11

Jun

2022

விக்ரம்…

சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஒரு மையக் கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாய் பதிய வைக்கிறது. அதாவது போதைப்பொருட்கள் மனிதனை அரக்கனாக்குகிறது. மானிடச் சமுதாயத்தை அசிங்கப் படுத்தி அழித்து வருகிறது. ஒரு போதைப் பொருட்களை உட்கொள்ளுகிறவன். நாளும் உபயோகப் படுத்துகிறவனுக்கு தாய் என்றோ தங்கை என்றோ, தாரமென்றோ எண்ணாமல் பாவக் கரியங்களையும் பழி தீர்த்துக் கொள்வதையும் பழக்கமாக வைத்துள்ளான்.

வரலாறுகளில் பல மன்னர்கள் மண்டியிட்டது. மண்ணாய்ப் போனது எல்லாம் அவர்களை அப்போது தாக்கியிருந்த போதைகளினால்தான். பேர், புகழ், கல்வி ஒருவருக்குப் போதை ஏற்படுத்தலாம் இவற்றிலிருந்து தன்னை திருத்தி எளிதில் நல்வழியில் நடக்கலாம். மண், பெண், பொன் என்ற போதை ஆண்டாண்டு காலமாய் நம்மை ஆட்டிப் படைக்கும் போதை இவற்றிலிருந்தும் மனிதன் முயற்சி எடுத்தால் எளிதில் தன் நிலை அடையலாம். ஆனால், மனிதன் மனதை மயக்கும்! கெடுக்கும்! கள், அபின், கஞ்சா போன்ற விதவிதமான மது போன்ற போதைகளுக்கு இன்று மனிதன் அடிமையாகிப் பெயர், கல்வி, கௌவரம், மரியாதை, மானம், அந்தஸ்து அத்தனையும் அழித்துக் கொண்டிருக்கிறான்.

கல்வி வந்த பிறகு பொருளாதாரம் பெருகிய பின்பு மனிதன் நாகரீகத்தில் நடைபோட ஆரம்பித்தார். ஆனால் இன்று மதுக்கடைகள் பெருகிய பிறகு சாக்கடையில் சங்கமித்து விட்டான். சண்டை, சச்சரவுகளோடு சமரசமாகிவிட்டான்.

இன்று எத்தனையோ நண்பர்கள் கணவர்கள், மனைவிகள், உடன்பிறப்புகள் தன் உடன் இருந்த வாழ்ந்த உறவுகளாலே அவர்கள் உட்கொண்ட மதுக்களினாலே உயிர் இழந்தவர்கள் அதிகம். போதை தெளிந்த பிறகு ஐயகோ புத்தி தடுமாறிவிட்டேனே! எனப் புலம்பி என்ன பண்ண?

படிக்க இயலவில்லை, படித்தும் வேலை கிடைக்கவில்லை, நினைத்த பெண் அமையவில்லை. நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை என்று விரக்தியில் ஒரு மருந்தாக அதனை ஒரு விருந்தாகக் குடிக்க ஆரம்பிக்க. பின்பு அது இவர்களைப் பிடித்துப் பித்தனாக்கிவிடுகிறது. பாதை காட்ட வேண்டிய தகப்பனே, பாடம் கற்பிக்கும் ஆசானே தடுமாறிக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் என்ன அவர்களைக் கொண்டாடிக் கொண்டா இருப்பார்கள்?

இன்று கஞ்சா போன்ற பொருட்கள் அதிகமாக கல்லூரி மாணவர்களிடத்தில் புழக்கத்தில் இருக்கிறது. காரணம் என்ன வாழ்க்கையின் விரக்தி. படித்து என்ன ஆகப்போகிறது? எதிர்காலம் என்ன நிலையில் இருக்கும்? என்ற பயம். பொருத்தமாக வழிகாட்ட ஆளில்லையே என்ற ஆதங்கம் உலகைப் புரிந்து கொள்ளாத நிலை. தன்னை அசிங்கப் படுத்திக்கொள்கிறான். இந்தப் போதைப் பொருள் வந்த பிறகு கல்லூரி மாணவன் என்ற நிலையில் இருந்த கொஞ்சக் கௌரவமும் காணாமல் போனது.

உறவுகளுக்குப் பெயர் போன நம் கலாச்சாரம் குடித்து கும்மாளம் இட்ட பின். இச்சை தீர்க்கும். இந்திரன் சந்திரன் ஆகிவிட்டார்கள். ஆசிரியர்களே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் பாதகச் செயலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் பார்ட்டி என்ற பெயரில் வார இறுதியில் அவர்களைப் பாழாக்கி வேலை வாங்கும் வித்தையைக் கற்றும் கொண்டார்கள் ஆண்களும் பெண்களும் அரை நிர்வாணமாய் ஆடுவதை அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சந்ததிகள் தள்ளாடுகிறது, சமூகம் வேடிக்கை பார்க்கிறது. அரசோ கட்டுப்படுத்துவதுபோல் கண்ணாம்பூச்சி ஆடுகிறது கஞ்சா இல்லாத தமிழகத்தை கட்டாயம் உருவாக்குவோம். என்று கர்ஜிக்கின்ற காவல்துறையினரே. நீங்கள் கண்டிப்பாக இருக்கவேண்டியது மதுவிலும் தான். இன்று மது என்னும் அரக்கனால்தான் பல மாபாதகச் செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை மூடாமல் நீங்கள் எந்தப் போதைப் பொருளை அழிந்தாலும் கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒழித்து வைத்த கதையாகிவிடும்.

மதுக்கடைகளால் தான் தமிழக அரசு வாழ்கிறது என்றால் அந்த மானங்கெட்ட அரசு செத்துத் தலையாட்டும் எத்தனையோ குடும்பத்துக்குள் குழப்பத்தை விளைவிக்கிற, உழைக்கின்ற காசையெல்லாம் குடித்து அழிக்கிற குடித்துவிட்டுச் சாக்கடையில் உருளுகிற குடித்துவிட்டு கொலைவெறித்தனமாகத் தாக்குகின்ற காட்சிகளை கண்ணால் காணாமல் இருக்கலாமே? குடித்துவிட்டு அடுத்தவனை ஏசுகின்ற குடிக்கப் பணம் இல்லாமல் அடுத்தவர்கள் பொருளை அபகரிக்கிற குடித்து விட்டு பாலியியல் தொல்லைத் தருகின்ற அயோக்கியர்களை எல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும். கஞ்சாவை ஒழிக்கத் துடிக்கின்ற கவர்மெண்ட் மதுவை ஏன் மடை திறந்து விடுகிறது. மக்களை எல்லாம் தடுமாற விட்டு விட்டு நீங்கள் எப்படி நிலையான ஆட்சி தரமுடியும்?

நல்லவர்களே! நண்பர்களே! நாம் சுத்தமானால்தான் மற்றவர்களைச் சுத்தமாக்க முடியும் வழிகாட்டும் தகப்பனும் வழிபடும் ஆசானும் பாதை காட்டு பகலவனாக எப்போதும் இருக்கவேண்டும். எவர் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்கும் தார்மிக உரிமையை நாம் பெற வேண்டும். குடிகளைச் சுவைக்காத உதடுகள் குடிகளைப் பிடிக்காத விரல்கள் குடிகளைப் பிடிக்காத மனங்கள் பூமி எங்கும் மலர இறைவனைப் பிராத்திப்போம். இறைவன் சித்தத்தினால் நாம் அனைவரும் சுத்தமாவோம்.

“மதுவை பொதுவாக்கும் சமூகம்
மண்ணோடு மண்ணாகிப் போகும்”

ARCHIVES