என் போதி மரம்
திரு. S. காசிராஜன்
அனிதா டிராக்டர்ஸ்
பிரியா பால் பண்ணை
சாரதா காம்ப்ளக்ஸ்
காந்திநகர் – 627 008
எங்கள் வீட்டுப் பிள்ளை
சொல்லுக்குள் வார்த்தையை சுருக்கி வைத்தவர்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இவன் இந்த வையகத்தையே தனது வார்த்தைக்குள் வளைத்துப் போட்டிருக்கிறான். சொற்களை யெல்லாம் சூளையில் வைத்து சுட்டெறித்து பக்குவப்படுத்தி பதம் பார்த்து பாக்களைத் தொகுத்திருக்கிறான். இவனுடைய வரிகளில்
இளைஞனே ……………. நீ
இறகு விரித்தால்
விறகுகள் கூட
விழுது விடுமே
என்ற வரிகள் மிரண்ட இளைஞனைக்கூட வெகுண்டு எழவைக்கும்.
ஓ மகாத்துமாவே!
உனக்கும் பொய் சொல்லத் தெரியுமா?
சுதந்தரம் வாங்கிவிட்டோமென்று
சும்மாதானே சொன்னாய் !
என்று இன்றைய அவலங்களை எண்ணி சமுதாயத்தின் சரிவுகளுக்குச் சாட்டையடிகள்
கொடுக்கும் போது இறந்து போன பாரதியை இன்றும் நினைவுபடுத்துகிறான்.
இவனுடைய
தேடினேன் ………….. தேடினேன்
என்ற ஒரு கவிதைகளில் எத்தனையோ உள்ளங்களை இவனைத் தேட வைத்துவிட்டான்.
நான் உனக்காகக் காத்திருந்தேன்
நீ பிறருக்காய் பூத்துவிட்டாய்
பூமியில் காத்திருந்தது போதுமென்று
சுடுகாட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
என்று தன்னுடைய காதலை எவ்வளவு கண்ணியமாய் பாடியிருக்கிறான். இலக்கியத் தாய்க்கு ஒரு இளைய புதல்வன் கிடைத்திருக்கிறான். கவிஞர்களை காலம் பல நேரங்களில் கைகழுவி விடும். கவர்ச்சிகளும், நாகரீகமும் அவர்களைக் காணமல் செய்து விடும். இறந்தும் உயிர் வாழும் கவிஞர்கள் காலம் போய் இன்று உயிரோடு நடைபிணமாய் உலவி வரும் காலம் வந்து விட்டது.
இவன் எங்கள் வீட்டுப் பிள்ளை. எழுத்துலகில் இவன் அடியெடுத்து வைக்கும்போது இவனுக்கு படியமைத்துக் கொடுத்தேன். இவனை தடி கொண்டு தாக்கினாலும் தமிழ் எழுத்துக்களாய்த்தான் மலர்வான். இவன் வளர்வதற்கு காரணமாயிருந்தேன். இப்போது இலக்கிய உலகிற்கு அனுப்புகிறேன். இவன் எங்கள் வீட்டுப் பிள்ளை. இல்லை…… இல்லை இனி உங்கள் வீட்டுப் பிள்ளை. இவன் சென்று வென்று வருவான். வாழ்த்துவோம் ! வளரட்டும் இவன் நம்ம வீட்டுப்பிள்ளை.
என்றும் அன்புடன்
S. காசிராஜன்