அக்னிக் குளியல்…

- விமர்சனம்

பெரிய விருந்தொன்றில் உணவருந்தி விட்டு வரும்போது எதிரில் வருகிற எவரும் நம்மைப் பார்த்து கொஞ்சமும் யோசிக்காமல் வாயில் ஏதோ வெள்ளையாய் இருக்கிறது. துடைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அதனைத் துடைத்து விட்டாலும் உங்கள் உள்ளத்தில் எழும் எண்ணம் என்ன? அதனை நீங்கள் எடுத்துக் கொள்ளும் விதம் என்ன? என்பதுதான் இன்று ஆராய வேண்டிய ஒன்று.

இதே போல் முகத்தில் ஏதோ ஒரு இடத்தில் பவுடர் தெரிந்தாலும் அல்லது நம் சட்டையில் ஒரு எறும்பு நின்றாலும் உடனே நம் அருகில் இருப்பவர்கள் அதனை சரிசெய்யச் சொல்வார்கள் அல்லது அவர்களே சரி செய்வார்கள். காரணம் நமக்குத் தெரியாத ஒன்று நம்மிடம் இருக்கக் கூடாத ஒன்று பிறருக்குத் தெரிந்து நாம் களங்கப்படாமல் இருக்க நம்மீது அக்கறை கொண்ட ஒருவர் நாம் என்ன நினைத்துக் கொள்வோமோ என எதையும் சிந்திக்காமல் நம்மை சரி செய்ய நினைக்கிறார் அல்லவா? இதுதான் இன்றைய விமர்சனங்கள் ஆகும்.

இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நம்மீது எழும் விமர்சனங்களைச் சரியாக எடுத்துக் கொள்ளாமல் அவன் எப்படிச் சொல்லலாம்? என்று ஆதங்கப்படுகிறோம். அவன் வயசு என்ன? என் வயசு என்ன? என அசிங்கப்படுத்துகிறோம். சில நேரங்களில் நேரில் சென்று சண்டையிடுகிறோம். மூக்கில் ஏதோ கருப்பாய் இருக்கிறது. அதனை உங்களுக்குப் பயந்து யாரும் கூறவில்லை. நீங்கள் அதே முகத்தோடு பகல் முழுவதும் பலரைச் சந்தித்துவிட்டு வந்து கண்ணாடியைப் பார்த்தால்! என்ன நினைப்பீர்கள்? அதை விடுங்கள் உங்கள் பேண்டை இன் பண்ணினீர்கள் ஆனால் ஜிப்பை சரி செய்யவில்லை. காலம் கடந்து பார்க்கும் போது என்ன தோன்றும்? யார் யார் பார்த்திருப்பார்? என்ன நினைத்திருப்பார்கள்? அதனை நினைக்கும்போதே அசிங்கமாக இருக்குமல்லவா?

இதிலிருந்து விடுபடவும், இதிலிருந்து தப்பிக்கவும் நமக்கு உதவி செய்வதுதான் பிறரது விமர்சனம். அதனை வரவேறுங்கள். பல அவமானங்களில் இருந்து உங்களைக் காப்பாற்றும். உங்களைப் பற்றி பல மொட்டைக் கடிதங்கள் கூட வரும். அதில் உண்மை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் உதறித்தள்ளி விடுங்கள், கொதிக்க வேண்டாம். பலர் பார்க்க குதிக்க வேண்டாம். மற்றவர் கண்ணில் பட்டால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்று மனம் கலங்க வேண்டாம். கடவுளே வந்து சொன்னாலும் நம்புகிறவர்கள்தான் நம்புவார்கள். உனக்கு வேண்டாதவர்கள் மட்டுமே விமர்சனம் பண்ணுவார்கள். விமர்சனம் பண்ணுகிறவர்களை வேண்டாதவர்களாக்கிக் கொள்ளுங்கள்.

விமர்சனம் என்பது எல்லோரும் பண்ணலாம் ஆனால் எல்லாவற்றையும் பண்ணக் கூடாது. அது தேவையா? நன்மையா? பிறரை வளர்த்தெடுக்குமா? என்பதனை அறிந்தே விமர்சனம் செய்ய வேண்டும். காதில் கேட்டதை எல்லாம் உடனே கக்கிவிட வேண்டும் என்று நினைத்தால் நாற்றம் தான் வரும். விமர்சனம் பண்ணுமுன் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பதனை எண்ணிக் கொள்ளுங்கள். தீர விசாரிப்பதே மெய் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

விமர்சனம் என்பது பொருள் அல்ல. பிறர் மூலம் கொடுத்து விடுவதற்கு. எதனைச் சொன்னாலும் யாரைச் சொன்னாலும், நீங்களே நேரில் சொல்லுங்கள். பிறர் மூலம் அந்தப் பேச்சுப் போனால் அவர்கள் கூடக் குறையச் சொல்லி இல்லாததையும் சொல்லி உங்கள் பெயரை இழுத்து விடுவார்கள். உங்கள் உறவு பாதிக்கும் எதைச் சொன்னாலும் நெஞ்சுக்கு நேராகச் சொல்லுங்கள். அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ? எனத் தயங்காதீர்கள். தயங்கினால் வெளியில் கூறாதீர்கள் அது தவறான புரிதல்களை ஏற்படுத்தும்.

