19

Dec

2014

இதயமே!…… இடமில்லையா?…..

இதயமே!….. இடமில்லையா? இந்தக் கேள்வியைக் கேட்கும் போதே இதயத்தில் இடி இறங்கியது போல ஒரு அதிர்வும், நடுக்கமும் ஏற்படும். ஆனால் அதே உணர்வோடும், அதே அதிர்வோடும் உங்கள் பாதம் கடந்த பயணத்தின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். சில கசப்பான நினைவுகள் உங்கள் கண்முன்னே நிற்கும். “இங்கு இடம் இல்லை” “இங்கு வேலை காலி இல்லை” “இங்கு அமரவோ, யாரும் உணவருந்தவோ கூடாது” என்று விளம்பரத் தட்டிகளை வெளியில் தொங்கப்போட்டு, எண்ணற்ற ஏக்கங்களோடும், எதிர் கால கனவுகளோடும், இறகுகள் இன்றி பறக்கத்துடிக்கும் இளவல்களின் கண்ணுக்குள் ஈட்டியையும், இதயத்தில் நெருப்பையும் வைக்கின்ற நிகழ்வுகள் அல்லவா?     இதைவிட இங்கு இதயமே இல்லை என்று எழுதிப் போடடு;விடலாமே. இன்னும் சொல்லப்போனால் சில வீடுகளில் வெளிச்சுவர்களில் “நாய்கள் ஜாக்கிறதை” என்று ஒரு போர்டு போட்டு உள்ளே நாய் இருக்கிறது, என்று மனித உருவில் சத்தமில்லாமல் குரைத்துக் கொண்டே இருப்பார்கள்.
இதே சிந்தனையில் கால குதிரையின் கடிவாளத்தைக் கழற்றிவிட்டு, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்துச் செல்லுங்கள். இயேசு கிறிஸ்து என்ற ஒரு மகான் வாழ்ந்த காலத்திற்கு இழுத்துச் செல்லுங்கள், கரையில்லா  அலைபோல, காட்டாற்று வெள்ளத்தோடு முட்டிக்கொண்டு நிற்பது போல, வரம்பில்லாக் காற்று புயலாகி வழிநெடுக மரஞ்செடிகளை வீசியெறிந்து செல்வது போல, பூமியில் கட்டுப்பாடுகள் இன்றி மனிதன் தன் சுயநலத்திற்காக முட்டிக்கொண்டும், மோதிக் கொண்டும், கட்டுப்பாடு இல்லாமல் காலம் தள்ளிய காலம் அது. அவற்றைப் போக்க, கடவுள் மனிதனாகப் பூமிக்கு இறங்கிவந்த பொற்காலத்திற்கு ஒருமுறை போய் வருவோமே!…..
முரட்டுக்குணம், முன் கோபம், வறட்டுக் கௌரவத்தால் பிறரை அரட்டிப் பிழைக்கும் அலட்சியப்போக்கு,  கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற பழிவாங்கும் எண்ணத்தோடு படமெடுக்கும் பாம்பைப் போல சீறிக்கொண்டேதிரியும் ஒரு பரம்பரையாக, யூதப்பரம்பரையில் ஒரு விடியல் நட்சத்திரமாகப், பூமிக்கு வந்த நாளைத்தான் உலகம் இன்றளவும் கிறிஸ்மஸ் விழாவாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டு இருக்கிறது. கிறிஸ்து இறைவன் சாயலில் மனித உருவில் பூமிக்கு வந்த புதிய நிலா..
பூமி தோன்றிய நாள் முதல், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடந்த “ஈகோ” பிரச்சனைகள்தான்,  பூகம்பங்களாக பூமியில் பட்டுத்தெரி;த்தது. ஆதியில் ஆதாமைப் படைத்த இறைவன,; வளமான வாழ்வுதனைக் கொடுத்துவிட்டு தனக்குக் கீழ்படிந்து வாழ ஒரு கட்டளையையும் பிறப்பித்தான். ஆனால் மனிதனோ தனக்குரிய பேராசையினால் அதனை மீறுகிறான். கீழ்படிதல் இல்லை என்று கடவுள் சீறுகிறார். கீழ்ப்படியாததற்குக் காரணத்தை மனிதன் தேடுகிறான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான உணர்வுகளினால், இருவருக்கும் இடையில், உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது. காலம் செல்லச்செல்ல மேலும் மேலும் விரிசல் ஏற்பட்டுக்கொண்டே செல்கிறது. கடவுள் தனது கோபத்தில் சிலவற்றை  அழிக்கிறார். மனிதனோ இறைவன் மீதுள்ள நம்பிக்கையை இழக்கிறான். இது இப்படியே போனால் ஆதிக்காலம் மட்டுமல்ல, மீதிக்காலமும் சூனியமாக்கப்பட்டுவிடுமோ? என மனிதன் அஞ்சினான். இறைவன் மனிதனுடன் கொண்ட உறவைப் புதுப்பிக்க இறைவனே மனிதனாகப் ப+மிக்கு வரப் புதிய வழித்தடம் தேடினார். இதனால் மரியாள் என்ற மகளைத் தேர்ந்தெடுத்தார்.
