ஹலோ யார் பேசுறது……..

(ஞானக்கிறுக்கன் ஏதோ சிந்தனையில் கண்ணயர்ந்து இருந்தபோது…….)
ஹலோ…….. யார் பேசுறேங்க……… நான் ஜென்ஸி பேசுறேன்……… நான் யேசுவிடம் பேசணும்.

இயேசு இல்லப்பா அவர் கடற்கரைக்கு அவருடைய நண்பர்களைப் பார்க்கப் போயிருக்காரு நான் அவரு அம்மா மரியாள் பேசுறேன் என்னெண்ணு சொல்லு கண்ணு.

இல்ல உங்ககிட்டே பேச முடியாது நீங்க என்னைச் சத்தம் போடுவீங்க…….. நான் அவரிடம் தான் பேசணும் நான் அவரிடமே பேசிக்கிறேன்.

இல்லச் செல்லம் அவர் வருமுன்னே நீ தூங்கிருவே……… பயப்படாமே சொல்லு நான் உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன். நான் கண்டிப்பா இயேசுவிடம் சொல்லுவேன்………

அம்மா…….. எனக்கு அழுகையாக வருது……..

அழுகாமச் சொல்லு செல்லம் நான் இருக்கேன்………
பயப்படாமச்சொல்லு……..
அம்மா ஒரு குழந்தை பெற்றோர்களைக் கவனிக்கலைனா உலகமே ஏசுது……….. பேசுது ………. முதியோர் இல்லத்தைப் பத்தி எங்கும் பேச்சு………

தன் குடும்பச் சூழ்நிலை கருதியோ, அல்லது வேறொரு காரணம் கருதியோ ஒரு தகப்பனையோ தாயையோ முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டால் உலகத்தில் அவன் செய்யக்கூடாத பாவத்தைச் செய்தது போல் எண்ணி அவர்களை இச்சமுதாயம் மனிதனாகவே ஏற்றுக் கொள்வதில்லை. அதனை நியாயம் என்று எடுத்துக் கொள்ளுகிற இச்சமுதாயம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செய்கிற கொடுமையை எந்த மனிதர்களும் தட்டிக் கேட்பதில்லை. ஏன் கடவுளுக்கும்கூட காது கேட்காமல் போய் விட்டதா? என்று தான் போன் பண்ணினேன்.

அப்படியா செல்லம்! என்னை கொடுமையினு சொல்லு. நான் இயேசுவிடம் சொல்லி கண்டிப்பா போக்குவேன்…………
நீங்களும் அம்மாதானே ஆகவே அம்மாவை குறைசொன்னா நீங்க அடிப்பீங்களோ!
அப்படி இல்ல கண்ணு! நான் சாதாரண அம்மா இல்ல, இறைவனுக்கே அம்மா, இயேசு என்னில் உருவாகும்போது நான் திருமணமே முடிக்கல, எங்க ஆட்களே என்னை கல்லால் அடித்து கொண்ணுருவாங்க…….. அப்படி இருந்தும் நான் துணிந்து இயேசுவைப் பெற்றெடுத்தேன்பா……… அதுக்குனு சூசையப்பர் உடனிருந்து காப்பாற்றினார்.

அம்மா நீங்க அப்படி? ஆனால் எங்க அம்மாக்களெல்லாம் திருமணம் முடிந்திருந்தாலும் கணவர் உடனிருந்தாலும் எங்களை எத்தனையோ பேரை அழிச்சிடுறாங்க.

ஐய்யோ………. என்ன இப்படிச் சொல்ற…….

ஆமா அம்மா ஒரு காலத்திலே திருமணம் முடிந்தவுடன் குழந்தைக்குத் தவமிருப்பார்கள்.

இப்போ உருவாகாதா? பிற உருவாகாதா? என்று கோயில் கோயிலாக அலைவார்கள்.

செய்யாத தவமெல்லாம் செய்வார்கள் ஆனால் இன்று கல்யாணம் முடித்த பிறகு இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று எங்களை தள்ளி வைப்பதிலேயே எங்களைத் தள்ளி விடுகிறார்கள்.

எங்கள் தாயும் ,தந்தையும் சந்தோஷமாக இருப்பதற்காக நாங்கள் அவர்களுக்கு இடைஞ்சலாக இருப்போமென்று நாங்கள் பிறக்கு முன்பே எங்களை வேண்டாத ஒன்றாகவே எண்ணுகிறார்கள்.

