13

Apr

2023

காணாமல் போன ஆடு…

– ஆசிரியர்களுக்கு

தலைப்பைப் பார்த்தவுடன் விவிலியத்தின் கதைதான் ஞாபகத்திற்கு வரும். அதில் ஒரு நல்ல மேய்ப்பன் நூறு ஆடுகள் வைத்திருப்பார். அவற்றில் ஒன்று காணாமல் போய் விடும். மற்ற 99 ஆடுகளையும் புல்வெளியில் விட்டுவிட்டு அந்த ஒற்றை ஆட்டைத்தேடி ஓடுவார். அதனைக் கண்டுபிடிக்க கால் கடுக்க நடந்து செல்வார். அந்தக் கதைதான் இப்போது கல்வித்துறையின் கதையாகிவிட்டது.

இப்போது மாணவர்களுக்கு அரசுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கமாக எத்தனை மாணவ மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புள்ளி விபரத்தினைத் தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு எத்தனை மாணவ மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்ற புள்ளி விபரத்தைக் கொண்டு அவர்களை எப்படித் தேர்வு எழுத வைப்பது? என்ற முனைப்புடன் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது கண்டிப்பாக ஏதோ ஒரு நல்ல முன்னேற்றத்திற்கான ஏற்பாடு ஆனால் அது என்னவென்றுதான் இன்றளவும் யாருக்கும் விளங்கவில்லை. அதே சமயத்தில் சில கேள்விகளும் ஏழாமல் இல்லை.

அனைவருக்கும் கல்வி கல்வியின் பயன் ஒழுக்கம் என்பது தான். இன்று பள்ளிப்பக்கம் சென்று பாருங்கள். பாதி ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள போதைப் பொருட்களில் இருந்து அவனைக் காப்பாற்ற படாதபாடு படுகிறார்கள் மீதி ஆசிரியர்கள் அவனிடமுள்ள சாதி, மதப் பற்றுகளிலிருந்து அவனை மீட்டெடுக்கவும் காதலால் காணாமல் போய்விடுவார்களோ எனக் கண்ணயராமல் காப்பதிலுமே இன்று காலம் களிக்கிறார்கள். முறையாய் கற்றுக்கொடுத்தாலும் முறைத்துப் பார்க்கின்ற மாணவச் சமுதாயம் தான் இன்று முன்னால் நிற்கிறது. முடி வளர்ப்பதில் முள்ளம் பன்றிகளைப்போல் முகத்தை வைத்து காட்டுமிராண்டிகளைப் போல் காட்சி தருகிறார்கள்.

கல்வி என்பது பெற்றோர்களை மதிப்பது ஆனால் இன்று பெற்றோர்களைக் கூட மதிக்காத பிள்ளைகளாக வளர்க்கிறார்கள். பெற்றோர்களை ஏமாற்றி பள்ளியைப் புறக்கணிக்கிறார்கள். பெற்றோர்களைத் துன்புறுத்தி செல்போன் வாங்குகிறார்கள். பெற்றோர்களை ஏமாற்றித் தவறான வாழ்க்கை வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மாணவச் சமூகம், கற்றவர்களையே இன்று பள்ளியில் வந்து ஆசிரியர்களைப் பாதச்சுவடுகளால் அடிக்கின்ற பரிதாப நிலை அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. பாடம் படிக்கச் சொன்னால் பாலியியல் தொந்தரவு என்றும் ஒழுக்கமாய் இரு என்றால் சாதியைச் சொல்லி திட்டிவிட்டார் என்றும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாத்தியாரை வசமாக மாட்டிவிடும் மாணவச் சமுதாயம் இன்று மலிவாய்த் திரிகிறது.

கல்வி கற்றால் சமுதாய விழிப்புணர்வு ஓங்கும் என்பார்கள். இன்று சமுதாயத்தைப் பாருங்கள் இன்று ஆண் பெண் உறவுகள் அதிர்ச்சியாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது. இவர்களின் இந்தக் கறை இன்று சரஸ்வதி (கல்வித்தெய்வம்) யையே சங்கடப்படுத்துகிறது. நாகரீகத்தில் பேரில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. திரையில் கூட காணச் சகிக்காத காட்சிகள் தரையில் இப்போது தாராளமாக அரங்கேறுகிறது. இந்தக் கண்றாவிக் காட்சிகளைக் காண்பவர்கள் சொல்லிவிடுவார்களோ எனப்பயந்து அவர்கள்மீது அவதூறுகளை அள்ளிப் பரப்புவது அதிகமாகி விட்டது. இப்படியே போனால் இந்தத் தலைமுறையை எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