இந்த மரியாள் ஒரு கன்னிப்பெண். கணவனை அறியாதவள். சூசை என்பவருக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டவள். அவளைக் கடவுள் தன் மகனைச் சுமக்கும் கருவறையைத் தாங்கும் ஒரு பெண்ணாக இறைவன் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் முரட்டு மக்களிடத்தில், கணவனை அறியாது, கைக்குழந்தையை ஏற்கும் தாய், கல்லால் எறியப்பட்டு கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம். தெளிவாகத் தெரிந்த அந்த இளம்பெண் துணிவுடன் ஏற்கிறார். ஒரு புயலைத் தன் கருவறையில் தாங்கி, புதிய விடியலுக்காய்ப் போராட அந்தப் பூ தயாராகிவிட்டது. தடைகளைத் தாண்டிப் பயணத்தைத் தொடரத் துணிந்தாள்.
பயணம் தொடர்ந்தது. சோதனைகள் ஒன்றா?.. இரண்டா?.. அத்தனையும் துணிவுடன் ஏற்கிறாள், தடைகளைத் தாண்டுகிறாள். பயணத்தைத் தொடர்கிறாள். மணஓப்பந்தம் செய்யப்பட்ட சூசை சந்தேகப்படுகிறார். இறைவனின் தூதர் கனவில் தோன்றி, சந்தேகத்தைத் தீர்க்கிறார். இருவரும் திருமணப் பந்தத்தில் இணைகிறார்கள். காலதேவன் தன் பயணத்தைத் தொடர்கிறான். மரியாள் நிறைமாதக் கர்ப்;பினியாகிறாள். அப்போது ஒவ்வொருவரையும் தங்களது சொந்த ஊரில் பெயரினைப் பதிவுசெய்ய அரசன் கட்டளை இடுகிறான். அதன் பெயரில் சூசை, மரியாளை அழைத்துக்கொண்டு தன்சொந்த ஊருக்கு மரியாளோடு  செல்கிறார். அப்போது மரியாளுக்குப் பிரசவ வலி நெருங்குகிறது. சூசை பதறுகிறார். ஓவ்வொரு வீட்டிலும் படி ஏறுகிறார். கதவைத் தட்டுகிறார். உள்ளமும், கதவும் ஒருங்கே திறக்க மறுக்கிறது.  “ இடமில்லை” என்ற வார்த்தை மட்டுமே இவர்கள் காதுகளில் விழுகிறது. நிறைமாத கர்ப்;பிணி. பனிவிழும் இரவு நேரம். குளிர்ந்த காற்றால் குலை நடுங்குகிறது. எங்கு செல்வது? யாரிடம் உதவி கேட்பது? இறைவனுக்கே இந்த நிலை என்றால், மனித உயிர்களுக்கு இங்கு என்ன விலை?
கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் தலை சுற்றுகிறது. வேதனை நெஞ்சில் வெடிக்கிறது. உள்ளம் குமுறுகிறது. கோபம் பொங்குகிறது. மௌனக் கலாச்சாரம் வெடிக்கத் துடிக்கிறது. மனித நேயக் கலாச்சாரம் விழிபிதுங்கி நிற்கிறது. இப்போது என்ன செய்வது? யாரிடம் இந்தக் கேள்விக்கு பதில் இருக்கிறது? விடைகாணாத பல கேள்விகளுக்கு விடை காண வந்த விடியல், இப்போது வீதியில்  எறியப்பட்டுள்ளது.
“ வரலற்றுப் பின்னணியில் மானுடத்திற்கு நிகரான பிறவி
இல்லை  மனிதனுக்கு இணையான தெய்வம் இல்லை ”
