09

Sep

2015

நிஜம் எது?

நிழல் எது? நிஜம் எது?

நிழல் எது? நிஜம் எது? என்பது நிறையப்பேருக்குத் தெரிந்த விசயம்தான் இருப்பினும் காலத்தின் கட்டாயத்தாலும், உலகக் கவர்ச்சிகளாலும் நிழலையே நிஜமாக நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதனை இன்றையக் காலக்கட்டத்தில் பேசக் காரணம் இதுதான், இதுமட்டும்தான் இன்றைய பல்வேறு பிரச்சனைக்குக் காரணமாக இருக்கிறது என்று ஆழமாகப்

பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள்.
இது இன்று நேற்றுத் தோன்றியது அல்ல, பூமி தோன்றிய நாள்முதல் மானிடன் எப்போது தனது மகத்துவத்தை உணர ஆரம்பித்தானோ அப்போதே தன்னைத் தனிமைப்படுத்தி தனக்குள் தன்னைத்தேட ஆரம்பித்தானோ அன்றே அவன் நிஜத்தை நெருங்கிவிட்டான் என்று அர்த்தம்.

இதனால்தான் துறவிகளுக்கும்; (நான் செல்வது முற்றும் துறந்த துறவிகள்) உலகப் பிரியர்களுக்கும் இடையே நடக்கின்ற யுத்தமே இதுதான். இந்த உண்மை தெரியாமல்தான் உழன்று கொண்டு இருக்கிறார்கள். சரி நிஜம்எது ? நிழல்எது? யார் சொல்வார்கள்.
நிஜம் ஒன்றுதான் ஆனால் நிழல் எத்தனை விளக்குகள் உங்கள் மேல் படுகிறதோ அத்தனை நிழல்கள் உங்களை வட்டமிடும்.

ஆன்மா நிஜம் காலத்தால் அழியாதது இதனைக் கடவுளும் சொல்லியிருக்கிறார். உடல் நிழல் ஆனால் உடம்புக்குத்தானே முக்கியத்தும் கொடுக்கிறோம். உடம்புக்கு அழகு சேர்ப்பது, உடம்புக்குள் உணவைச் சேர்ப்பது, செத்தபிறகு அடிக்க வேண்டிய சென்டை உயிருள்ளபோதே ஊற்றிக் குளிக்கிறோமே இது நிஜம் தானா? நிழல் தானே,

அழகு என்பது அழியக்கூடிய ஒன்று என்று தெரிந்திருந்தால் அத்தனை பெண்களும் தங்களை அழகுபடுத்தப் போட்டி போடுவார்களா? அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வருமா? காமம் எது? காதல் எது? காதலும் அழியாத அன்பினால்தானே கட்டப்படும், அரைகுறை ஆடையுடன் திரைகளிலும், மேடைகளிலும் ஆடும் அவலங்கள் ஏற்படுமா? அழகிப்போட்டிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா? உதிரக்கூடியதுதானே பூக்கள், மறையக்கூடியதுதானே அழகு, இதனைப் பூக்கள் உணர்ந்த அளவு நாம் உணராததால்தானே ஒப்பனைக்கு நாம் அடிமையாகிறோம்.

பட்டம், பதவி, பணம் எல்லாம் மறையக்கூடியதுதானே இதற்குள்தான் எத்தனை முட்டல்கள், மோதல்கள், சிலருக்கு பதவியே இல்லையென்றால் நிர்வாணமாக நிற்பதுபோல் அவ்வளவு சங்கடப்படுவார்கள், ஆனால் நிர்வாணம் தானே நிஜம் ஆனால் அதை ஏன் இந்த உலகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. பணத்தையும் பதவியையும் வைத்து சுற்றியுள்ளவர்களைச் சேர்த்திருந்தால் உன்னை அவர்கள் ஒரு நாள் நட்டாற்றில்விட்டு நீங்கிவிடுவார்கள். அவர்கள் உங்களை நேசிக்கவில்லை என்பது உங்களுக்கே தெரிந்திருந்தும் ஏன் அந்த நிழலைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்.

பதவிப் போட்டி ஒன்று வந்தவுடன் பழகிய நண்பனைப் பழிக்கிறோம். செய்த உதவிகளை மறக்கிறோம். உண்மை உறவுகளைத் துறக்கிறோம், குறுக்கு வழியில் பயணிக்கிறோம். உண்மையைத் தெரிந்தே எதிர்க்கிறோம். பேச்சு, செயல், நட்பு போன்ற வேசங்களைப் போட்டு பிறரை ஏமாற்றிப் பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொண்டாலும் எல்லோரையும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிட்டோம் என்று எண்ணிக்கொண்டாலும் நாம் உறங்குமுன் மனச்சாட்சி நம்மை உறங்கவிடமால் உருட்டிக்கொண்டே இருக்கிறதே! இப்போது சொல்லுங்கள் நாம் நிசத்தைப் பிடித்து கொண்டு இருக்கிறோமா? நிழலைக் கட்டிக்கொண்டு வாழ்;கிறோமா?

