28

Jan

2022

பள்ளிகள் மீது பாய்வது ஏன்?….

சமீபகாலமாக ஊடகங்களும், பத்திரிக்கைகளும் இடும் ஓலம் முழுவதும் பள்ளிகளும் ஆசிரியர்களும்தான். ஏனோ வேறு எந்த துறையிலும் தவறே நடவாததுபோல், கல்வித்துறை மட்டும் தான் நாட்டையும் உலகையும் களங்கப்படுத்துவதுபோல் ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறது. எத்துறையில் இல்லை? களங்கமும் குறைபாடும் எல்லாத்துறையிலுமே இருக்கிறது. குற்றங்கள் களையப்பட வேண்டும். குற்றவாளிகள், தண்டிக்கப்பட வேண்டும் அதனை அரசும், நீதிமன்றங்களும் கண்டிப்பாக செய்யும். செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு அதனை அரசியலாக்கிப் பிழைப்புத் தேடுவதைவிட பிச்சையெடுத்துப் பிழைப்பது சாலச்சிறந்தது.

இப்போது எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது. மாணவிகள் பாலியல் வன்முறை இதனை வெளிச்சம் போட்டு வெளியில் சொல்வது வெட்கக் கேடான விசயமில்லையா? அதனை முறையாக விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்து விட வேண்டியது தானே. அதனை வெளியில் சொல்வதனால் குற்றம் குறைந்துவிடப் போகிறதா? அது குறைந்தால் நீங்கள் கூவிக்கொண்டு திரியலாம். ஆனால் இதன் நோக்கங்கள் பெரும்பாலும் கல்வி நிலையங்களின் மீது உள்ள வன்மத்தைக் காட்டுகிறது.

நன்றாக யோசித்துப் பாருங்கள் கல்வி நிலையங்கள் மீது வன்முறையைத் தூண்டுவது, அதனைத் தடுக்க நினைப்பது அனைவரும் அர்ச்சகராகலாம் என்றவுடன் கொதிப்பது. இல்லையென்றால் எதற்கும் சாதி, மதச்சாயம் பூசி உண்மைகளைக் கொல்ல நினைப்பது கல்வி நிலையங்களைப் போட்டுத் தாக்குவது என கொஞ்சம் கொஞ்சமாக நாடு நகர்ந்து சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது.

பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்றோம். பழம்பெருமைகள் பேசித்திரிந்தோம். ஆனால் நன்றாக யோசித்துப்பாருங்கள் நமக்குக் கல்வி எப்போது கிடைத்தது? நமது பாட்டன் முப்பாட்டன் ஏன் கல்வி கற்க முடியாமல் போனார்கள்? குருகுலம் என வைத்துக் குறிப்பிட்டவர்களுக்குக் கல்வி மற்றபேருக்கு கிடையாது என்ற நிலைதானே இருந்தது. அதிலும் பெண்களுக்குக் கல்வி எப்போது வந்தது யோசித்துப்பாருங்கள். எங்கிருந்தோ வந்த இங்கிலாந்துக்காரனால் தானே அனைவரும் கல்வி கற்க ஆரம்பித்தோம். அதுவரை அம்பேத்கார் எப்படிக் கல்வி கற்றார் என்று படித்ததை மறந்து விட்டோமா?

ஆக நாமும் நமது வீட்டுப்பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்க மாட்டோம். கல்வி கொடுப்பவர்களையும் ஏதாவது காரணம் சொல்லி தடுத்துக் கொண்டே இருப்போம். இது என்ன நியாயம்? அதற்குமுன் நம் நாட்டில் நடந்தது என்ன? சிறுவயதிலேயே திருமணம் முடித்து ஒரு வேளை அது இளம்வயதிலேயே விதவையாகி விட்டால் அந்த பெண் குழந்தைகளை மொட்டை அடித்து மொட்டைப் பாப்பாத்திகளாகக் கோயில்களில் கொண்டுபோய் அடிமை வேலைகளைச் செய்ய வைத்தோம். அதுதானே நமது கேவலமான வரலாறு! குழந்தை திருமணத்தைத் தடுத்தது யார்? உடன்கட்டை ஏறுவதை நிறுத்தியது யார்? சாதிப் பாகுபாடுகளை அகற்றியது யார்? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கட்டும்.

