நான் நானாக…..தருமத்தூரணி:
தென் தமிழகத்தில் தேடிப் பார்த்தாலும் அதன் வரைபடத்தில் உடனே வந்துபோகக் கூடியதல்ல இந்தச் சின்னக் கிராமம். ஆனால் அதன் பக்கத்து ஊரெல்லாம் பாசத்தோடு தருமத்தூரணி என்று அழைக்கும் ஊர் தான் எனது ஊர். இது சங்கரன்கோவிலுக்கு தென்மேற்கில் வெள்ளந்தி மனிதர்களைச் சுமந்துகொண்டு அமைதியாகத் தனது அன்றாட அலுவல்களை அலசிக் கொண்டிருக்கும் சிறிய கிராமம். வன்முறை என்பது இதுவரை எங்கள் வாழ்க்கையிலே வந்துதிக்காக ஒரு நிலை. உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக கிளை (உறவுமுறை) வழியாக பெண் எடுத்து பெண் கொடுத்து குடும்பத்தை வளர்த்துக் கொள்கின்ற மனிதச் சமுதாயம்.

சொன்னால் உடனே தெரிந்து கொள்ள முடியாத ஊராக இருந்தாலும் சுத்துப்பட்டி அனைத்து ஊர்களிலும் சொன்னவுடன் புரிந்து கொள்ளும்படி அனைவருக்கும் அறிமுகமானவர் எனது தந்தை திரு. இராயப்பன் ஆசிரியர். இன்றளவும் எனது ஊரில் மதிப்புமிக்க வணக்கத்திற்குரியவர். கிராமத்துப் பாசத்தோடு மண்ணின் மனம் மாறாமல் சுற்றியிருப்பவர்களின் சொந்தங்களையே சொர்க்கமாக எண்ணி வாழ்ந்து வரும் எனது தாய் திருமதி. மரிய பூரணம். சின்ன வயதில் என்னைத் தோளில் தூக்கி வைத்து தோழனாக மனதில் வைத்து இன்றளவும் சுமந்து வரும் எனது உடன்பிறந்த சகோதரர் திரு. R. சேவியர் இன்று தலைமையாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். நம்மைச் சின்ன வயதிலிருந்து செல்லமாக அரவணைத்து வரும் உறவு அக்காள் உறவு. சின்னச்சின்னக் காயங்கள் என் மீது பட்டாலும் கண்ணீர் உதிக்கும் கண்களுக்குச் சொந்தக்காரரான எனது அக்காள் திருமதி. செல்வி. இதுதான் எனது குடும்பம்.

எனது இளமைக்காலக் கல்வி அதாவது ஐந்தாம் வகுப்பு வரை எனது சொந்த ஊரில்தான் தொடங்கியது. நடுநிலைப்பள்ளியினை எங்கள் ஊரின் அருகிலிருக்கும் நடுவக்குறிச்சியில் வளர்ந்தது. எனது இனபந்துகளைக் கடந்து இன்னொரு சமூகத்திற்குள் இறகு விரித்த இன்பமான பயணம். அந்தப் பள்ளியில் பல விசயங்களைக் கற்றுக் கொடுத்து நான் வரும் வரை முதலிடத்தையும் அந்தப் பள்ளிக்கு வந்த பிறகு அந்த இடத்தை தாரை வார்த்துத் தந்த என் பள்ளித் தோழி பால்ய சிநேகிதி இன்றளவும் என் நினைவில் வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்லும் ஓர் இனிய உறவு.

