26

Aug

2022

எதைப் பாதுகாக்கின்றோம்!?

இருக்கின்ற வரைக்கும் மகிழ்ச்சியாய் இருக்க எதிர்காலம் பிரகாசமாய் இருக்க தொலை நோக்கு கொண்டு சிலவற்றை பாதுகாத்து வைக்கின்றோம். பொருளோ, செயலோ, செல்வமோ, பணமோ, மனிதர்களோ, அடையாளச் சின்னங்களோ, உறவோ எதுவானாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாத்து வருவது வைப்பார்கள் ஆனால் நாம் பாதுகாத்து எல்லாம் பயனுள்ளதா? பயனுள்ளதைத்தான் நாம் பாதுகாத்து வைக்கின்றோமா? என்றால் நம்மை நாமே ஏறிட்டுப்பார்க்கும் போது நமது பைத்தியக்காரத்தனம் புரிகிறது.

இன்றையக் காலக் கட்டத்தில் மனிதர்களை ஆட்டிப்படைப்பது மதமேயாகும். அதிலும் மனிதன் அதை வைத்தே அடுத்தவனை ஆட்டிப் படைக்கத் துணிகிறானே அது எவ்வளவு பெரிய அபத்தம்! மதம் எதற்காக மனிதனுக்குள் வந்தது அது வந்ததன் நோக்கம் என்ன? செயல்பாடு என்ன? சிந்தித்துப் பார்த்தால் மதம் மனித சமுதாயம் சீரழிந்து செல்ல செங்கல் எடுத்துக் கொடுக்கிறது புதுக்கல்லறை கட்ட.

மனிதன் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டது மனிதன் குழுவாக வாழ்ந்து கூட்டமாக வாழ்ந்து வரும்போது வல்லவன் வகுத்ததே வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அவனது அடக்கு முறையில் அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். அதனைச் சகிக்க முடியாமல் மனிதனைக் கட்டுப்படுத்த மனிதன் கண்ட பாதையே தெய்வமாகும். முதலில் மனிதன் இயற்கையையே வழிபட்டு வந்தான் அதுவரை யாருக்கும் பிரிவுகள் இல்லை. காரணம் இருளைப்போக்க ஒளிவந்தது எனவே சூரியனை வணங்கினான். சூரியன் சுள்ளெனச் சுடும்போது மழை வந்தது மழையை வணங்கினான். இருளை ஒழித்தது ஒளி அதனை வணங்கினான்.

பின்பு படிப்படியாக நமக்குதவும் விலங்குகள் பறவைகளை வணங்கினான் குறிப்பாக பசு, காளை, சேவல், மயில் என வணங்கி வந்தான். அப்போதும் மனிதர்களுக்குள் பிரிவுகள் இல்லை. பின்பு பகுத்தறிவில் வாழ்ந்த மனிதன் தனக்குத்தானே குழிவெட்டியதுபோல தெய்வங்களை மனிதர்களாகப் படைத்தான் அந்த மனிதர்கள் மனிதர்களைப் போல் இல்லாமல் மகத்தான செயல்களைச் செய்யும் அவதாரமாக மாற்றினான். மகத்தான மனிதர்களையும் அவர்கள் கற்றுத்தந்த நெறிமுறைகளையும் கைக்கொண்டு வாழ்ந்தால் வளம் பெறலாம் என புத்தன், ஏசு, காந்தி, மகாவீரர், ஜென், என புதிய புதிய வழிமுறைகளைக் கைக்கொள்ள ஆரம்பித்தான். இப்படி ஆட்களும், அவதாரங்களும் அதிகமாக ஆளுக்கொன்றைப் பிடித்துக் தொங்கிக் கொண்டிருக்க தன் மதம் பெரிது அடுத்த மதம் கொடிது என ஆர்ப்பரிக்க ஆரம்பித்தான் ஆனால் திராவிடனுக்கு எப்போதுமே தெய்வங்கள் கிடையாது.

