07

Jul

2017

நாம் எங்கே போகிறோம் ?

நாம் எங்கே போகிறோம் ?

நாம் எங்கே போகிறோம் ?

கொண்டு செல்வதற்கு எதுவுமில்லை. அனைத்தையும் கொடுத்துவிட்டுச் செல்வோம்’ என்ற வாசகம் அனைவருக்கும் தெரியும். இதையே ஒரு கவிஞன் சொல்வான். ‘கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல’ என்பான் இதற்குத்தான் மாவீரன் அலெக்ஸாண்டர் தனது இறுதி ஊர்வலத்தில் எனது இடது கையை எடுத்துச் சவப்பெட்டிக்கு வெளியில் போட்டு எனது உடலை எடுத்துச் செல்லுங்கள் எனத் தன் படைத்தளபதிகளுக்கு ஆணையிட்டான்.

இவையெல்லாம் இந்தத் தேசத்திற்குப் போதவுமில்லை, புத்தியுமில்லை. இவைமட்டும் எம் தேசம் கடைபிடித்திருந்தால் எம் தேசம் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது? எங்குபார்த்தாலும் லஞ்சமும், ஊழலும் புரையோடிப்போய் நிற்கிறது. நாம் விட்;டுக்கொடுத்தால்! நாம் தியாகம் செய்தால்! இந்த சமுதாயம் ஓரளவு மகி;ழ்ச்சியும், மனநிறைவும் அடைந்திருக்கும். நம் முன்னோர்கள் தம்மால் முடிந்தவரை பிறருக்குக் கொடுத்து மகிழ்ந்தார்கள். தன்வசதியோ, தன் தேவையோ பெரிதென எண்ணாது பிறரை உபசரித்து ரசித்து மகிழ்ந்தார்கள். அப்படி இருந்த என் தமிழ்தேசம் எப்போது தொலைந்து போனது இன்றுவரை அந்தத் தமிழனை நாம் இருட்டில் தேடிக்கொண்டு இருக்கிறோம்.

‘தடுப்பதற்கு யாருமில்லை முடிந்தவரை எடுத்துக்கொள்வோம்’ என்ற தாரக மந்திரத்துடன்தான் தமிழன் இப்போது தரங்கெட்டு நிற்கிறான். முடிந்தவரை அகப்பட்டதைச் சுருட்டுகிறான். கிடைக்கும்வரை சுரண்டுகிறான், பிடிபடும்வரை ஏமாற்றுகிறான். சுயத்திற்காக எதை வேண்டுமானாலும் இழக்கிறான் இப்படித்தானே நமது இளைய சமுதாயம் இருக்கிறது.

எச்சில் சோற்றையும், இரவல் சோற்றையும் பிச்சையெடுக்காமல் இனாம் என்று பெற்றுக்கொண்டு எவனவன் கையிலேயோ நாட்டைக் கொடுத்துவிட்டோம். அவன் எவனிடமெல்லாமோ நம் தேசத்தை விற்றுவிட்டான். இது கண்முன் தெரிந்தும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது கைகாலாததனம்தான்.

மண்ணும், பெண்ணும், பொன்னும் ஒன்றுதான். ஏனென்றால் இவைமூன்றும் செல்வங்கள் இவைகள்தான் ஆசையைத் தூண்டும் அக்கினிகள், இவை அதிகமாக அதிகமாக மனிதம் சிதைந்து மனிதனுக்குள் மறைந்திருக்கும் மிருகம் கிளர்ந்து விடுகிறது. மண்ணைப் பிறரிடம் கொட்டிக்கொடுத்து காசுவாங்குவதும், பெண்ணை….. ஒன்றுதானே. நிலத்தடிநீரை நீசத்தனமாக உறிஞ்சுவிட்டோம் தன்னை வளர்க்க அன்னை அமுதூட்டினாள். ஆனால் அமுதை மட்டுமா இரத்தத்தையும்மல்லவா நாம் உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். அன்னையைக் கொன்று தன்னை அழிப்பதல்லவா இன்று தண்ணீரை நாசமாக்குவது. இது இன்று எத்தனை பேருக்குப் புரிந்திருக்கிறது?

