28

Jul

2014

பனிமய அன்னையே! பாதுகாத்தருளும் என்னையே!

பனிமய அன்னையே! பாதுகாத்தருளும் என்னையே!Matha

“யார் கொடுத்த அன்பையும் ஒருதாய் கொடுக்க முடியும்! – ஒருதாய் கொடுத்த அன்பை யார் கொடுக்க முடியும்”

பூமியில் பிறக்கும் உயிர்கள் எல்லாம் முதலில் முகம் பார்க்கும் நேரில் நிற்கும் கடவுள் தாய் தமிழில் அம்மா தாய் அன்னை மாதா ஆத்தா என்று பலவாறு அழைக்கப்பட்டாலும் பாசத்தின் இருப்பிடம் அம்மா சோகத்தைத் தேற்றுமிடம் கண்ணீரைத் துடைக்கும் விரல்கள் அழும்போது ஆறுதல் அளிக்கும் குரல்கள் துவழும்போது மார்போடு அணைக்கும் கரங்கள் மகிழ்ச்சியின் போது மடியில் வைத்து உச்சிமுகரும் உள்ளம் கடைவீதிகளிலும் கடற்கரையிலும் கையைப் பிடித்துக்கொண்டு உலகைக்காட்டும் கைகள் நாம் வரக்கால தாமதமானால் காத்திருக்கும் சில நேரம் கண்ணீர் ததும்பும் இதயம் காயப் படுமுன் அவள் கண்களில் வழியும் கண்ணீர் இப்படி எத்தனையோ பரிணாமத்துடன் மொத்த உருவமாய்  புமியில் நடமாடும் தெய்வம் தாய் இதேபோல் இப்புமியில் திக்கற்றவர்களாய் வாழ்க்கைத் திசை தெரியாதவர்களாய் அனாதைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் நாளெல்லாம் உடனிருக்கும் தாய் தெய்வம. இத்தெய்வம் வீட்டைக்காக்கும் ஊரைக்காக்கும் நாட்டைக்காக்கும் இதனைத்தான் எல்லைத் தெய்வமாக காவல் தெய்வமாக கலங்கரை விளக்கமாக விடிவெள்ளியாக நாம் காலங் காலமாய் வணங்கி வருகிறோம்.

தென் தமிழகத்தில் முத்துக்குளிக்கும் துறைமுகத்தைக் கொண்ட முத்து நகரம்தான் தூத்துக்குடி மாநகரம். கடலலைகள் தாலாட்டில் கரையோரம் அமர்ந்திருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் இந்த ஊர், இவ்வுரில் கிழக்குப்பகுதியில் அலைகள் உரசிச் செல்லும் துறைமுகத்திற்கு அருகில் ஊரின் விடிமுகமாகவும் விடியலின் வெளிச்சமாகவும் வீற்றிருக்கும் அன்னைதான் எங்கள் பனிமய அன்னை. ஊரை அடையாளப் படுத்தும் ஒரு சில சிறப்புக்களில் உயர்ந்து நிற்பது தான் இந்தப் பனிமய அன்னை ஆலயமாகும் இதற்கென்று இன்றளவும் தனிச் சிறப்புகள் உண்டு.

இந்த நகரில் வீற்றிருக்கும் பனிமய அன்னை ஆலயத்தை முதலில் உருவாக்கித் தந்தவர்கள் இயேசு சபையைச் சேர்ந்த குருக்கள் இயேசுவின் சீடர்களாய் இருந்த மீனவர்களைப்போல கள்ளம் கபடமில்லாது. கடவுள் பக்தி மிகுந்து கடலின் மீது பயணிக்கும் போது கடவுளின் மடியிலிருக்கிற அனுபவமாக எண்ணி அனுதினமும் மீன்பாட்டிற்குச் செல்லும் பரதவ மக்களுக்கு ஆன்மீக தாகம் தணிக்கவும் சமூக அக்கரையை வளர்க்கவும் தன் பணியைத்  தொடர 1542 ஆம் ஆண்டில் இத்தாலி போர்த்துக்கல் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கிறிஸ்தவப் பாதரியார்கள் ;வந்தார்கள். இவ்வாறு வந்த இயேசு சபைக் குருக்கள் 1579 ஆம் ஆண்டு தங்கள் சபைக்கான தலைமை இல்லத்தையும் அதன் அருகிலேயே பனிமய மாதவிற்கு ஒரு ஆலயத்தையும் எழுப்பினார்கள்.