இந்தத் தலைமுறைகளுக்கு எந்தக் கல்வியைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். கல்வி கற்றால் ஒழுக்கம் என்று எந்தத் தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. கல்வி கற்றால் அரசாங்க வேலை என்று தொடக்கத்தில் கற்றுக் கொடுத்தோம். பிறகு கல்வி கற்றால் தொழில் நிறுவனங்களிலாவது வேலை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். கல்வி கற்றால் ஆங்காங்கு முளைத்திருக்கிறதே ஆங்கிலப் பள்ளிகள் அங்கேயாவது வேலை கிடைத்து விடும் என்று நம்புகிறார்கள் ஆனால் நடைமுறையில்…?

படித்தவர்களுக்கு வேலை என்று சொன்னோம். ஆனால் இன்று படித்தவர்கள் பலர் வேலையில்லாமல் திரிகிறார்கள். படித்தவர்கள் பலர் ஒழுக்கமானவர்களாகத் தெரியவில்லையே படித்தவர்கள் குடிக்கிறார்கள். இலஞ்சம் வாங்குகிறார்கள். அடுத்தவர்கள் சொத்தை அபகரிக்கிறார்கள். அப்படி இருக்க, ஒரு நிமிசம் சிந்தித்துப் பாருங்கள். கல்வி ஒழுக்கத்தைத் தரவில்லை, கல்வி நம்பிக்கையைத் தரவில்லை. கல்வி எதிர்காலத்தை பிரகாசமாக்கவில்லை. படித்தவர்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கவில்லை பிறகு எதற்கு கல்விக்கு இவ்வளவு பாடுபடுகிறோம் என்பது தான் புரியவில்லை.

ஐயோ பாவம் தெருவில் சுற்றுகிறானே என வருத்தப்பட்டு அவனைக் கஷ்டப்பட்டுத் தேடி அலைந்து கண்டுபிடித்து அவனுக்கு மேல் படிப்பு வரை படிக்க வைத்து பிறகு வேலை இல்லாமல் தெருவில் அலையப் போகிறான். படிக்கவில்லை என்றால் கூட அவன் மற்ற வேலைகளைச் செய்து பிழைக்க முயல்வான். ஆனால் படித்தபிறகு படிப்புக்கு ஏற்ற வேலை தேடுவான் கிடைக்காத போது விரக்தியாவான் வேண்டியது கிடைக்காத போது வேண்டாததைச் செய்யத் துணிகிறான். எதிர்பார்த்தது அமையாதபோது யாரும் எதிர்பாராததைச் செய்து வருகிறான். தன்னை அன்பு செய்யாத இந்தச் சமூகத்தை நேசிக்க மறக்கிறான் மறுக்கிறான். ஒருவனுக்கு எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். இப்போதைக்கு ஒழுக்கம் மட்டுமே ஒழுக்கம் கற்றுத்தரதா எந்தக் கல்வியும் உதவாக்கரையே! கல்விக்கூடத்தில் ஏழை பணக்காரன் என்று வேறுபாடு கூடாது என்றீர்கள். ஆனால் இன்று? பள்ளிகளே ஏழைக்கு அரசுப்பள்ளியும் பணக்காரனுக்கு ஆங்கிலப்பள்ளியும் என்று பாகுபாடு பார்த்து விட்டீர்களே! இப்படி இருக்க மாணவர்களுக்கு எத்தகைய கல்வியைத் தரப்போகிறீர்கள்? தேர்வு எழுதாத மாணவர்களைத் தேடிப் போகப்போகிறோம். அவன் தேடியதைக் கொடுக்கவா? இல்லை நம் தேவைக்காக அவனைப் பயன்படுத்தவா? ஏதாவது ஒரு முடிவில் இருப்பவனை எதையாவது சொல்லி முடிவுரை எழுதி விடாதீர்கள். தேடலில் எது கிடைத்தாலும் அதை முத்தாக மாற்றுங்கள். முடிவு உங்கள் கையில்.

“படித்தவன் பாடம் நடத்துகிறான்
படிக்காதவன் பள்ளிக்கூடம்
நடத்துகிறான்.”

ARCHIVES