30

Nov

2021

நாடு நாசமாப்போச்சு…

என் பேனா எழுத ஆரம்பித்த உடனே முதலில் முந்திக் கொண்டு வந்த வார்த்தையே நாடு நாசமாப்போச்சு என்பதுதான். காரணம் திருச்சி அருகே நவல்பட்டு என்ற ஊரில் சிறப்பு எஸ்.ஐ படுகொலை செய்யப்பட்டது. வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள். இங்கு களைகளே வேலியை காவுவாங்கி விட்டது என்பதுதான் தாங்கிக் கொள்ள முடியவில்லை பாரதி வார்த்தையில் சொல்லப்போனால்! நெஞ்சு பொறுக்குதில்லையே இந்தத் தரங்கெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால்? என்பதுதான்.

பூமியில் வாழும் ஒவ்வொருவரும் தமக்கு ஆபத்து என்றால் கடவுள் வருகிறாரோ இல்லையோ! காவல்துறை வரும் என்ற நம்பிக்கையில்தான் நல்லவர்கள் இன்னும் இந்த அயோக்கியத்தனம் நிறைந்த உலகில் அச்சமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படுகொலை அந்த அடிப்படை நம்பிக்கையே ஆட்டம் காண வைத்துவிட்டது. நெஞ்சுக்குள் ஒரு வலி வந்து வந்து போகிறது. பொறுமை வேண்டும் புத்தனைப் போல் மாற வேண்டும் எனப் போதிப்பது எளிதுதான் எவ்வளவு காலம்தான் இந்தக் கண்றாவிகளைக் கண்டு சகித்துக் கொண்டு வாழ்வது.

எலிகள் சேர்ந்து புலியை வீழ்த்தியிருக்கிறது என்று சொன்னால் எப்படி நம்புவது ஒரு 18 வயதுப் பையனும் இரண்டு சிறார்களும் என்றால் யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். கொரோனா வந்து பள்ளி மூடப்பட்டபிறகு மாணவர்கள் மனநிலையெல்லாம் மாறிவிட்டது. நல்லது கெட்டது சொல்லிக் கொடுக்க ஆளில்லை. இல்லை மன்னிக்கவும் கெட்டதை கற்றுக்கொடுக்க இந்த உலகமே ஓடிவருகிறது. இந்த ஊடகமும் நம் வீடு தேடிவருகிறது. அப்படியென்றால் இந்த இளைய தலைமுறை என்னதான் செய்யும்?

ஒரு மாணவனை மனிதானக்குவது வகுப்பறையும் ஆசிரியரும்தான். இந்த இரண்டு ஆண்டுகள் காட்டாற்று வெள்ளம்போல் சுற்றித்திரிந்தவனை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் அவனைக் கண்டிக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாகும்போது தண்டிக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் கைகள் எல்லாம் கட்டப்பட்டு விட்டது. உளியை எடுக்காமல் சிலையைச் செய்யுங்கள். என்று உபதேசம் செய்கிறீர்கள். துளையிடாமல் புல்லாங்குழல் தாருங்கள் என்று உத்தரவிடுகிறீர்கள். எங்களுக்கென்ன எவனும் எப்படியும் போகிறான்? என இருப்பதற்கு எங்களது மனச்சாட்சி இடம் கொடுப்பதில்லை இதனால் ஆசிரியர்கள் எல்லாம் அவமானத்தையும் அவப்பெயரையும் சுமந்து கொண்டுதான் திரிகிறார்கள். தினந்தோறும் வாழ்கிறார்கள்.

இந்த சமயத்தில்தான் ஆங்காங்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது என்பது இன்னும் பயத்தை உருவாக்கிவிடுகிறது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். எந்த துறையில்தான் குறைகள் இல்லை கறைகள் இல்லை. இதையேப் பெரிதுபடுத்திப் பெரிதுபடுத்தி இருப்பவனையும் நடைபிணமாக்குகிறது. உலகையேத் தன் போதனையால் புரட்டிப் போட்ட இயேசு நாதரிடம் கூட யூதாஸ் என்ற ஒருவன் அவரைக் காட்டிக் கொடுத்தவன் இல்லையா? இது வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு பகுதிதானே! அதற்காக அந்தச் செயலை நான் ஆதரிக்கவில்லை தண்டனை கொடுங்கள். ஆனால் ஆசிரியர்களைக் கட்டிப் போடாதீர்கள். ஆசிரியர்களைக் கட்டிப் போட்டுவிட்டு அயோக்கியர்களை அவிழ்த்துவிடுகின்ற அபல நிலைகள்தான் இன்றையச் சமுதாயத்தில் இருக்கின்றது. பிரம்புகளையெல்லாம் ஒடிக்கச் சொல்லிவிட்டு லத்திகளைக் கூர்மைப்படுத்துகிறீர்கள்.

இதன் விளைவு இந்தப் பூமிநாதன் என்ற காவலரின் படுகொலை அவரை அடக்கம் செய்யும் காணொலியை கண்ணால் காணும்போது கடுங்கோபம் நெஞ்சில் துடித்தது. குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டார். அப்போது என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா? திரையிடாமல் சொல்வது என்றால் அந்த மேல் நோக்கிச் சுட்ட ஒவ்வொரு குண்டும் ஒரு பொறுக்கியை நெஞ்சில் துளைக்க வேண்டும். அப்படியென்றால் தான் அவர் ஆன்மா சாந்தியடையும். மேல் நோக்கிச் சுட்டதில் எனக்கே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அன்புமிக்க காவல்துறையினரே பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் பாதுகாவலர்கள் அல்ல ஆட்சி செய்யும் அரசு அதிகாரிகள். பொறுக்கிகள் என்று தெரிந்து விட்டால் போட்டுத்தள்ளுங்கள் குழந்தைகளோடு விளையாடுகிறவர்களை இடுப்புக்குக் கீழே இடம் பார்த்துச் சுடுங்கள், ஆசிரியர், காவல்துறை, மருத்துவர் என பொதுமக்களால் எப்போதும் விமர்சிக்கப்படுகிறோம் அது ஒருபுறம் இருக்கட்டும் வாருங்கள் ஒன்றிணைவோம். அவதூறுகளைக் களைந்தெறிவோம். பொய்யான குற்றச்சாட்டைப் புறந்தள்ளுவோம். சட்டங்களை மதியாதவர்களுக்குச் சாட்டையடி கொடுப்போம்.

உங்கள் அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் அப்பாவிகளிடமும், எளியவர்களிடமும் காட்டாதீர்கள் வரம்பு மீறுகின்ற அரசியல்வாதியை வாலை நறுக்குங்கள் வாழ்வு சரியாகிவிடும். கடமை தவறுகின்ற அரசு அதிகாரிகளை நன்றாக உங்கள் பாணியில் கவனித்து அனுப்புங்கள். நாடு நலம் பெறும் நம்மைப்பற்றி (ஆசிரியர், காவல்துறை) வருகின்ற தவறான மொட்டைக் கடிதங்களையும், முகவரி இல்லாத புகார்களையும் சுட்டு எறியுங்கள் முடிந்தால் அவர்களையும் தேடி….! காவல்துறையே ஆசிரியர் சமூகமே கரம் இணையுங்கள் சமுதாயத்தை சரி பண்ணுங்கள் உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும்…

“வரைமுறை இருக்கும்வரை நம்மிடம் வன்முறை இல்லை!
வன்முறை வந்தபிறகு நம்மிடம் வரைமுறை இல்லை!”

ARCHIVES