எவன் இன்று நம்மை ஆளுகிறான்? எவன் இங்கு வாழுகிறான்? எண்ணிப்பாருங்கள் எவனும் ஆளவுமில்லை, எவனும் வாழவுமில்லை. கட்சி என்ற பெயரில் கயமைத்தனத்தை நிறுவி சாதி என்ற பெயரில் ஒரு சதுராட்டம் நடத்தி கீழ்த்தரமாக நடந்து மேல் பதவியைப் பெறுகிறான். இன்று ஆள எண்ணுகிறவனும் தன் திறமையையோ சாதனையையோ முன் நிறுத்தவில்லை. சாதியைச் சொல்லி ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறான். பின்பு கொள்ளையடித்த பணத்தை அள்ளிக்கொடுத்து, பல்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி தன் சாதிக்காரனையே வசமாக ஏமாற்றி வசதியான வாழ்வு வாழ தன்னை மாற்றிக்கொள்கிறான்.

பொதுவாக ஒன்று நாம் சிந்திக்கவேண்டும். எப்படியாவது ஒவ்வொருவரும் முன்னேறத்துடிக்கிறார்கள். வளமான வாழ்வு வாழ இயற்கையை அழிக்கிறார்கள். இயற்கையை வெல்லலாம், இயற்கையைக் கொல்லக்கூடாது. இயற்கை என்பது நமக்கு மட்டும் கொடுக்கப்பட்டதல்ல. வருகிற தலைமுறைக்கு அதனை வளர்த்துக் கொடுத்துவிட்டு தேவைக்குத் தகுந்தவரை அவற்றில் நம் தேவையைத் தேடிக்கொள்ள வேண்டுமேயொழிய தேவைக்கு அதிகமாகத் திருடிக் கொள்ளக்கூடாது.

விவசாயப்போராட்டம் வீதியெங்கும் நடந்து கொண்டிருக்கிறது. அதனைச் சற்று உற்றுப்பாருங்கள் நாளைக்கு சாகும் வயதில் இருப்பவர்கள் இன்று நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன விதியா? காலம் காலமாக நாம் கட்டிக்காத்த இந்தப்பூமித்தாயை இன்று பிறதேசத்திற்கு முந்தி விரிக்கவும், பந்தி வைக்கவும் செய்கிறார்களே! இப்படியே போனால் எங்கள் குழந்தைகள் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாகப் போய்விடுவார்களே என்ன செய்வது என்று சாகப்போகிற வயதிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். ஆனால் இந்தத் தேசத்தின் மழலைகளோ மாதாவின் மடியறுப்பது தெரியாமல் பிறர்கொடுக்கும் கொலுப்பொம்மைகளில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

கொஞ்சம் தூக்கத்தை கலைப்போம் இந்திய தேசத்தின் ஏக்கத்தைப் போக்கும் நம்மைத் தூங்க வைக்க அரசியல்வாதிகளும், சாதியத்தலைவர்களும் பாடும் தாலாட்டுக்களையும் கேட்டு அது நம்மை எழுப்பும் போர்முரசாக எடுத்துக் கொள்வோம். ஆங்காங்கே எழுப்பப்படும் அபயக்குரல்களை நம் புதிய போர்முழக்கங்களாக எடுத்துக்கொள்வோம். அப்துல்கலாம் சமாதியில் அமைதியாய் இருந்த என் இளைய சமுதாயம், ஜல்லிக்கட்டில் பொங்கி எழுந்த இளைய சமுதாயம் இரண்டு முகங்களையும் இந்த பூமிக்குத் தேவைக்கு ஏற்ப காட்டுவோம் வாருங்கள் புறப்படுவோம்.

ARCHIVES