இருளில் கிடந்த மக்கள் பேரொளியைக் கண்டனர் என்று விவிலிய நூல் கூறுவதுபோல பரதகுல மக்களுக்குக் கரையில் நம் தாய் நம்மைக் காப்பாற்ற காலமும் காத்திருக்கிறாள் என்ற நம்பிக்கை வளர வளர அவர்களுக்குள் ஆன்மீகமும் வளர ஆரம்பித்தது ஆனந்தமும் ஒளிர ஆரம்பித்தது. நாளுக்கு நாள் மக்கள் நம்பிக்கையோடு ஆலயம் செல்ல ஆரம்பித்தார்கள். கடலில் படகில் பயணிக்கும் போது சு10ரைக் காற்றோ ஆழிப் பேரலையோ அதிகமாகி ஆர்ப்பரிக்கும் போதெல்லாம். கடலுக்குள் சென்றவர்களை எண்ணி கரையிலிருப்பவர்கள் கலங்கும் போதெல்லாம் கரையில் சென்று அழுதவர்களைவிட அன்னையின் காலடியில் வந்து தொழுதவர்களே அதிகம்.

மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இந்த ஆலயத்தை ஒருமுறை மதுரை நாயக்கர் கயத்தாறு மன்னன் துணையோடு படையெடுத்து வந்து தூத்துக்குடியைத் தாக்கி ஆலயத்தைத் தரைமட்டமாக்கினான்.

மாதா மீது மாறாத பக்தி கொண்ட இறைமக்களோ இடிபாடுகளுக்குள் சிக்கிய மாதா சுரூபத்தை மீட்டெடுத்து முயல் தீவில் வைத்து வணங்கி வந்தார்கள் மீண்டும் 1606 ஆம் ஆண்டில் தூத்துக்குடிக்குக் கொண்டு வந்து அதே இடத்தில் பனிமய அன்னைக்குப் புதிய ஆலயம் எழுப்பி மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு பல்வேறு நேரங்களில் இயற்கை இடர்களாலும் மன்னர்களின் படையெடுப்புகளாலும் இறைமக்கள்களின் மோதல்களினாலும் பல்வேறு தடைகளைத் தாண்டி நகரத்தின் நாயகியாக வீற்றிக்கும் அன்னைக்கு அடுத்து ஒரு ஆபத்து இடி என இறங்கியது.

panimaiyi annai

Annai church

1965 ஆம் ஆண்டு டச்சுக்காராகள் வந்து இந்தத் தேவலயத்தை இடித்துவிட்டு அங்கு டச்சுக்காரர்களை அடக்கம் செய்யும் கல்லறைத் தோட்டமாக மாற்றினர். அச்சமயத்தில் தான் நகரிலிருந்து விரட்டப்பட்ட இயேசு சபைப் குருக்கள் மீண்டும் கரையோரம் உள்ள நகரங்களில் குடியேற ஆரம்பித்தார்கள். இச் சமயத்தில் துப்பாஸ்பட்டியில் வாழ்ந்த சுவாமி விஜிவியுஸ் மான்சி 1699 ம் ஆண்டில் தூத்துக்குடிக்குத்; திரும்பி வந்து தனக்கென ஒரு சிறிய இல்லத்தை அமைத்து அதன் மேல் தளத்தில் அன்னையை வைத்து வழிபட்டு வந்தார். அப்போது 1707 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. ஊரை அழித்து விடும் ஒலம் கேட்டது. நகரை இருள் நன்றாக விழுங்கியிருந்த மரண பயத்தைத் தவிர மற்ற எதையும் மக்கள் மனதில் நினைக்க முடியாதவாறு இயற்கை அவர்களை அரற்றிக் கொண்டிருந்தது. தந்தை அவர்கள் அன்னையின் முன் மண்டியிட்டு வேண்டிக் கொண்டிருந்தார். மெழுவர்த்தி அணைந்தது தந்தை மெழுவர்த்தியை ஏற்றுவதற்கு அந்த இடத்தை விட்டு அகறபோது வானம் குமுற மின்னல் அச்சுறுத்த நகரே நடுங்குமளவிற்கு வானத்திலிருந்து இடி இறங்கியது. நேராக மாதா சுரூபத்தின் மீது விழுந்தது. ஆனால் மாத சுருபத்திற்கு எவ்விதப் பாதிப்புமில்லாது காத்ததோடு. விளக்கை அணைத்து தந்தையை வெளியேற்றி அவரையும் சாவின் பிடியிருந்து அன்னை காத்ததை இன்றளவும் மக்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