இன்னும் சிலர் இருக்கிறார்கள் எதற்கெடுத்தாலும் என்பெயர் கெட்டுவிடுமே என்று எதையும் செய்யாமலும், செய்யவிடாமலும் உழன்று கொண்டு இருப்பார்கள். இவர்கள் தன்னைப் பார்த்து பயந்தவர்களா? தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களா? என்று தெரியவில்லை. எதைச்செய்தாலும் யாராவது எதாவது நம்மைச் சொல்வார்கள் என்று பயந்து கொண்டு உயர்பதவியில் இருப்பவர்கள் தனக்கு மட்டுமல்ல தன்னைச் சுற்றி இருப்பவர்களுகு;கும் ஆபத்தை விளைவிப்பார்கள்.

ஒரு நல்ல சட்டை போட்டாக்கூட அடுத்தவர்கள் ஏதாவது நினைப்பார்கள், ஒரு காரில் போய்விட்டால் இந்தப் பதவியை இப்படிப் பயன்படுத்துகிறான் என்று சொல்வார்கள். என்று பயந்து கொண்டு இருப்பவர்களே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். பெயர்கெட்டுவிடும் என்று பயப்படவேண்டாம். அதுவும் ஒருநிழல்தான். இறந்த சில காலத்தில் மறைந்துவிடும் கிட்னி இதயத்தையே மாற்றிவிடும். விஞ்ஞான உலகத்தில் கெட்டுப்போன பெயரை விட்டுவிட்டுப் பயணிக்க வெகுசிரமமிருக்காது. ஒடிக்கொண்டு இருக்கிற அவசர உலகத்தில் எதோ நம்மைத்தான் எல்லோரும் கவனித்துக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொண்டு ஒரு நிழல் யுத்தத்தில் நெடுநாட்களைச் செலவு செய்து நிம்மதி இழந்து தவிக்கிறோம். ஒன்றுமட்டும் சொல்கிறேன். உண்மையான தலைவர்களே! “புகைந்து கொண்டே இருப்பதைவிட எரிந்து விடுவதே மேல்”.

நம்மோடு சிலர் இருக்கிறார்கள். தன் பெயரைச் சொல்லி அழைப்பதை மரியாதைக்குறைவாக நினைப்பார்கள். மூக்குமேல் கோபப்படுவார்கள். தன்னைச்சுற்றியுள்ள, பட்டங்கள், பதவிகள் இவைகளால் பாராட்டப்படவும், பல்லக்கில் பயணிக்கவும், கட்அவுட்களில் காட்சியளிக்கவும், வாழ்த்துரைகளிலே வாழவும், ஆசைப்படுவார்கள் இதுவும் நிழல்தான் என்று எப்போதோ அவர்களுக்குத் தெரியும் ஆனால் விடமுடியமால் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்குச் சொல்லுகிறேன் அந்தோ! உங்கள் நிலை பரிதாபம் மேடையில் தொங்கும் தலைவர் படம், கூட்டம் முடிந்தவுடன் பந்தலைப் பிரிப்பவர்கள் படத்தை எடுத்து குப்பையில் வீசுவார்களே அதுபோலல்லவா நம் வாழ்க்கை அமைந்துவிடும்.

எனவே எல்லோருக்கும் தெரியும் நிழல்எது? நிஜம் எது? ஆனால் வாழத் தயங்குகிறோம். விமர்சனங்களுக்குப் பயப்படுகிறோம். அதனையே சில நேரங்களில் நிஜமாகப் பிடித்துக்கொண்டு தொங்குகிறோம். பயப்படுகிறோம். பின்வாங்குகிறோம். செயல்களை மாற்றியமைக்கிறோம். இந்த நிழலுக்கு ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள் நீங்கள் என்ன ஒன்றும் தெரியாத அப்பாவிச் சிறுவர்களா? உலகில் உள்ள நாய்கள் எல்லாம் புதியவர்களைக் கண்டு குரைப்பதற்கு உங்களால் பதில்சொல்ல முடியுமா? அதற்குப்பதில் சொல்லவா நீங்கள் அவதரித்தீர்கள். நேரில் உங்களைக் கேள்விகேட்டால் நிஜம்; பதில் சொல்லுங்கள். நீங்கள் இல்லாத இடத்தில் உங்களை விமர்சித்தால் அது நிழல் அதற்கு எங்கேயாவது நீங்கள் பதில் யாரிடமாவது சொன்னால் நீங்கள் பயந்து விட்டீர்கள் என்று அர்த்தம.; நிஜத்திற்குப் பயப்படுங்கள். நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள், நான் நேரி;ல் வரும்போது உங்கள் நிஜத்தைப் பார்கிறேன். அதனை நிறையப்பேரிடம் சொல்கிறேன்.

சகோ. சு. ஜோ அந்தோனி தி.இ.ச.,

ARCHIVES