18

Jan

2017

நீங்க நல்லா இருக்கணும்

wishing-youவருடம் பிறக்கிறது. வாழ்த்துக்கள் குவிகிறது. அதில் ஒன்று இந்த வாழ்த்தாகவும் இருக்கலாம், இருக்கணும். நீங்களும் அடிக்கடி இப்படி பிறரை வாழ்த்தி இருப்பீர்கள் வாழ்த்தும் பெற்றிருப்பீர்கள் இப்படிப்பட்ட வாழ்த்துக்களை எந்த இடத்தில் எச்சூழலில் சொல்லுகிறார்கள் என்று சற்று யோசித்துப் பார்ப்போம்.

இந்த வாழ்த்தை பிறர் நம்மைப் பார்த்து வாழ்த்தும்போது நமக்குள் ஒரு சந்தோசம் வருகிறது. நம்மை நல்ல மனிதராக சமூகம் அங்கீகரிப்பதாக நமக்குள் உள்ளுணர்வு ஏற்படுகிறது. நமக்கு நடக்கின்ற நல்ல செயல்கள் எல்லாம் இப்படி பலர் வாழ்த்துவதால் நமக்கு வாய்க்கிறது என்ற எண்ணமும் ஏற்படுகிறது. நமக்கு சிறு துன்பங்கள் வந்தால் கூட அது விரைவில் கடந்து போகும் ஏனென்றால் நாம் எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்கிறோம் என்ற பெருந்தன்மை. ஒருவாழ்த்து இன்னும் பல நல்லகாரியங்களை செய்யத்தூண்டுகிறது. நமக்கும் அது நேர்மறை எண்ணங்களை வளர்த்து உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சரி இந்த வாழ்த்துக்கள் எப்போதெல்லாம் வாழ்த்தப்படுகிறது என்று ஆய்வு செய்து பார்த்தால் பொதுவாக ஒருவருக்கு உதவி செய்யும்போது அல்லது ஏதாவது நல்லது செய்யும்போது நாகரீகப் போதையில் இருப்பவர்கள் வுhயமௌ என்பார்கள். நாட்டுப்புறத்தில் உள்ளவர்கள் நீங்களும் நல்லா இருக்கணும் என்பார்கள். அதேபோல் சின்னக்குழந்தைகள் ஏதாவது சேட்டை செய்யும்போது அல்லது பெரியவர்களுக்குப் பிடிக்காது செய்யும்போது நல்லா இருப்பாய்… இடத்தை காலிபண்ணு என்று சொல்லுவார்கள். இது நாம் அன்றாட வாழ்விலும் அங்கும் இங்கும் கேள்விப்பட்டாலும் இன்றைய சமூகம் நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த இரண்டையும்தான். ஒன்று நன்மை செய்யுங்கள் மற்றொன்று தீமை செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் அவ்வாறு செய்தால் இந்த சமூகம் நன்றாக இருக்கும்.

நமக்கு எல்லா இடங்களிலும் நல்லதே நடக்கவேண்டும்; நாம் சந்திக்கின்ற அத்தனைபேரும் நன்மையே செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆதரவாய்ப் பேசவேண்டும் அரவணைப்பாய் நடந்து கொள்ளவேண்டும். இப்படி பலவாறு அடிக்கிக்கொண்டே போவோம். ஆனால் காலம் முழுவதும் பெறுவதற்கே மடியேந்திக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு கொடுப்பதற்கு எப்போது கரங்களை நீட்டப்போகிறோம்? அதனை இப்போதே தொடங்குவோம். இந்த ஆண்டின் நமது சபதம் இதுவாக இருக்கட்டுமே. எச்சோதனை வந்தாலும் எச்சூழல் தடுத்தாலும் நன்மை செய்வதை வளர்ப்போம் தீமை செய்வதைக் குறைப்போம்.

