13

Oct

2019

எவ்வளவு தைரியம் உங்களுக்கு ?

(கிரெட்டா இஸ் தி கிரேட்)

இந்தக் கேள்வி இன்று பிரபஞ்சம் முழுவதும் பட்டுத்தெரிக்கிற பகீர் கேள்வி ஐ.நா. சபையில் அலறிய கேள்வி. சமூக ஆர்வலரின் சட்டையைப் பிடித்து உலுக்கிய கேள்வி. எத்தனையோ பேர் இந்தப் பூமியை அழிவிலிருந்தும், சரிவிலிருந்தும் காக்கப் போராடிக் கொண்டிருக்கின்ற போது ஒரு பள்ளி மாணவியிடமிருந்து கிளர்ந்து எழுந்து வந்த கேள்வி. இந்தக் கேள்வி எத்தனையோ காதுகளைக் கிழித்துக்கொண்டு போவதற்கு காரணம் நமது ஊடகவியலாளர்கள்தான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஆனால் இந்திய இளைஞர்கள்தான் இதனை ஏதோ ஒன்று கடந்து போன செய்தியாக அவர்களது காது இருந்ததுதான் வருத்தமாக இருக்கிறது.

இல்லை என்றால் அது எவ்வளவோ விஷயங்களைச் சொல்லிய கேள்வி அது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது மாணவி கிரெட்டா துன்பர்க் அமெரிக்காவில் பருவநிலை மாநாட்டில் எழுப்பிய பகீர் கேள்வி இது. இந்தக் கேள்வி அதாவது பிரபஞ்சப்பற்று மிக்க அந்தக் கேள்வி 10 ஆம் வகுப்புப் படிக்கிற வயதில் இருக்கிற மாணவி அதனைப் பயப்படாமல் சபையில் எழுந்து நின்று உலகம் உற்றுபார்க்கும் அளவில் அதிரவைக்கக்கூடிய வகையில் அவள் எழுப்பினாளே அதில் தான் அனைவரும் அசந்து போயிருக்கிறோம்.

சமீபத்தில் அனைவருடைய அலைபேசியிலும் ஒரு மலையாளப்பாடல் காணொலியாகப் பவனி வருகிறது. அதன்பொருள் என்னவென்றால் இனிவரும் ஒருதலைமுறைக்கு இவ்வளவு வசதிகள் கிடைக்குமா? என்று அறைகூவல் விடுக்கிறது. அப்பாடலுக்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் அதனை எச்சரித்துக் கொண்டுதான் வருகிறார்கள். காரணம் நாம் ஒவ்வொருவரும் செய்து கொண்டு இருக்கும் சுற்றுச் சூழல் சீர்கேடுகள் தான்.

சமூகப் படிநிலையில் மேல மேல செல்லச் செல்ல அதாவது நாகரீகத்தில் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அநாகரீகமாக உளரிக் கொண்டு இருக்கிறோமே அதில் தான் நம் உலகை அழிக்கிற உண்மை இருக்கிறது. அடுத்த தலைமுறைக்குச் சுகாதரமான எதிர்காலம் இல்லை என்று ஐபிசிசி அலறுகிறது. பன்னாட்டு அரசுக் குழுவும் பருவநிலை மாற்றம் பற்றிய பதறல்களைப் பகிர்ந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “நாசா”வும் இன்னும் பல அறிவியல் நிறுவனங்களும் முன்னணி அறிவியலாளர்களும் திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்தி வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? இப்போதுள்ள தலைமுறைக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்த அளவுக்கு! அறிவியல் மனோபாவம் வளரவில்லை என்பதுதான், நம்மை அழிவுக்கு அழைத்துச் சென்றுவிட்டது. அறிவியல் வளர்ச்சியும் ஆராய்ச்சியும் ஒரு கத்தியைப் பிடித்தது போன்றது. அதனைச் சரியாகப் பயன்படுத்தினால் நன்மையே கிடைக்கும். தவறாகப் பயன்படுத்தினால் நம்மையே அழிக்கும். ஆனால் அறிவியல் வளர்ச்சி என்பது ஆபத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும் ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதனைக் கூட அறியாமல் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். அதனால்தான் அறிவியல் வளர்ந்த அளவு அறிவியல் மனோபாவம் வளரவில்லை என்று கூறினேன்.

