட்டி பறக்க விடுங்கள். நாளைய உலகம் உங்களை நம்பித்தான் கதிரவனைக்கூட நிதமும் கடலிலிருந்து எழுப்புகிறது.

நீங்கள் நினைத்தால் நிலவிலிருந்து சத்தமிடலாம், நட்சத்திரத்தை முத்தமிடலாம், வானவில்லை வளைத்துப் பார்கலாம், மேகங் கூட்டத்தில் பாயை விரிக்கலாம், இமய மலையில் கொடியை நாட்டலாம், குமரிக்கடலினை நீந்திக்கடக்கலாம்.

வீட்டுச் சன்னலைத் திறந்து முற்றத்தைப் பார்த்தவர்கள் முன்னோர்கள். இப்போது வலைத்தளத்தின் சன்னலைத் திறந்து உலகத்தை வலம் வருகிறீர்கள் நீங்கள்.

நீங்கள்  நினைத்தால் முடியாதது எது? நீங்கள் எழுந்தால் தடுப்பது யார்? நீங்கள் இசைக்கருவி ஆசிரியர்கள் மீட்டட்டும். உங்களிடமிருந்து எழுப்பும் இனிய கானங்கள் இந்த பூமி முழுவதும் பரவட்டும் இன்னொரு அத்தியாயம் தொடங்கட்டும் வாழ்க பள்ளி! வளர்க மாணவர்கள்! நம்புங்கள் ஜெபியுங்கள்! நாள்தோறும் ஜெயிப்பீர்கள்.

நன்றி!