ஆக இப்போது நம்மை அறியாமலேயே ஒரு ஆதிக்க சக்தி தாழ்ந்தவர்கள் உயர்வதையும் பெண்கள் விடுதலை பெறுவதையும் விரும்பவில்லை அதனை நேரிடையாகச் சொல்ல முடியாமல் மதம் என்ற சாயத்தைப் பூசிக் கொண்டு மாறுவேடம் போட்டுக் கொண்டு மற்றவர்களை மடையர்களாக்குகிறது. மதம் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை அவர்களை மற்றவர்கள் மாற்றவோ தடை செய்யவோ முடியாது அது மனம் சம்பந்தப்பட்டது. அறிவின் மூலம் எடைபோடுவது முட்டாள்தனமானது.

பெண்குழந்தைக்கு நீதி வேண்டும். நிச்சயமாக அப்படியென்றால் காஷ்மீர் ஹாசிபாவிற்கு நடந்த கொடுமையின்போது எங்கே போனீர்கள்? அண்ணா விட்டுவிடுங்கள் என்று கோயம்புத்தூரில் ஒரு கூட்டமே கதறியதே அது உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? நாகர்கோவிலில் ஒருவன் எத்தனையோ பெண்களை நாசப்படுத்தினானே அப்போதெல்லாம் உங்களின் குரல் கேட்கவில்லையே இப்போதாவது உங்களுடைய உள்ளர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?

எத்தனையோ கிறிஸ்தவ நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் படிப்பதெல்லாம் பல சமயத்துப் பிள்ளைகள் தான் இதுவரை எந்தப் பாகுபாடும் பார்த்ததில்லையே! உங்கள் பயமெல்லாம் இது இயங்கிக் கொண்டு இருந்தால் ஏழைகளும், புறக்கணிக்கப்பட்டவர்களும், தலீத்துகளும், பெண்களும் முன்னேறிவிடுவார்கள். எல்லோரும் சமமாகிவிட்டால் உங்கள் எதேச்சதிகாரம் எடுபடாது என்பதுதானே! நல்லது செய்யாவிட்டாலும் நல்லவற்றைத் தடுக்காதீர்கள் தவறு செய்தால் தட்டிக்கேளுங்கள். குற்றவாளிகளை தண்டியுங்கள் அதற்கு ஏன் கூடாரத்தைக் கொழுத்துகிறீர்கள்.

எத்துறையில் களங்கம் இல்லை. அதனை களைய முற்படுவோம். கலகம் செய்வதைத் தவிர்ப்போம். நீதித்துறையில் கூட பாதிக்குமேல் வக்கில்கள் வாதத்தால் உண்மை தடம் புரண்டு இருக்கிறது. இதனால் தூக்குத் தண்டனைத் தீர்ப்பு எழுதியபின் உடைத்த பேனா முட்களைவிட தவறான தீர்ப்பு எழுதியபின் நொறுக்கப்பட்ட பேனாக்களே அதிகம். குற்றவாளிகளைத் தண்டிப்பதை விட்டுவிட்டு கூட இருப்பவர்களையெல்லாம் விமர்சிப்பது முட்டாள்தனமானது. அதற்குமுன் உங்களை ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். ஒருபாடல் உண்டு நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள். உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னதை இங்கு சொல்ல விரும்புகிறேன். உங்களில் தவறு இல்லை என்றால் பிறரின் தவறினை தட்டிக்கேளுங்கள் தாராளமாக…

தொழுகிற கோயில்களை எல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்”

– பாரதி

ARCHIVES