11

Aug

2017

யாருடன் பயணக்கின்றோம்…

வாழ்கையும் ஒருவித பயணம்தான.; ஏதோ அடர்ந்த காட்டுக்குள் தனித்து விடப்பட்டநிலையில் அமைவதல்ல நமதுபயணம். அன்றாடப் பணிக்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இரயில் நிலையத்தில் இருக்கும் பரபரப்பு, ஒரு சந்தையில் ஏற்படுகின்ற சலசலப்பு நமது வாழ்க்கையிலும் இருக்கும். ஆனால் இவையனைத்தும் உலகை நோக்கும் போது நம் உறவை நோக்கினால்! நம் தொடர்பை நோக்கினால்! இன்னும் வாழ்க்கையில் பல சுவையான அனுபவங்கள் தென்படும்.

ஒரு நான்கைந்து பேர் காரில் நள்ளிரவில் பயணித்துக்கொண்டிருந்தபோது. அதன் ஓட்டுநர் 100 கி.மீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த காரை நிறுத்தினார். அவரோடு முன்சீட்டில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி தயவு செய்து பின்னால் சென்று தூங்குங்கள் எனக்கும் அந்த தூக்கம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்றார். இதன்பொருள் அப்போது எனக்குப்புரியவில்லை. ஆனால் அதனை பின்பு நினைத்துப்பார்க்கும்போது ஏராளமான விசயங்கள் நெஞ்சில் நிழலாடின.

பல நேரங்களில் நமது செயல்பாடுகள்கூட நமக்கு அருகிலிருப்பவர்களை வைத்துத்தான் அமைகிறது. உயர்வாகச் சிந்திப்பவர்களுடன் பயணித்தால் உயர்வாக இருக்கிறது. குறை கூறுகிறவர்களின் கூட இருந்தால் குறைகளைப் பார்க்கும் குறுகிய எண்ணம் நம் கூடப்பிறந்துவிடுகிறது. கொடுக்கிறவர்கள் கூட இருந்தால் கொடுக்கவும், கொள்ளையடிப்பவர்கள் பக்கத்தில் இருந்தால் கொள்ளையடிக்கவும், குடிப்பவர்கள் கூட இருந்தால் விரைவில் தள்ளாடவும், கோள் மூட்டுபவர்களுடன் இருந்தால் யாரையும் சந்தேகப்படவும் கற்றுக்கொள்கிறோம். ஆகவே நம்மைப் பெரும்பாலும் தீர்மானிப்பது நாம்; யாருடன் பயணிக்கிறோம் என்பதுதான். எனவேதான் ஓட்டுநர் ஒருபோதும் உறங்குபவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவிரும்புவதில்லை.

எல்லோருக்குள்ளும் ஒரு புரட்சி இருக்கிறது. எல்லோர் மனதிலும் ஒரு கனவு இருக்கிறது. அதனை அடைய எத்தகையவரோடு இணையவேண்டும்? எத்தகையவரோடு பயணிக்கவேண்டும்? நமது பக்கத்தில் இருப்பவர்கள் யார்? நம்பிக்கைக்கு உரியவர்கள் யார்? நம் வளர்ச்சியில் பங்கெடுப்பவரா? உற்சகாமானவரா? இதற்கு முன் பல சாதனைக்குச் சொந்தக்காரரா? சாதியைச் சொல்லி இணைக்கிறாரா? பணத்தை நீட்டி, பாசத்தைக்காட்டி அழைக்கிறாரா? கோப்பையை நிரப்பி வாழ்க்கையை வழிய விடுகிறாரா? சிந்திப்போம்.

எடுத்துரைக்கும் புலவர்கள் இல்லாததால் எதிரிகளே இல்லாமல் சரிந்த சாம்ராஜ்யத்தை சரித்திரத்தில் நாம் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பல முடி சூடா மன்னர்கள்கூட தங்கள் பக்கத்தில் இருந்த தவறான மனிதர்களால் தரைதட்டிய கப்பலாய் தாறுமாறாகப் பயணித்து சுக்கானை இழந்து சுக்கு நூறாகிப் போனதையும் அறிந்திருக்கிறோம்.

இதிகாசங்களில் கூட கர்ணனும், கும்பகர்ணணும் செஞ்சோற்றுக்கடன் களித்தவர்கள்தான்; இருப்பினும் அவர்கள் இருந்த இடம் தவறானதால் அவர்களும் தவறானவர்களாகவே மாறிவிட்டனர். அதுவும் தவறுதானே.

பட்டம் பதவிக்காகச் சுக்ரீவனும், விபிசுணனும் தம்மவர்களைக் காட்டிக்கொடுத்து சகோதரர்களை அழித்து பதவி கொடுப்பவர்கள் பாதம்கழுவும் பரிதாபத்துக்குரியவர்கள். ஆனால் வெளியில் தாங்கள் பட்டாபிசேகம் சூடிக்கொண்டு இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களோடு இருந்துவிடாதீர்கள்.

இராமாயாணத்தில் கூனியும், மகாபாரதத்தில் சகுனியும் உடனிருந்தே கொல்லும் உத்தமர்கள், கூட இருந்து குழிபரிப்பவர்கள் அல்ல. குழிபறிப்பதற்காகக் கூடஇருப்பவர்கள் அவர்கள். ஆட்டம் தெரியமால் ஆடிவிட்டால் அதள பாதாளத்தில் இருப்போம்.

எனவே எதிர்பார்ப்பும் வேண்டாம், ஏமாறவும் வேண்டாம். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள், உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை விரும்புவார்கள். கொஞ்சம் சுற்றிப்பாருங்கள் உங்கள் தோழமையில் இருப்பவர் யார்?

யாராக இருந்தாலும் உங்களை உயர்த்துபவர்களாக இருக்க வேண்டும். உங்களால் உயர்பவராக இருக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர்தர வரா.

ARCHIVES