உயர்நிலைப்பள்ளி அந்த ஊரைக் கடந்து நிற்கும் வீரசிகாமணியிலும், மேல்நிலைப்பள்ளியை விக்கிரமசிங்கபுரத்திலும் எனது கல்விப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. இங்கு தான் எனது இளம் துறவு வாழ்வு ஆரம்பமானது. தனக்கென ஒரு தகுதியைத் தக்கவைத்துக் கொள்ள பாலகுருகுலம் ஆசிரிய பயிற்சியை கடையநல்லூரில் கற்றேன். எனது ஆசிரியர்ப் பணியைத் தொடங்கிய தொட்டில் தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்த இயற்கை எழில் சுமந்து வரும் நகரம் பணகுடியாக அமைந்தது. பின்பு எனது பயணம் இருதயகுளம், மதுரை (ஞானஒளிபுரம்), கம்பம் அருகிலுள்ள இராயப்பன்பட்டி, மேலப்பாளையத்தின் கீழ்ப்பக்கத்தில் இருக்கும் குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி என தொடர்பயணமாக எனது பணி வாழ்வு பவனி வந்து கொண்டிருக்கிறது. இதில் தாளாளராக, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக, இடைநிலை, இளநிலை, முதுகலை ஆசிரியராகவும், விடுதிக் கண்காணிப்பாளராகவும் என பல்வேறு பணிகளில் எனது பரிணாம வளர்ச்சியைப் பட்டை தீட்டிக் கொண்டேன்.

பத்தாம் வகுப்பு பாஸ் என்றாலே அந்தக் காலத்தில் கிராமத்து மாணவனுக்கு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது போன்று. அந்த அடிப்படைத் தகுதியை மட்டுமே வைத்துக் கொண்டு திரு இருதய சபை என்னைத் தேர்ந்தெடுத்தது. அதன் பிறகு தான் திசைகள் பல எனக்குத் தெரிய ஆரம்பித்தது. என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என் வழிகாட்டி

அருள்நாதர் M. செங்கோல் அவர்கள். அவர் தான் எனக்குள் படுத்துறங்கிய பல்வேறு திறமைகளுக்குப் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தார். முதலில் என்னில் முளைவிட்டிருந்த விளையாட்டுக்களைத் தட்டி எழுப்பினார்.

பல்வேறு கலைத்திறன்களை கலைநிகழ்ச்சிகள் மூலமாக எனக்குள் கண்டெடுத்தார். இப்படிப் பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு இறகுகள் கட்டி பறக்கவிட்டு இன்பமடைந்த எனது இரண்டாவது தாய். பிறகு பேச்சாளராக என்னைப் பிரபலப்படுத்தினார். அந்தக் காலத்தில் அடம்பிடிக்கிற சிறு குழந்தையைக் கூட குச்சியைக் காட்டி பள்ளியில் விட்டு வரும் ஒரு தகப்பனைப் போல எழுத்துலகத்திற்கு ஒரு சில கட்டத்தில் கட்டாயப்படுத்தி எனை இழுத்து வந்தவரும் இவர்தான். ஏனெனில் அப்போது இவர் எழுதிய நூல்கள் பல பரபரப்பாகப் பேசப்பட்டன. இதன் விளைவே எனக்குள் இந்த நூல் குழந்தைகள். அவரின் ஆசியோடும் அருகிலிருக்கிற தெம்போடும் உங்களைச் சந்திக்க இந்த வலைத்தளத்தின் வழியாக வந்திருக்கிறேன்.

என் எழுத்துக்கள் எந்த மொழிகளை முழங்கப்போகிறது என்றோ அதன் விளைவுகள் எந்த வழிகளைத் திறக்கப் போகிறதோ என்றோ முன்னறிவிக்க நான் வரவில்லை. புரட்சியை விதைக்க வேண்டும். போராட்டத்தில் தளைக்க வேண்டும் என்ற புதிய உத்வேகமும் என்னிடம் புகுந்து விடவில்லை. ஆனால் உங்கள் இதயத்தை இதன் மூலம் பார்க்கும் ஒரு இனிய வாய்ப்பு கிடைத்தால் நான் பூமியை விட்டுப் போகுமுன் ஒரு பொழுதாவது உங்களோடு கழித்த இன்ப அனுபவத்தை இந்த எழுத்துக்கள் எனக்குத் தந்தால் இந்த மண்ணில் இதனை விட சொர்க்கம் வேறு ஏது? என்ற நம்பிக்கையோடு நடைபோடுகிறேன். வாங்க! வாசிங்க! சந்திப்போம்! சிந்திப்போம்!

- நம்பிக்கையுடன்…