இறைவன் படைப்பில் நாங்கள் எப்படியோ உருவாகிவிட்டாலும் அவர்கள் இடைஞ்சலாக நினைத்து அழித்து விடுவார்கள். கண்ணுக்குத் தெரியாமல் நடக்கின்ற இந்தக் கருணைக் கொலைக்கு எந்தக் காவல் துறையாலும் அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடியாது, கைது செய்யவும் முடியாது.

திருமணம் முடிந்தபின் ஒருவர் இருவராகிறோம் தாய்மை அடையும் போது மூவராகிறோம் என்ற தாய்மை உள்ளம் தன்னை உடைத்து பிறர் நலமாகப் பிரதிபலிக்கும்.

ஆனால் இப்போது தாய்மை அடைந்து விடுவோமோ எனப் பயந்து அத்தனை கருத்தடைச் சாதனங்களையும் பயன்படுத்துவதற்கு ஆலோசனை கேட்க அலையும் எங்கள் தாயை என்னவென்று சொல்வது.

அவர்கள் விரும்பும் நேரத்தில் தான் நாங்கள் பூமிக்கு வர அனுமதிப்பார்கள் குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று சொன்னார்களே நாங்கள் பூமிக்கு வருகின்ற பாதையாக இருப்பவர்கள் தான் பெற்றோர்கள் என்றார்கள். எங்களுக்காக எண்ணற்ற தியாகங்களை மேற்கொள்வார்கள் என்றார்கள் ஆனால் இப்போது அவர்கள் அனுமதித்தால் மட்டும் தான் பூமிக்கு வர முடியும் என்ற அவலநிலை உருவாகி எங்களுக்கு எஜமான்களாக மாறிவிட்டார்களே இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது?

அவர்கள் விரும்பும் நேரத்தில் நாங்கள் பூமிக்கு வந்தாலும் விஞ்ஞானத்தின் மூலம் (ஸ்கேன்) எங்கள் விலாசத்தை விசாரிப்பார்கள் பிறப்பது பெண் என்றால் பூமிக்குப் பாரமென்று மொட்டினை முனையிலே கிள்ளி விடும் மூர்க்கத்தனத்தைச் செய்து விடுவார்கள். இப்படிப் பட்டவர்களையும் இன்றும் பூமி தாங்கத்தானே செய்கிறது.

பொறந்தது இரட்டைக் குழந்தையென்றால், ஆணும் பெண்ணும் பிறந்தால் ஆணை அம்மாவும் பெண்ணை ஆயாவும் வளர்க்கும் பாகுபாடு நிறைந்த இந்தப் பாகுபாட்டு உலகத்தை எந்தப் பரமனிடம் கூறுவது?

பொருளாசை பிடித்து அலையும் இந்தப் புதிய உலகத்தில் பணிக்குப் போகும் என்தாய் தனது பவித்திரம் குறைந்து விடும் என்பதற்காக அவர் உதரத்தில் பிறந்த எனக்கு தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பாலில் பொழுதைக் கழிக்க வைக்கிறாளே …….. இந்தப் பொல்லாப்பை நான் என்னவென்று சொல்வது?

நான் செய்த சின்னச் சின்னச் சேட்டைகளையும் சில்மிசங்களையும் செல்லமாக கண்டித்து சிரித்து மகிழ்வாளே அந்தக் காலமெல்லாம் போய் இன்று நான் செய்யும் ஒவ்வொரு செயலையும் , சிரமமாகக் கருதி எனக்கு சிறகு முளைக்குமுன் பறக்கச் சொல்வதுபோல் நர்ஸரிப்பள்ளியில் நச்சரிக்க விடுகிறார்களே இதனை எந்தத் தெய்வம் வந்து எச்சரிக்கை செய்வது.

நாங்கள் உண்ண மறுத்த போதெல்லாம் நிலவைக் கூட்டி வந்து நேரில் நிறுத்தி நெஞ்சில் வைத்து பாசத்தோடு சாதம் ஊட்டியகாலம் போய் இப்போது அவர்களுக்கு இருக்கிற வேலையில் எங்களுக்கு சாதம் ஊட்டுவதையே மறந்துவிட்டார்கள் ……….

நாங்கள் பெற்றோர்களைக் கடந்து பள்ளியில் நாங்களாக முயற்சி எடுத்து விளையாட்டுத்துறையோ, நடனமோ கற்றுக் கொண்டாலும் உடனே பள்ளிக்கு வந்து பெண் குழந்தைகளுக்கு இதெல்லாம் வேண்டாம் என்று பள்ளியிலே வந்து எங்கள் கலைத்திறனுக்கு கொள்ளி வைப்பார்களே இந்த பாசாங்குத்தனத்தை என்னவென்று சொல்வது.

ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு போலிஸ் திருடனைப் பார்ப்பதுபோல் எங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பார்களே இந்தக் கள்ளன் – போலிஸ் விளையாட்டை எப்படிக் கண்டிப்பது?

பனிரெண்டாம் வகுப்புப் படிக்கிற பெண் குழந்தையைக் கடைக்கு அனுப்பும்போது 5 வயதுப் பையனைத் துணைக்கு அனுப்பி எங்கள் தன்னம்பிக்கையைத் தற்கொலை செய்ய வைப்பார்களே இவர்களை எப்படித் தண்டிப்பது?

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எங்கேயும் அனுப்பாமல் வீட்டுச் சிறைக்குள் விலங்கிட்டு, அடக்கம் என்ற பெயரில் சவ அடக்கமே செய்து விடுவார்களே அந்தச் சங்கடத்தை எந்தக் கங்கையில் கொண்டு கரைப்பது?

நொண்டி விளையாடியது, கண்ணா மூச்சி ஆடுவது, ஊஞ்சல் ஆடுவது, தாயம் ஆடுவது என்ற விளையாட்டெல்லாம் எங்களது கண்களில் மறைக்கப்பட்டு படிப்பு, படிப்பு, என்றே எங்களது துடிப்பெல்லாம் அடக்கி விட்டார்களே இந்த துரதிஷ்டத்தை என்னவென்று சொல்வது.

சமுதாயம் எங்கள் கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வியாபாரத்தை முன் வைக்கும் போது பணம் வந்து பையை நிரப்பினால் போதும் என்று எங்கள் பெற்றோர்களும் கைகோர்த்துக் கொண்டு நடக்கும் போது எங்கள் வாழ்க்கையே முடங்கிப் போய்விடுகிறதே!

பிறந்த வீடு கடந்து புகுந்த வீடு செல்வதற்குக் கூட எங்கள் வாழ்க்கைத் துணையை இவர்களே நிர்ணயிப்பார்கள். அவர்கள் காட்டுகின்ற ஆண் மகனுக்கு கழுத்தை நீட்டாவிட்டால் அடங்காப் பிடாரி என்று அதட்டுவார்களே இந்த அரக்கக் குணத்தை என்னவென்று சொல்லுவது.

கட்டிய கணவன் குடிகாரனாய் இருந்தாலும், கொலை காரனாய் இருந்தாலும் காலம் முழுவதும் அவர்களோடு குடும்பமாக வாழ்வதுதான் குடும்பமானம் என்று குடும்ப மானத்தைக் காப்பாற்றி எங்களைக் கொல்வார்களே இதனை வெளியில் சொன்னால் வெட்கக் கேடல்லவா?

ஆணும் பெண்ணும் சமம் என்று என்றோ பாடிவிட்டுச் சென்று விட்டான் முண்டாசுக் கவிஞன் அதனை இன்றளவும் ஏட்டிலும், பாட்டிலும் கேட்டுவிட்டு பரிசு வழங்கிப் பாராட்டுகிறார்களே தவிர வாழ்க்கையில் இன்னும் வாசிக்கப் படவுமில்லை யாரும் அப்படி வசிக்கவுமில்லை.
இந்தச் சட்டத்தில் எல்லோருக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று கூறிய போதும் எந்தப் பெற்றோர்களும் பிரித்துக் கொடுக்கவில்லையே? இதனை ஆண்டவனே வந்து சொன்னாலும் அவனையும் பிரித்து விடுவார்களே இந்த அவல நிலையை எந்த ஆண்டவன் வந்து அப்புறப்படுத்துவது.

அம்மா கேட்டுக் கிட்டேதான் இருக்கீங்களா?

ஆமா! கேட்டுக்கிட்டேதான் இருக்கேன் சொல்லு கண்ணு!

இத்தனை கொடுமைகளை செய்கிற பெற்றோர்களை ஏன் கண்டிக்கமாட்டிக்கிறாங்க? ஆனால் பிள்ளைங்க தவறுகள் கதை பேப்பரிலே வந்திருதே கொஞ்சம் இயேசு நாதரிடம் சொல்லுங்க……..

என்றதும் ஞானக்கிறுக்கன் கண்விழித்துப்பார்த்தான் ஆகா……. நாம கண்டது கனவா?

அதுசரி அதுலயும் ஞாயம் இருக்கத்தானே செய்கிறது.

அது சரி இன்னும் இது இயேசுநாதர் காதுக்குப் போய் சேரலையோ! இன்னும் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு என்று ஞானக்கிறுக்கன் நடையைக் கட்டினான்……..