மனிதன் தனக்குமேல் ஒரு சக்தி இருப்பதாகவும் ஆபத்தில் உதவுவான் எனவும் அறிந்தான். இயற்கையைக் கண்டு பயந்த போதெல்லாம் இறைவனைத் தேடி அலைந்தான். ஆதிகாலத்தில் பேய்க்குப் பாதுகாப்பாகவும் இப்போது நோய்க்கு மருந்தாகவும் இன்றளவும் வழிபாடு, வேண்டுதல், மொட்டை எடுத்தல், கிடா வெட்டுதல் பொங்கல் சமைத்தல் என புதுசு புதுசாகக் கண்டுபிடித்து இறைவன் ஏற்கமாட்டார் என்று தெரிந்திருந்தும் நாம் ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறோம். மனிதன் தன்னை ஏமாற்றவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களை ஏமாற்றக் கண்டுபிடித்த தந்திரம் தான் தானே சாமி என்ற சதுராட்டம்தான் அதில் அவன் விளையாடுகிற திருவிளையாடலை இன்னும் சகித்துக் கொள்ள முடியவில்லை. பக்தர்களுக்கு பரலோகம் அளிக்கிறேன். பாவ விமோசனம் தருகிறேன் என்று அவன் பறித்தது எல்லாம் வழிப்பறியல்ல வந்தவர்களிடம் பறித்தது.

புத்தனைக் கடவுளாகக் கொண்டாடுகிறவர்கள் அவன் போதனையைக் கடைபிடிக்கவில்லை. அவன் பல்லை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள் ஆனால் அவன் சொல்லைக் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். இயேசு வாழ்ந்த இடத்தையெல்லாம் இன்றும் வசதியாக வைத்திருக்கிறார்கள். வைர மாளிகையைப் பார்ப்பதுபோல் அவரது சிலுவை மரங்கள் சிறப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் வாழச் சொன்ன வழியைத்தான் எங்கோ பறிகொடுத்து விட்டு ஏமாந்து நிற்கிறார்கள். நபிகள் சொல்லாத சகோதரத்துவமோ ஆனால் ஏனோ அவர்கள்தான் வெடிகுண்டு வைத்து விளையாண்டு கொண்டிருக்கிறார்கள். சிரச்சேதம் செய்து சிம்மாசனம் அமைக்கிறார்கள். இராமர் வாழ்க்கையைக் கேட்டால் பரதனுக்காகப் பதவியைத் துறந்தவர் தனக்கென எதையும் தக்கவைத்துக் கொள்ளாதவர். ஆனால் அவரைப் பின்பற்றுபவர்கள் பாபருக்கு சிறு மசூதியைக் கொடுக்கக்கூட மனசில்லை.

இதிலிருந்து தெரிவது என்ன பின்பற்றிவர்கள் எல்லாம் பண்பட்டவர்கள் அல்ல. தெளிவான சித்தாந்தங்கள் எல்லாம் தெரிந்தவர்கள் எல்லாம் இறைவனைத் தேடிக்கொண்டே இருக்க இங்கு பூசாரிகள் பிழைப்பதற்காக பூசைகள் நடத்தப்படுகிறது. வித்தைக்காரன் பிழைப்பதற்கு தைச்சுக் கழிக்கப்படுகிறது அரசியல்வாதிகள் பிழைப்பதற்கும், ஆட்சியமைப்பதற்கும் மக்களுக்கு மதம் என்னும் போதை ஏற்றப்படுகிறது. சாதிகளைப் பிரித்து சதியாட்டம் ஆட சமுதாயம் மதத்திற்கு சலங்கை கட்டி விடுகிறது. பிரித்தாண்டு பெரிய மனிதனாக மாற போதனை என்ற வக்கிரத்தை முன்மொழியப்படுகிறது. இதனையெல்லாம் கேட்டுக்கொண்டே எவ்வளவு நாள் கிறக்கத்தில் இருப்பது எப்போது தெளிவு பெறுவது. சத்தியம், தர்மமும் செழிக்க சமத்துவமும் சகோதரத்துவமும் வாழ வாருங்கள் சாமி கும்பிடுவோம் இடையில் வரும் ஆசாமிகளை எட்டி உதைப்போம்! “ஒளியே வழி! ஒரே நோக்கோடு இறைவனைத் தேடுவோம். ஒற்றுமையாய் இருந்தால் இறைவன் நம்மைத்தேடுவார்”.

“மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டாம்”

ARCHIVES