நன்மை செய்ய எதற்குத் தயங்குகிறோம்? ஓரு பதில்தான். எதிர்காலம் குறித்த பயம்! ஏனென்றால் நமக்கு ஏதும் பிரச்சனைகள், துன்பங்கள், ஆபத்துக்கள் வந்துவிடுமோ! என்கிற பயம்தான் அதற்குக்காரணம், நமக்கு தன்னம்பிக்கையும் இறைபயமும் இல்லை. அது இருந்துவிட்டால் எதற்கும் பயப்படமாட்டோம். ரிஷிகள் வாழ்க்கையும், நம் முன்னோர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது. இருப்பதில் ஒரு பங்கை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள். எவர் தப்புச்செய்தாலும் தட்டிக்கேட்பார்கள். கூட்டுக்குடும்பமாய் இருந்தவர்கள் தனித்தனியாகப் போனபோதுதான் ஒரு தனிமையும் அவர்களை அறியாமலேயே ஒட்டிக்கொண்டுவிட்டது. இதனால் பலநேரங்களில் பாதுகாப்பினைத் தேடி ஓடுகிறார்கள், பயந்து பயந்து சாகிறார்கள்.

பிறருக்குத் தீங்கு செய்வதற்குக் காரணம், பிறர்மீது நமக்கு ஏற்படுகின்ற போட்டியால், பொறாமையால், பயத்தால், தாழ்வு மனப்பான்மையால், நமக்கு கிடைக்கிற பேர், புகழ், கல்வி, பணம், பதவி சுகம், பிறரால் தடைபடுமோ என்ற எண்ணம் நமக்குள் ஏற்படும்போது பிறருக்குத் துன்பம் கொடுக்க முனைகிறோம். மூத்தோர்கள் இதனை முறியடிக்க ஒரு வார்த்தை வைத்திருந்தார்கள். அதற்குப் பெயர் ‘விதி’. எது நடந்தாலும் கோபப்படாமல் எல்லாம் என் தலைவிதி என்று அமைந்த மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.

நாம் செய்கிற தவறு வருகிற தலைமுறைக்கு சொல்லிக்கொடுக்க மறுப்பதோடு, தப்பான பாதையையும் அமைத்துக் கொடுக்கிறது. குழந்தைகளிடத்தில் ‘தனக்கு’ என்ற எண்ணத்தை வீட்டிலும் பள்ளியிலும் போட்டி போட்டு வளர்க்கிறோம். இது எந்த வகையில் சமூக வளத்தையும், சகோதரப்பாசத்தையும் வளர்க்கும்?

பள்ளிக்கூடங்கள் எதனை வளர்த்து வருகிறது. அறிவை பெருக்கு, கடினமாக உழை, உனக்கான வெகுமதியைத் தேடு, உன்னையே உயர்த்திக்கொள் என்று சொல்லிக் கொடுத்து வளர்ப்பதனால்; இந்த சமூகத்தின் மீது எந்தப்பற்றும் இல்லாமல் வளர்கிறான.; தன்னை வளர்த்துக்கொள்ள சொந்த நாட்டையே துறந்து அயல்நாட்டு அடிமையாகிறான் ஏன் விவசாயம் செய், எல்லோருக்கும் உணவளி, குடிசைத்தொழில் செய் பல குடும்பங்களுக்கு விளக்கேற்று, முதியோர்களுக்கு ஒரு இல்லம் அமைத்து அவர்களைப் பராமரி, சின்னச் சின்னத் தொழில்கள் ஆரம்பித்து பலருக்கு வேலை வாய்ப்புகொடு. நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டு என்று இளைய தலைமுறையினருக்கு எப்போதாவது கற்றுக் கொடுத்திருக்கிறோமா? இனி கற்றுக்கொடுப்போம். அவன் சமுதாயத்தை உருவாக்கும் கருவியாக அவனையே மாற்றுவோம். முடிந்தவரை பிறருக்கு உதவிசெய்வோம். நல்லதை நினைப்போம். நல்லதையே செய்வோம், நல்வழி நடப்போம், நல்லதே நமக்கு நடக்கும், புத்தாண்டு வழி காட்டட்டும், நம்புவோம்!

ARCHIVES