சிட்டுக்குருவிகளை இழந்துவிட்டோம், நாட்டு வைத்தியத்தைத் துறந்து விட்டோம். உடல் பயிற்சி விளையாட்டுகளை மறந்துவிட்டோம் உணவு வகைகளில் விசத்தைக் கலந்துவிட்டோம். மாட்டுப்பால் பாக்கெட் பாலாகிவிட்டது. இயற்கை உரம் உயிர்க்கொல்லி மருந்தாகிவிட்டது. மாடுகளின் நெருக்கம் இயந்திரங்களின் பெருக்கமாகிவிட்டது. விளைநிலங்களையும், நிலத்தடி நீரையும் அமுதம்போல் அள்ளிப்பருகிய நாம் பேராசையால் இரத்தத்தையும் பூமிதாயின் மார்பகத்திலிருந்து உறிஞ்சும் இராட்சகர்களாக மாறிவிட்டோம். இதே நிலைமை இனியும் நீடித்தால் பூமி சுடுகாடாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. புற்று நோய்கள் புற்றீசல் போல் நிரம்பிவிட்டன. இரத்தக்குழாய் அடைப்புகள் தினசரிச் செய்தியாகிவிட்டது. இதய அறுவைச்சிகிச்சை கட்டாய நிலைக்கு வந்து விடுமோ என்ற பயம் நம்மைத் துரத்துகிறது. இந்த நிலை மாறவேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் குரல் அகிலமெங்கும் முழங்கவேண்டும் அதற்காக அத்தனை பேரும் உழைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள் இல்லாத பூமியாக மாற்ற வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் ஒரு திரைப்படத்தில் என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? என்றார். இன்று யோசித்துப்பாருங்கள் என்ன வளம் நம்மிடம் இருக்கிறது, அதனை எப்படி எதிர்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லப் போகிறோம்? என்ற கேள்வி உங்களையும், என்னையும் உறுத்தவில்லையா? அவரே இன்னொரு பாடலில் பாடி இருப்பார் காற்றும், மழையும், நீரும் நமக்கு பொதுவில் இருக்கிறது என்பார். நீர் அத்தியாவசியப் பொருள் அது இப்போது பொதுவிலா இருக்கிறது. பக்கத்து மாநிலமான கர்நாடாக, கேரளா நமது பங்காளிகள் தண்ணீர் என்று கேட்டுவிட்டால் பகையாளியாக மாறி விடுகிறார்களே? அதே நேரத்தில் அவர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள் அதுவும் நெஞ்சை உறுத்துவதுபோல் உள்ளது. நமக்கு ஓராண்டிற்குத் தேவையான நீரை விட மூன்று மடங்கு அதிகமாகவே மழை பெய்கிறதாம். கிடைக்கும்போது அதனைச் சேகரிக்காமல் கடலுக்குள் விட்டுவிட்டு பக்கத்துவீட்டுக்காரனிடம் புடுங்கிக்கொள்ளலாம் என்பது மாபெரும் பாதகச்செயல் அல்லவா?

