25

Nov

2022

மரத்தில் ஏறிவிட்டான்…

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் கேட்ட பாடல் நமக்கு நினைவிற்கு வருகிறது அப்போது கேட்ட பாடல்தான் “மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்” என்பதாகும். இப்பாடலை எழுதிய கண்ணதாசன் முதலில் எழுதியது “மனிதன் மாறிவிட்டான் மரத்தில் ஏறிவிட்டான்” என்பது தான். உடனே உடனிருந்தவர்கள் அனைவரும் இப்போது மனிதன் பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று நாகரீகத்தில் நடைபோட்டுக் கொண்டு இருக்கிறான். இப்போது நீங்கள் மரத்தில் ஏறிவிட்டான் என்று எழுதினால் எப்படி? என்று கேட்டவுடன் அவர் தமது வரியை மாற்றிக் கொண்டார் மரத்தில் ஏறியதை மதத்தில் ஏறிவிட்டான் என மாற்றிக் கொண்டார் காரணம் அவரைப் பொறுத்தமட்டில் மரத்தில் ஏறியதும், மதத்தில் ஏறியதும் ஒன்றுதான்.

மரத்தில் ஏறிவிட்டான் என்பதன் பொருள் என்ன? மனிதன் மரத்தில் இருந்து இறங்கியவன் அதாவது டார்வின் கொள்கையின் படி மனிதன் குரங்கிலிருந்து மனிதனாகப் பிறந்தவன் குரங்கின் சேட்டைகளிலிருந்து தெளிவு பெற்று தன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு குரங்கிலிருந்து மனிதனாய் மாறிவிட்டான் என்பதன் அடையாளமே அவன் மரத்திலிருந்து இறங்கிவிட்டான் என்பது ஆனால் இப்போது தனக்குள் ஒரு தெளிவும் இல்லாமல் தான் செய்கிறது என்னவென்றும் புரியாமல் தான் தவறு செய்கிறோம் என்பதனையும் உணராமல் தன்னைத் திருத்திக் கொள்ளாமல் தான் செய்வதே சரி என நினைக்கின்ற மிருகத் தனமான உணர்வே மீண்டும் மரத்தில் ஏறிவிட்டதாகும்.

விவிலியத்தில் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது அதாவது இயேசு ஒரு இடத்திலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணித்துக் கொண்டு இருக்கும்போது அவரைக் காண வழியில் இருந்த ஒரு காட்டு அத்திமரத்தில் ஒரு மனிதன் ஏறி அமர்ந்திருப்பான் அவனைப் பார்த்து இயேசு சக்கேயுவே! மரத்தில் இருந்து இறங்கி வா! என்பார் அவனும் இறங்கி வந்து இயேசுவைத் தொழுது மனம் மாறி இயேசுவிடம் கடவுளே என்னுள் உள்ளதைப் பாதியை இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறேன். எவரையாவது ஏமாற்றி எதையாவது பெற்றிருந்தால் நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறேன் என்பான் இதுவே சக்கேயுவின் மனமாற்றம் எனக் கூறப்படுகிறது.

ஆன்மீகத்தின் படி அவர்கள் இக்கதைக்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கலாம். ஆனால் அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுப்பது என்றால் மரத்திற்கு மரம் தாவிப் பிழைத்து வாழ்ந்து கொண்டிருந்த குரங்கு இனம் காலப்போக்கில தன் குணத்தை மாற்றிக் கொண்டு நவீன உலகில் நடைபோட்டு நாகரீகப் பாதையில் நடந்து வந்து ஆறாவது அறிவால் ஆட்கொள்ளப்பட்டு மானிட உரு தரித்து மனிதன் என்ற நிலைக்கு வந்தான்.

அக்கதையில் சக்கேயு என்ற மனிதன் மனம் மாறி மனிதனாகி மரத்தில் இருந்து இறங்கிவிட்டதாக அதாவது குரங்கிலிருந்து மாறிவிட்டதற்கு அடையாளமாக இரண்டு வாக்குறுதிகள் கொடுக்கிறார் ஒன்று எனக்கு உரியதில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். குரங்கானது எதையும் அடுத்தவர்களுக்குக் கொடுக்காது அனைத்தையும் புடுங்கி வாயிலும் கையிலும் வைத்துக்கொள்ளும் அதேபோல் தான், தான் சேர்த்த செல்வங்களையெல்லாம் தனக்கென வைத்துக் கொண்ட சக்கேயுவை குரங்காக நினைத்து அவனை மரத்தில் ஏறி இருந்தான் என்கிறது விவிலியம் எதையாவது பறித்திருந்தால் அதனை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறேன் என்பான். பறித்துத் தின்பது குரங்கு இனம் அடுத்தவர் மரங்களில் எல்லாம் அபகரிப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைத்திருக்கிற பொருட்களைப் புடுங்கித் தின்பதும் குரங்கு இனம் அதனால் தான் சக்கேயு திருப்பிக் கொடுக்கிறேன் என்றவுடன் குரங்கிலிருந்து மனிதனாய் மாறிவிட்டான் அதனால் அவன் மரத்திலிருந்து இறங்கிவிட்டான்.

ஆனால் இப்போது நாம் மரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறோம். மரத்தில் மட்டுமல்ல மதத்தின் மீதும் ஏறிக் கொண்டிருக்கிறோம். குரங்குகளுக்குள் ஏற்படுகிற சண்டையைப்போல நாமும் மதத்தின் பேரினால் ஏற்படுகிற சண்டையினால் மறுபடியும் நாம் குரங்காகிறோம். கட்டுக்கோப்பான கல்வியைக் கையில் வைத்திருந்தாலும் கட்டுப்பாடில்லாத வாழ்க்கையால் காட்டுமிராண்டி ஆகிறோம். நாகரீக உடைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருகின்ற இக்காலத்தில் அதனை அணிகின்ற நாகரீக மனிதன் தான் நாளுக்கு நாள் புதைந்து கொண்டு இருக்கிறான்.

சமத்துவமில்லாத சமுதாயம் சமாதிகள் நிறைந்த சுடுகாடு எனவே சமத்துவம் காண பட்டம், பதவி, பணம். போதை, கௌரவம், அந்தஸ்து, சாதி, மதம் போன்ற மரங்களில் ஏறி நின்று பிறரை இகழ்ச்சியாகப் பார்க்கும் மூடர்களே கொஞ்சம் இறங்கி வாருங்கள். சமத்துவப் பூமியில்தான் சொர்க்கம் இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் எதற்கு? இதயம் இருப்பது இணைவதற்காக இதயம் இருப்பது பகிர்வதற்காக, பொறுப்பதற்காக துடிப்பதற்காக இதயத்தால் இணைவோம் புதிய உதயம் காண்போம் இனிவரும் காலம் இன்பமாக இறங்கி வருவோம்!

“இறங்கி வா!
இணைந்து கொள்வோம்
மரத்திலிருந்தும் நல்
மனத்தோடும்”

ARCHIVES