06

Dec

2011

வாழ்க நீ என வாழ்த்துகிறேன்…

அருட் .தந்தை.Y.S.யாகு சே.ச

தாளாளர், தலைமையாசிரியர், புனித சவேரியர், மேல் நிலைப்பள்ளி, தூத்துக்குடி

என் போதி மரம்

வாழ்க நீ என வாழ்த்துகிறேன்…

என் இனியவனே,
நான் எண்ணற்ற எழுத்தாளர்களைப் பார்த்திருக்கிறேன்.  எண்ணற்ற விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறேன். அத்தனை எழுத்தாளர்களுக்கு மத்தியில் இவரது எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், இன்றைய எதார்த்த நிலையிலிருந்து அறைகூவல் விடுக்கும் ஆன்மீகவாதி. இன்றைய இளைஞர்களின் இதயங்களைத் தொட்டுப் பார்த்து அதில் துயில் கொண்டிருந்த உணர்வுகளை உசுப்பி விட்டு உச்சம் தொடத் துடிக்கும் ஒரு உண்மை விளம்பி. ஆகவே இவரது எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.
இவரது  என் போதிமரம்  என்ற நூலைக் காணும் போது இன்னொரு இதிகாசம் புரட்டப்பட்டிருக்கிறது. புறநானூறு ஒன்று புறப்பட்டிருக்கிறது. அன்று சிறுவன் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்பியது போல இவரது கையில் வேலை(பேனா)க் கொடுத்துப் பாருக்குள் அனுப்பப்பட்டிருக்கிறது.  இது விலாவைக் குத்தும் வேலல்ல. இதயத்தை இணைக்கும் வேல்.

இவரது வளர்ச்சியில் எப்போதும் நான் உண்டு.

இவருக்கென்று என் வாழ்வில் சில நாட்களும் உண்டு. இவரது தமிழ் எனக்குப் பிடிக்கும். இவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளின் உணர்ச்சியும் என் இதயத்தில் பட்டுத் தெரிக்கும். இவருடைய வார்த்தை, வாலிபத்தைச் செதுக்கிய வைர வார்த்தைகள். இதனால் உள்ளம் பூரிக்கின்றேன்.

உவகை அடைகின்றேன். இவரைப் பல நேரங்களில் தட்டிக் கொடுத்திருக்கிறேன்.  புதிய தடங்களையும் காட்டி நின்றிருக்கிறேன்.  எத்தனை வேதனையில் வெந்தாலும், விமர்சனத்தால் நொந்தாலும், வாளால் கீறினாலும், வார்த்தையால் கிழித்தாலும் தம்பி என்று அழைத்து விட்டால் எரியும் சாம்பலிலிருந்துகூட, செம்பொத்துப் பறவையாய் சிறகடித்து வருவார்.

இவன் முரடன்தான்
முன்கோபிதான்
இவனைத் திருத்த முடியாது
ஆனால் திருப்ப முடியும்
பாசத்தால்
பாசத்தால் மட்டுமே!

என் போதிமரம்‘ என்ற இந்த நூலோடு வந்திருக்கும் இந்த இளவலை உங்கள் கரங்களில் தருகிறேன். இந்நூலைப் புரட்டிப் பாருங்கள். அது உங்களைப் புரட்டிப் பார்க்கும். வாழ்த்துங்கள்! வளரட்டும்! வரவேற்றுக் கொள்ளுங்கள். மகிழட்டும்!

ஆசீருடன்,

அருட் .தந்தை.Y.S.யாகு சே.ச.

ARCHIVES