மூத்தவர்கள் என்றைக்காவது தண்ணீருக்காகப் பிச்சையெடுத்தது உண்டா ? இல்லை காசு கொடுத்து வாங்கியது உண்டா? ஆனால் இன்று இந்த அவல நிலை வந்துவிட்டதே. இது அறியாமையில் வந்ததல்ல. உணர்ச்சியற்ற நிலைகளால் உருவாக்கப்பட்டது. கல்லணை கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது இன்று வரை கம்பீரமாக நிற்கிறது அங்கு தொடங்கி காமராஜர் காலம்வரை அணைகள் கட்டப்படுவது தொடர்கிறது ஏன் எம்.ஜிஆர் காலத்தில் சேர்வலார் அணையை விரிவுபடுத்தியுள்ளார். அதற்குப் பிறகு வந்தவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? ஏன் அணைமட்டுமா? அதனை ஆட்சியாளர்களிடம் மட்டும்தான் கேட்கவேண்டுமா? நம் ஊரைச்சுற்றி இருந்த நீர்நிலைகள் எங்கே? அதனை நாம் எங்கே தொலைத்தோம்? எப்படித் தொலைத்தோம்? கண்டுபிடித்துக்கொடுக்கச் சொல்வோமா? இல்லை கைபேசியில் கேம் விளையாடுவோமா? கொஞ்ச நஞ்சமா நீர் நிலைகள் அவையெல்லாம் இல்லாததால்தானே இந்தப்பஞ்சம் இப்படித் தலைவிரித்தாடுகிறது. நமது ஊரைச்சுற்றி ஆறு, ஏரி, கிணறு, கண்மாய், கால்வாய், குளம், ஊற்று, பொய்கை, மடை, கேணி, தெப்பக்குளம், தாங்கல், சுனை, குண்டு, குட்டை, ஓடை, ஊருணி, ஆழிக்கிணறு அறிவி, அகழி என்று எத்தனையோ பெயர்களில் அழைக்கப்பட்டன. இப்போது உங்களுக்கு ஒன்று புரிகிறதா இவையெல்லாம் ஊரின் பெயராக அழைக்கப்படுகிறது. காரணம் அது ஊரின் பெயர் அல்ல அந்த நீர் நிலைகள் இருந்ததால் அந்த இடங்கள் எல்லாம் அவ்வாறு அழைக்கப்பட்டு இருக்கிறது இன்று அந்த நீர் நிலைகள் எல்லாம் தொலைக்கபட்டு அவை ஊரின் பெயராகப் பலகையில் எழுதி வைத்திருக்கிறோமே காரணம் நீர் நிலைகளைப் பாடையில் வைத்து கட்டிவிட்டோமோ? அவ்வளவையும் இழந்து விட்டு நாகரீகத்தில் வளர்த்துவிட்டோம் என்று 10ரூபாய் தண்ணீர் வாங்கிக்குடித்துக் கெத்தாகத் திரிகிறோம் என நினைத்து செத்த சவமாகத்திரிகின்றோம். என இன்னும் இந்த எலும்புக்கூடுகளுக்குத் தெரியவில்லை.

இதற்கு எல்லாம் யார் காரணம்? என்னைக் கேட்டால் இறைவனைப் படைத்தவன்தான். இறைவனைப் படைத்தவனை எட்டி உதைக்க வேண்டும்! கடவுளைப் படைத்தவனைக் கண்டதும் சுட வேண்டும் உடனே நான் நாத்திகன் என்று எண்ணிவிடாதீர்கள். கடவுள் நம்மை படைத்தார் ஏற்றுக்கொள்வோம். நாம் கடவுளைப் படைப்பதை நிறுத்திக்கொள்வோம். ஏன் கடவுள் இயற்கையாகவே இருக்கிறார். இறைவனைப் படைக்க வேண்டாம். இறைவனே இயற்கைதான். இயற்கைதான் கடவுள் என்று மனிதர்கள் நம்பியபோது அதனை வணங்கினார்கள் பாதுகாத்தார்கள், பராமரித்தார்கள். பதிலுக்கு இயற்கையும் கொடுத்தது. அழிவினைத் தடுத்தது. சுகாதாரத்தை வளர்த்தது இதனைக்கடந்து இறைவன் இருப்பதாக எண்ணி உருவங்களைப் படைத்து இயற்கையை வெல்ல நினைத்தோம். இப்போது கொல்ல நினைக்கிறோம். மழையை மாரி என்றோம் பூமியை பூமா தேவி என்றோம் நதிகளைத் தேவதைகள் என்றோம். கடவுள்களை மேகக்கலரில் பார்த்தோம். கடவுள் கட்டியிருக்கும் புடவைகளை பசுமைக்கலரில் அணிவித்தோம். வானம் பொழிந்தால் பசுமையாகும் என்பது பாமரனுக்குத் தெரியும் இறைவனிடம் இருந்து வரங்களைப் பெற்றுத்தரும் பூசாரிகள் என்றால் அவர்கள் விவசாயிகள்தான் இதனைக்கூட புரிந்து கொள்ளாத மடையர்களாக எப்போது மாறினோம்?.

இதோ சின்னக்குழந்தைகள் சத்தமிட ஆரம்பித்துவிட்டது. அழும் அந்தக் குழந்தையை அமர்த்த தாய் ஓடிவருவது போல் நாம் அனைவரும் களம் இறங்குவோம். இயற்கையே இறைவன் அதனிடமிருந்து வரங்களைப் பெற்று தரும் பூசாரிகள் விவசாயிகளே! அவை கொடுப்பவையே வரங்கள் என்று புரிந்து கொண்டு வாழ முற்படுவோமே! இல்லை முயற்சியாவது பண்ணுவோமே! விவசாயம் பார்ப்போம்! விவசாயிகளைக் காப்போம்.

ARCHIVES