என்பதை உணர்ந்த இறைவன், மனிதநேயத்தைக் காட்ட, காக்க உருவில்லாத் தெய்வம,; பூமிக்கு வர விரும்பினார். ஆனால் இந்த பூமி அவரை ஏற்க மறுக்கிறது. நல்லதொரு வீணையின் நாதமாகப் பூமிக்கு வருகின்ற இறைவனின் கீதத்தைக் காதுகளில் கேட்க மறுக்கும் செவிட்டு மக்களாக அல்லவா இவர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். கடைசிவரை அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியில் ஆடுமேய்க்கும்  இடையர்கள் அடைக்கலம் தருகிறார்கள். ஆனால் ஆண்டவனுக்கு அங்காவது இடம் கிடைத்ததே!…. இங்குள்ள பலகோடி மக்களுக்கு மண்ணிலே பிறப்பதற்கு உரிமையில்லை. காரணம் அவர்கள் பெண்குழந்தைகளாய் கருவானதால், பூமியில் அவர்களது முகவரியே இல்லாமல் போய்விடுகிறது. இன்னும் சில மனிதர்கள் கைபட்டால், கால்பட்டால், நிழல்பட்டால் நீரும், காற்றும், மண்ணும் தீட்டுப்பட்டுவிடும் எனத் தீண்டத்தகாதவர்களாகக் கருதி, தீயைப் போல வார்த்தைகளால் பொசுக்கி விடுகிறார்கள். இந்த அவலமும், அசிங்கமும் இந்தப் பூமியில் இன்று வரை இருக்கத்தானே செய்கிறது.
குழந்தைகளைத் தெய்வங்கள் என்றார்கள். இந்தக் குழந்தைத் தெய்வங்களுக்கு கோவில்கள் தரவேண்டாம். ஆனால் தங்குவதற்கு ஒரு குடிசைகள் கூடத்தராமல், இன்று தெருஓரங்களிலும், குப்பைத்தொட்டிகளிலும், வேலிப் புதர்களிலுமே வீசப்பட்டுவிடுகிறார்களே! இந்த அவலத்தை எங்கு போய்ச் சொல்வது.?  ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆட்டப்படுகிறார்கள்…. கரும்பை பிழியலாம்! அரும்பைப் பிழியலாமா?
தாய்மொழி மறக்கும் நிலை, ஆங்கிலத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கும் மாயவலை, ஆற்று மணலில் கொள்ளை. சோற்றுக்கு வழியில்லை, மீன் பிடிக்கக் கடல் இல்லை.  மீறிப்போனால் சிங்களன் தொல்லை, பிறமொழிக்காரர்களின் வியாபாரக் கொள்ளை, ஆபத்தான நிலையில் பல்வேறு விச வாயுக்களைக் கக்கும் தொழிற்சாலைகளின் தொல்லை, வீடு, நிலம்ஆக்கிரமிப்பு, கந்துவட்டிகளில் கசங்கி திணறும் கயமைத்தனம். இத்தனை கொடுமைத்தளையிலிருந்தும் எப்படி விடுபடுவது? எப்போது விடுதலை பெறுவது?
“தமிழுக்கு அமுதென்று பெயர்” என்றார்கள்;. ஆனால் இன்று “தமிழனுக்கு     அகதி” என்றல்லவா பெயர் இருக்கிறது?
இந்த நிலை மாறவேண்டும். நல்ல நிலை பிறக்க வேண்டும். பொம்மைக்குப் புடவை கட்டி அழகுபார்க்கும் இம்மானிடச் சமூகம், நிஜ மனிதனை நிர்வாணமாக்கி வீதியில் போட்டுவிடுகிறதே! இந்த அவல நிலையிலிருந்து விடுபடவேண்டும். உலக நிர்வாணத்தை முடிந்தவரை மறைக்கத், தன்மானத்தைக் காக்க ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமையும் உண்டு. கடமையும் உண்டு என்பதை உணர வேண்டும்.
“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம் ”
அடுத்தவரை அன்பு செய்வேம். அயலானை நேசிப்போம். அகதிகளைப் பேணிக்காப்போம், அநாதைகளை அள்ளி அணைப்போம். எல்லோருக்காகவும், எப்போதும், இல்லமும், உள்ளமும், திறந்தே இருக்கட்டும். அப்போது ஆண்டவர் அங்கே பிறப்பார். அதுதானே உண்மையான கிறிஸ்து பிறப்பு. அத்தகைய பிறப்பினைக் கொண்டாட கரம் கோர்ப்போம். பிறரை உயர்த்த கரம் கொடுப்போம். பிறரின் சிரிப்பில் நமது மகிழ்வை சேகரித்துக் கொள்வோம். தேவையிருப்பவர்களுக்கு முடிந்தளவு பகிர்ந்து கொடுப்போம். இந்நாளும், இனி வரும்நாளும், எல்லோரும் இன்புற்றிருக்க, அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சகோ. இரா ஜோ. அன்டனி
புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மில்லர்புரம், தூத்துக்குடி – 8

ARCHIVES