விமர்சனம் என்ற பெயரில் நெருப்பை உமிழ்ந்து விடாதீர்கள். அது வெறுப்பை சம்பாதிக்கும். விமர்சனம் என்ற பெயரில் பிறர் வளர்ச்சிக்கு தடையாய் இருந்து விடாதீர்கள். போட்டியால், பொறாமையால் அடுத்தவர்களை அழிக்க அவர்களைப் பற்றி அசிங்கமாய் பேசி விடாதீர்கள். அதற்குப் பதில் நீங்கள் கருவிலே கலைந்து போயிருக்கலாம். கவனமாய் இருங்கள்.!

அவர் உடை சரியில்லை, அவர் நடை சரியில்லை, அவர் பேச்சு சரியில்லை என்று நீங்கள் நினைத்தது போல அவர் இல்லை என்பதற்காக விமர்சனம் செய்யாதீர்கள். அவர் விருப்பப்படி அவர் வாழ அனுமதியுங்கள். ஆண், பெண் உறவை அசிங்கப்படுத்திப் பேசாதீர்கள். நீங்கள் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். உங்கள் இனத்தை நீங்களே அசிங்கப்படுத்துவதை விட கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் விழுந்துவிடுங்கள். இடுப்புக்குக் கீழே எப்போதும் சிந்திக்கின்ற உங்கள புத்தி இளைய தலைமுறைக்குத் தெரியாமல் போகட்டும்.

பிறரது தவறான விமர்சனத்தினால் எத்தனை உயிர்கள் இந்த பூமியை விட்டுப் போயிருக்கின்றன. நடிகைகள் தானே எனக் கேவலமாகப் பேசுகிறவர்கள் எத்தனை பேர். அதனால் எத்தனை நடிகைகள் மரணம். பிறர் விமர்சனத்தினால் பாதிக்கப்பட்டு வடித்த கண்ணீர் இன்னொரு இந்துமகா சமுத்திரத்தையே உருவாக்கிவிடும். எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. விமர்சனம் என்ற பெயரில் நெஞ்சில் நஞ்சைக் கக்குகிறவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் ஆனால் அதனைக் கேட்கிறவர்கள் இறந்து விடுகிறார்களே! அதெப்படி?

ஒன்றை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள். பிறர் விமர்சனத்தினால் வீழ்ந்து விடாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள்? என்ற எண்ணத்தை குப்பையில் தூக்கி எறியுங்கள். உங்களை மட்டம் தட்டவும், உங்கள் வளர்ச்சிளைத் தடுக்கவும் உங்கள் உறவுகளைக் கெடுக்கவும், உங்களுக்கு மனக்குழப்பத்தைக் கொடுக்கவும், எதிர்க்க இயலாத கோழைகள். அப்பன் பெயர் தெரியாத, அட்ரஸ் இல்லாத புறம்போக்குகள் மறைமுகமாக இருந்து தொடுக்கும் மர்மப்போரே விமர்சனம் எனப்படும். இந்தக் கோழைகளிடம் வீழும் அளவிற்கு உங்களைக் கோழைகளாக உருவாக்கி விடாதீர்கள். ஆடம்பர வாழ்க்கையை யாரும் எப்போதாவது வாழ்ந்து விடலாம். ஆனால் அந்தந்த வயதில் வாழ வேண்டிய வாழ்க்கையை இந்த எச்சிக்கலைகளுக்காக இழந்து விடாதீர்கள். அவர்கள் எதனை பரப்பி விடுகிறார்களோ அதில் வீழ்ந்து விடாமல் அவர்கள் வயிறு எறியும்படி பெருமையாக வாழுங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை. வயிறு எறிந்து பேசுகிறவர்கள் எல்லாம் நம்ம…….க்குச் சமம் என்று போய்க் கொண்டே இருங்கள் எதற்கும் கலங்காத நதியைப் போல….

“வார்த்தைகள் பிறரை
வளர்ப்பதற்காக!
அழிப்பதற்கல்ல”