சிவப்பு வானில்

“சிவப்பு வானில் கசிந்த இரத்தம்…”

         இது எனது நீண்டநாள் தவம். பயணிக்கக் கருதிய பக்குவப்பட்ட பாதை, வருடம் ஒருமுறை நம் வாசலுக்கு வந்து போகும் வசந்தம் நமை வாழ்ந்து காட்டச் சொல்லுகின்ற ஒரு ஏகாந்தம். தவக்காலம், நம் வாழ்வை வளமாக்க இறைவன் கொடுக்கின்ற இன்னொரு வாய்ப்பு. சட்டை அழுக்காகிவிட்டால் சலவை செய்து கொள்ளலாம். உள்ளம் அழுக்காகிவிட்டால்? வாகனத்தில் பழுது ஏற்பட்டால் சரிசெய்து கொள்ளலாம். வாழ்க்கையில் பழுது ஏற்பட்டால்? நெஞ்சை உழுது பார்த்துத்தான் ஆக வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனையோ பாதைகள்! எப்படி எல்லாமோ பயணங்கள். ஆனால் நெஞ்சை உருக்கும் ஒரு நிதர்சனப் பயணம் இந்தக் கல்வாரிப் பயணம்.
எத்தனையோ கருத்துகளைச் சுமந்து எண்ணற்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால் எனக்குள் உதித்த இந்த உதயம், இயேசு தோளில் சுமந்த சிலுவைச் சுமையைவிட மனதில் சுமந்த மற்ற சுமைகளை வார்த்தையில் வடித்து எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற இன்னொரு முயற்சி.
இயேசு தன் உணர்வுகளை ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படுத்துகிற காட்சியாக இதனை பதிவு செய்து இருக்கின்றேன். இதனை உரக்கப்படிப்பதைவிட உணர்வோடு வாசியுங்கள். பெரிய வெள்ளியன்று ஒவ்வொரு ஆலயத்திலும் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதத் சித்திரத்தை வடித்திருக்கிறேன்.

இதில் பலரது நினைவுத் துளிகள் நெஞ்சம் நிறைந்த வார்த்தைகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. இந்த பாதையில் பல்வேறு பாகங்களையும் பயணங்களையும் பக்குவப்படுத்தி தன்னுடைய நேர்த்தியான கருத்துக்களால் நினைவலைகளை செதுக்கி செப்பனிட்டு சீராக அமைத்துத் தந்த அருமைச்சகோதரர் சகோ. J. கஸ்மீர் அவர்களையும், சிலுவைப் பாதை, பாஸ்கா சிறப்பு நாட்கள் ஆகியவற்றின் சிறப்புகளையும் செதுக்கி வைத்த சகோ. ஐ. ஸ்டீபன், ஒவ்வொரு பாடுகளுக்கும் உரிய ஜெபங்களையும், இறுதிப் பாடலையும் வடிவமைத்துக் கொடுத்த எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய புனித சூசையப்பர் ஆரம்பப்பள்ளி ஆசிரியைகளையும் நெஞ்சார்ந்த நன்றியோடு நினைத்துப் பார்க்கின்றேன்.

இதற்கு ஓவியம் தீட்டிய ஓவிய ஆசிரியர் J ஷாம் அவர்களையும், கணிப்பதிவு செய்த A. முஹம்மது நிஸார் அவர்களையும் நெஞ்சார்ந்த நன்றியோடு நினைவு கூர்கின்றேன். எங்களது மொத்த உழைப்பின் வெளிப்பாடாக இந்தக் “கல்வாரியில் கேட்ட காலடி ஓசை யை வடித்து இருக்கிறேன். வரிகளை வாசியுங்கள், கருத்துகளை யோசியுங்கள் சமுதாயச் சவால்களுக்கும், சாடல்களுக்கும் பலமுறை தன்னை எழுதிக் கொண்ட எங்களது பேனாக்கள் முதன் முறையாக இயேசுவின் இரத்தத்துளிகளுக்காக கண்ணீர் சிந்தியிருக்கிறது. இதன் ஒவ்வொரு துளிகளும் எத்தனையோ உள்ளங்களிலும், இல்லங்களிலும் பட்டுத் தெறிக்கும் என்ற நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்.