இடியின் பிடியில் சிக்கித்தவித்த இருளின் தவிப்பில் மூழ்கிக் கிடந்த மக்களின் துயர் துடைக்க அன்னை தன் மடிதாங்கி இடியையும் சிறு பொடியாக்கி மக்களைக் காத்ததால் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விடியல் தரும் நட்சத்திரமாக பயணிப்பவரின் பாதுகாவலியாக. ஏழைகளின் இல்லத்து அரசியாக விண்ணகத்தின் வாசலாக நோயாளிகளுக்கு மருத்துவராக அனாதைகளுக்கு நம்பிக்கையாக மக்களின் மனதில் மாறாது அரியணைக் கட்டிலில் அமர்ந்திருக்கிறாள்.

பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை கொடுத்தாள் பேரலையில் சிக்கியவர்களைக் கரையில் வந்து சேர்த்தாள் இயந்திரங்களில் வேலை செய்பவர்களை ஆபத்து இல்லாமல் காத்தாள் எப்போதும் பயணிப்பவர்களை விபத்தில்லாமல் காத்தாள். கல்விக்குத் துணையானாள் எந்தக் கலக்கத்திற்கும் மருந்தானாள் எவர் இல்லாதபோதும் நம் அன்னை இருக்கிறாள் என்ற நம்பிக்கையை நாளெல்லாம் விதைத்து வந்தார். ஆனால் மக்கள் மட்டுமே தன் தவறுகளாலும் செய்யத் தவறிய நன்மைகளாலும் அன்னையை விட்டு அகன்றபோதிலும் அவளே தேடி வந்து ஒடி வந்து அணைத்துக் கொண்டாள். தன்னோடு இணைத்துக் கொண்டாள். இதனால் தான் 2004 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 26 ஆம் நாள் உலக உருண்டையை சுனாமி உருட்டிப் போட்ட போதும் தமிழகத்தில் பல பகுதிகளில் மண் மூடியதால் கண்மூடி கலங்கிய போதும் அன்னையின் பாதத்தில்     இருந்த இந்த மக்களை எவ்வித துன்பமும் இல்லாமல் இந்நாள் வரை காத்து வருகிறாள். இந்த அன்னையின் மீது அளவற்ற பற்றுக் கொண்ட மக்கள் அவளுக்குத் தங்கத்தேர் இழுத்து தங்கள் பகதியை வெளிப்படுத்துகிறார்கள். தூத்துக்குடியில் பல்வேறு பகுதியிலிருந்து பாத யாத்திரையாகவும் பக்தி ஒழுக்கங்களுடன் வந்து வழிபட்டுச் செல்கிறாள். பல்வேறு மக்கள் தொலை தூரத்திலிருந்து பக்திமாலை அணிந்து பாதசாரியாக நடந்து வந்து தாங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள்.

இத்தகைய அன்னை எங்கள் நகரில் அமர்ந்திருப்பது எங்களுக்குச் சிறப்பு. இந்த அன்னையின் துணையோடு என்னாளும் வாழும் போது எங்களுக்கு ஏது இழப்பு? எங்களை என்னாளும் காத்து வரும் அன்னையே! ஏழைகளின் எந்தலே! நீ அருகிலிருக்கும் வரை எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. உன் அருள் ஒன்றேபோதும் வேரென்ன வேண்டும் இன்றும் என்றும் என்னாளும் எங்களைக்காத்து வரும் எங்கள் பனிமயத் தாயே உம்மிடம் மனமுருகி வேண்டுகிறோம் மன்றாடிக் கேட்கின்றோம்.

என்னாளும் காத்தருள்வாய்!

எல்லேரையும் வாழ்வித்திடுவாய்!

மரியே வாழ்க!

ARCHIVES